திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 201- 300

பாடல் எண்:- 201
ஊனிழந்த வுடலுக்கு ளுயிரின் வாறு
முற்றகுல தத்துவமுந் தொண்ணூற் றாறுந்
தானெடுத்த வுறவின்முறை நின்ற நேர்மை
தனித்தனியே பிரித்துவகை சபையிற் சொன்னேன்
தேனருவி பாயும்திரு நாட்டுக் குள்ளே
சேர்ந்தெழுந்த கருவியெல்லாஞ் சேர்க்கையாக
நானெடுத்த வுடலுமிந்தப் படியே யாச்சு
நயந்தருளு மாண்டகுல மறிகிலேனே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 202
வறுமை தவிர்ந்துமிக வாழ்நாடி வீதியில்யான்
கர்ம வினையாலும் கட்டிவிட்டேன் கருவீடாய்ப்
பெருமையுட னேமகிழ்ந்து பேசுறாய் வளர்ந்ததனால்
அருமைகுலை யாமலே யம்பிகையைப் போற்றினனே. 

பாடல் எண்:- 203
திரைபோட்டு ஆடுகின்ற தில்லைவனச் சோலையினான்
கரைபோட் டணைகோலி காயா புரிநாட்டில்
உரைகேட் டகன்றவெளி யுற்பனமாந் தற்பொருள்கண்
டடைவீட்டுக் குள்ளிருந்து வம்பிகையைப் போற்றினனே. 

பாடல் எண்:- 204
நங்கைசங்கை யில்லாத ஞானதிரு வீட்டிலும்யான்
கெங்கைக் கரையிருந்து கேளிக்கை யாடையிலே
அந்தத் திருக்கோயி லம்பிகைப்பெண் மாதருளால்
பங்கம் வராமலுமே பதியிற் குடியிருந்தேன். 

பாடல் எண்:- 205
சித்திரதனுக் கோடியெனுஞ் செங்கநதி கெங்கைவளர்
பத்திரமா யானிருந்தே பங்கமது வாராமல்
நித்திரையுஞ் சொப்பனமு நேர்மைகடந் தேகவெளி
சத்தியெனு மம்பிகைப்பெண் தாள்பணிந்து போற்றினனே. 

பாடல் எண்:- 206
ஆராய்ப் பெருநதி யங்குவளர் கெங்கையில்வாழ்ந்
தோரா யிரக்கமலத் தொன்றிருநா லுந்தியின்கீழ்
மாறாத ருந்தவஞ்செய் மாமதுர வம்பிகையை
நேராய்ப் பணிந்துவருள் நின்றுவரம் பெற்றேனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 207
விரிவாந் துருவெளி வெய்யோ னெடுங்குகின்ற
கருவாம் பெருங்குழியில் கால்வளர்ந்தே- னறிவாக
சிரசுரூப மான தேனொழுகு மண்டபத்தில்
வரசுரூப மாய்வளர்ந்து வந்தேன். 

பாடல் எண்:- 208
நூல்வாங்கி நின்றதொரு நொய்ய திருவீட்டில்
கால்வாங்கி வன்னிக் கலந்தே- மேல்வாங்கி
அன்னைசிறு வம்பிகையி னாத்தா ளருட்கமலம்
என்னையழைத் தமுதீந் தாள். 

( கலித்துறை )
பாடல் எண்:- 209
வாங்கித் திரைகொண்டு வம்பிகை பாத மலரடியில்
தேங்கித் தெளிந்து சிவநாத விந்து சிறுவரைக்குள்
ஓங்கி வளர்ந்து வொருகொழுந் தோடி யுலகமெல்லாம்
தாங்கிப் படிந்து சதுர்மேற் குடியிற் றவமிருந்தே. 

பாடல் எண்:- 210
அழியாத மூலக் கருவீடு தன்னி லமைத்தவிந்து
செழிவான நாத முறைந்திடும் போது சிவமதற்குக்
கழியாத வெட்டுங் கழிந்திடி னாலுங் கருத்தினில்தான்
ஒழியா ததுநின்று வயதே யதற்குவுரை செய்வேனே. 

பாடல் எண்:- 211
மருவிப் பிறந்த வலங்கார வீதி மாளிகையில்
உருகித் தெளிந்து வொருதுளி பாய்ந்த வுடலுயிராய்ப்
பெருகித்ததும்பி மயிர்ப்பா லம்வைகைப் பெருங்கரைமேல்
கருவிப்பலகுலத்தாலேயுடலொன்று கண்டுகொண்டே. 

( விருத்தம் )
பாடல் எண்:- 212
உண்மையெனுங் கருவிகள்தாம் தொண்ணூற்றாறு
முடலெடுத்த நேர்மையெல்லா முறையாய்ச் சொன்னேன்
நன்மையுள்ள நாதவிந்து கூடும் போது
நல்வினையுந் தீவினையு மமைத்த வாறு
தண்மையுள்ள ஜெகச்சோதி வகுத்த வீட்டில்
சமைந்திருந்த மைந்தருக்கு வயதுஞ் சொல்ல
வண்மையெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
வசனித்தே னறிந்தமட்டும் வசனித் தேனே. 

பாடல் எண்:- 213
ஊனெடுத்து வுலகுக்கு ளுதித்த பால
னொருமூன்று திங்களினில் மடிந்த வாறும்
கூனுடனே குருடுசெவி டான வாறும்
குறைந்துகைகால் சப்பாணி யான வாறும்
வானெடுத்து வாறுதிங்கள் மடிந்த வாறும்
வளர்பத்துத் திங்கள்சென்று மாண்ட வாறும்
தானெடுத்துப் புவிதனிலே பிறந்த வாறுஞ்
சவமாகி நின்றதுவுஞ் சாற்று வேனே. 

பாடல் எண்:- 214
பத்துவய தானபின்பு இறந்த வாறும்
பருவத்தில் பதினைந்தில் மடிந்த வாறும்
மற்றுமொரு விருபதிலே மாய்ந்த வாறு
மறுவிருபத் தஞ்சதிலே மடிந்த வாறும்
சித்ததித முப்பதிலே செடமு மாய்ந்து
செப்பிடில்முப் பதுவுமஞ்சில் செத்த வாறும்
உற்றதொரு நாற்பதிலே யுயிர்போ மாண்டு
வுயர்கின்ற வைம்பதிலே யுடல்போ மாண்டே. 

பாடல் எண்:- 215
அன்னையெனுங் கருவதனி லுதித்துப் பாரி
லவதரித்து ஐந்துபத்தி லுறந்த வாறும்
பின்னமா யறுபதில் மடிந்த வாறு
மிகவறுபத் தஞ்சதிலே மாய்ந்த வாறும்
இன்னவித மெழுபதிலு மிறந்த வாறு
மெழுபத்தஞ் சதுவுமதில் மாண்ட வாறும்
சொன்னவித மென்பதிலுஞ் சொக்கும் வாறுந்
தொண்ணூறுஞ் சென்றபின்பு சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 216
பூவாகிப் பிஞ்சதிலே மடிந்த வாறும்
பூத்தமலர் காயாமல் போன வாறும்
மாவாகிக் கருக்குழியில் கரைந்த வாறு
மரக்கொடியோ டேமடிந்து காய்ந்த வாறும்
மேவிநின்று விரைப்பழுதால் போன வாறும்
விரைத்தவிரையை முளைத்துவிளை வித்த வாறும்
பாவாகி யச்சதிலே பூட்டி நெய்து
படைத்தகரு விபரமதைப் பகர்வே னாண்டே. 

ஆயுர்விர்த்தி
( தரு )
வயதுசொல்லுகிறேன் நூறாண்டுக்கும்
வயதுசொல்லுகிறேன்- வயது. 

பாடல் எண்:- 217
வயதுசொல்வேனினி நாதமும்விந்துவு
மாதர்கருக்குழி வீதிவிட்டேகியான்
துயரமைத்துச்சுழி வீட்டுவாசலில்
துய்யசெகப்புடன்வெள்ளையுங் கூடிப்பின்
உழுதுபயிரிடு மம்பரவீதிவிட்டோங்கிச்
சுழிமுனைத்தாங்கி மேடேறிகாண்
அழுதாத்துமத்தின் கருவிபின்
பாசமறிந்திடுபூருவமத் தலமாறியே- வயது. 

பாடல் எண்:- 218
நூற்றொருமாவினில் வேற்றுமையில்லாமல்
வீற்றிருக்கும் விந்துநாதமுங்கூடினால்
சாஸ்திரவேத சடாக்ஷரமந்திரந்
தப்பாதுவயது நூறுகாணாண்டையே
சித்திரமாளிகையில்பத்திப்
பிராணவாய்வுவிந்துடனாதம் விளங்கியேமேவிடில்
சுத்தயான்யோகி சுகாதீதஞானிக
ளத்தன்செயல்நூற்றைம்பது வயதுகாண்- வயது. 

பாடல் எண்:- 219
ஆராய்ப்பிருதிவுமோடிக் குறையாம
லங்குலம்பன்னிரண்டாகவும் பாய்ந்திடில்
நேராகுமெண்ணரை நாழிகையோடிடில்
நிர்ணயம்வயது நூறாண்டையதப்பாது
பாரறியும்பிருதிவியுமப்புவில் பாய்ந்திடிலும்
விந்துநாத முங்கூடிடில்
சீரறியுங்கிரியைவாசிவசமதாய்ச்
சித்திபெறும்வயது நூற்றைம்பதாண்டையே- வயது. 

பாடல் எண்:- 220
அப்புவில்வாய்வது மசைகின்றபோதினி
லங்குலம்பதினொன்றாகவும் பாய்ந்திடில்
மெய்ப்பாகவொண்ணேகால் நாழிகையோடிடில்
மேதினியோர்கள் வயதெண்பதாண்டையே
ஒப்பிலாவப்புவிலோடியபானு
மோங்கிப்பாய்ந்ததுவோ ராறுமீராறதாய்
இப்படிநா தவிந்தேகியிளகிடி
லிதுவயதெழுபதிருப்பதுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 221
கூறியவாய்வுபத்தங்குலம் பாய்ந்து
குறைந்துநாலாங்குலமோடிக் கழிந்திடில்
மாறியமைந்தர்க்கு வயதெனுங்கொஞ்சம்
வகுத்தேன் புவியிலுரைத்தேன்கா னாண்டையே
தேறியபானனுதானனிடத்திற் சிநேகஞ்செய்து
எட்டங்குலம் பாய்ந்திடில்
சீறுமஞ்சங்குலமோடிக் கழிந்தபின்
செய்வினைதந்தையால்பை வினையாட்டையே- வயது. 

பாடல் எண்:- 222
தேய்வினில்வாய்வுவசைகின்ற போதினில்
சேர்ந்தொருநாழி பத்தங்குலமோடிடில்
மெய்யுடல்விந்து நாதமுங்கூடினால்
ஆணல்லவயது ஆறுபத்தாண்டையே
பாயும்பிராணன் பானனுஞ்சேர்ந்திடில்
பரவியேவிந்துவு நாதந்தொடங்கிடில்
மாயுங்கருவி வெவ்வேறதுவாகிப்பின்
மைந்தர்க்குப்பாதி மரணம்வந்தெய்துமே- வயது. 

பாடல் எண்:- 223
சொல்லும்பத்தங்குலமோடி யெட்டங்குலந்
தொக்கிச்சுழித்துச் சிதறிக்கடிந்திடில்
மெல்லின்கெர்ப்பந் தரித்திடும்போ தினில்
விரைந்துவயது குறைந்திடுமாண்டையே
கொல்லல்செய்பிராணவாயு மெட்டங்குலம்
கூறிரண்டங்குலந் தூறியேபாய்ந்திடில்
வல்லியின்கெர்ப்பம் வயிறிடிகண்டுமயங்கி
வயதுதியங்கிடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 224
வாய்வினில்வாய்வு அசைந்துறவாடிப்பின்
நாழிகைமுக்காலொன்பதங்குலம் பாய்ந்திடில்
தாயினீர்நாதமும்விந்துந் தரித்திடில்
தப்பாதுவயதுமுப்பாதா மாண்டையே
பாய்ந்திடும்பிராணன் வியானனுங்கூடிப்பின்
பாங்காய்நாதவிந்திலாறு முண்டங்குலம்
தாழ்ந்துநெட்டிட்டுக் கருவிலமைப்பதுந்தான்
வயதுமுப்பத்தஞ்செனுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 225
ஆகாசம் வாய்வுதசைந்துறவாகிடி
லரைநாழிவிந்துரெண்டங்குலம் பாய்ந்திடில்
சாகாதுநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சார்வாகுவயது முப்பத்தெட்டாண்டையே
வேதமதாகியகூர்மன் கிரிகரன்
விந்துநாதத்தினில் மிகுத்தெழுவங்குலம்
வாகமதாகியரை நாழிகைபின்பு
வளர்ந்துபாய்ந்திடில் வயதுகாணாற்பதே- வயது. 

பாடல் எண்:- 226
அக்கினியாகிய சுழியின்முனைதன்னி
லடர்ந்துவாய்வு அரையங்குலமோடிடில்
சிக்கியநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சிதறிக்கருவிலுறைந்திடு மாண்டையே
தக்கபுகழுஞ் சுழிமுனைதன்னில்
தயவாகவாய்வு மிணங்கியபோதினில்
பக்கஞ் சிதறியேபாய்ந்திடிலும்பின்பு
பாகமாய் விந்துகரைந்திடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 227
ஓடியேவாய்வதுடனே விரைந்திடி
லோமென்ற நாதமும்விந்துந்தரித்திடில்
கூடிய திங்களொண்ணரையதுக்குள்
குழவிகரைந்து வெளியாகுமாண்டையே
நாடியபக்க நால்வாயுவுஞ்சேர்ந்திடில்
நாதமும்விந்து நயந்ததுபோகமாய்
மோடியேநின்று மிகவுந்தரித்திடில்
விழலாய்க்கரைந்து விழுந்திடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 228
திக்கெல்லாம்வாயுவு சிதறிநடக்கையில்
செப்பரிய நாதம்விந்துந்தரித்திடில்
கக்கல்திருவாயுவு திங்கள்மூன்றுக்குள்ளே
கருவிகரைந்து வெளியாகுமாண்டையே
சக்கரம்போலுஞ் சுழன்றிடில்வாயுவுந்
தானிறைந்தோடிடில்நா தவிந்தாவதும்
பக்கமுதைந்துகெர்ப்பங் கரைந்தங்ஙளே
பார்க்கத்திங்கள் நாளில்மார்க்கமீதாண்டையே- வயது. 

பாடல் எண்:- 229
உந்தியில்வாயுவுச ந்துநெட்டிட்டிடி
லோகங்கார நாதமும்விந்துந்தரித்திடில்
சந்தேகமில்லைதிங்களொன் றில்கெர்ப்பமுங்
கண்ணீராய்க்கரைந்து வெண்ணீராகுமாண்டையே
கூறியவாயுவுங்குறுக்கே சுழன்றிடில்
கொள்கையநாதமும்விந்து முதித்திடில்
மாறிடுமைந்தனீரொன் பதுதிங்களில்
மாளப்பிறந்தினிமாய்ந்திடு மாண்டையே- வயது. 

பாடல் எண்:- 230
தூறியகுண்டலி வட்டத்தினுள்ளே
சுருத்திடுவாயுவு முதித்திடும்போதினில்
வேறில்லைகெரப்பந் தரித்துப்பிறந்தபின்
மெய்யாய்த்திங்களொன்றுய்யவே மாண்டிடும்
தில்லைப்பதிதெனுமெல்லையில் வாயுவும்
செழித்து நடக்கையில்சேர்ந்துநாதவிந்து
வல்லமையாகத் தரித்துப்பிறந்தபின்
வருஷமீராண்டினில்மாண்டிடு மாண்டையே- வயது. 

பாடல் எண்:- 231
செல்வஆணும்பெண்ணுஞ் சேர்ந்துரதிகேளி
சித்திரலீலைசெயில் செயவிந்துநாதமும்
தொல்லைமைந்தன் பிறந்தல்லல்வயதொன்றில்
சொன்னேன்மடிந்திடில் சூதில்லையாண்டையே
வல்லமையாய்வந்து வாழ்பவித்தாகையால்
மாதர்மயல்கொண்டணு கிடாமல்மனம்
தொல்லைவாராதெனுந் திங்களோராண்டினில்
தோகையெனும் புணர்ந்தோர்களின்வல்லமை- வயது. 

பாடல் எண்:- 232
போதும்போதாதொருவாண்டு தசையெனும்
போகிபோகமிது பிசகாதிடில்
ஏதுவூழ்வினையாகமத்தோர் சொலு
மேதுவினைப்பயனேது பிணிவரா
மாதுபோகந்தசத்திங்களீ ரைஞ்சுதான்
வாததேகிவலுவாகு நூறாண்டுக்கும்
சாதுசத்தியகுணதாது வலுத்திடுந்
தந்தையிந்தமதிமைந்தன் பிறவியே- வயது. 

( விருத்தம் )
பாடல் எண்:- 233
மூலமதில் வாயுநின் றிலங்கும் போதில்
முதலான நாதவிந் துதித்த நேர்மை
ஆலவிடங்வ கடித்ததுபோ லாண்டு மூன்றி
லது வுயிர்போ மைந்தன்மடிந் தாக்கை வேறாம்
ஞானமுடன் வாய்வுசுழி சிதறி யோடில்
நாதவிந்து தித்துவய தஞ்சில் மாள்வான்
கோலமுடன் குண்டலியில் வாய்வு மோடில்
கொடியமைந்தன் வயதெட்டில் மாய்ந்த வாறே. 

பாடல் எண்:- 234
குறித்துநின்று வாய்வந்திக் கமலந் தன்னில்
குமுறியே நாதவிந்து தரித்த தாகில்
வறிதாகு மைந்தருக்கு வயதீ ரைஞ்சு
வாய்வுஞ்சுழி யடங்கில்வய திருபத் தைஞ்சு
பரிவட்டச் சுழிமுனைவிட்டு விட்டத்தில் வாய்வு
பாய்ந்திடவு நாதவிந்து பதினா றென்க
நெறியான வாயுவிதைப் பின்னிட் டேறில்
நிலைக்கின்ற நாதவிந் திருப தாண்டே. 

பாடல் எண்:- 235
கங்குல்பக லற்றவிடந் தன்னி லேதான்
கருதிமுனை யாடுகின்ற நாத விந்து
சங்கையில்லா ரதிபோகஞ் செய்யும் போது
தாதுவிந்து கருவூரி லுதித்த சங்கை
இங்கிதமா யிடைகலையி லுதிக்கப் பெண்ணா
மியல்வாகப் பிங்கலையி லுதிக்க ஆணும்
அங்கமதா யுபையத்தி லுதிக்க மேலும்
ஆணிரண்டு மொருவழியி லமைத்த வாறே. 

பாடல் எண்:- 236
எழுந்ததிரு மண்டபத்தி லிருந்த நாத
மியல்பான கருவூரி லுதிக்கும் போதில்
கொழுந்துமதி யிடைகலையில் பெண்ணே யாகுங்
குறைவில்லாப் பிங்கலையி லாணே யாகும்
வழிந்தெழுந்த விருகலையி லுதித்த தானால்
வசனித்தோம் பெண்ணுடனே யானே யாகும்
செழுத்தெழுந்த சாதிவகை யிரண்டுஞ் சொன்னேன்
ஜெகநாதர் கிருபையினால் தெளிந்த நூலே. 

பாடல் எண்:- 237
உதித்திலகு நாதவிந்து வட்டந் தன்னி
லுட்புகுந்த கருவூரி லுதித்த போது
துதித்திலகுஞ் சூரியனில் வாய்வு சேர்ந்தால்
சுழிகலையு மாறினதா லிரண்டு மாணாம்
விதித்திலகுஞ் சந்திரனில் வாய்வு சேர்ந்தால் 
விகற்பமில்லாப் பனிரெண்டு முதிக்க லாகும்
கதித்திலகும் பலபலவாய் நின்ற தானால்
காற்றதினா லாகாது ரவியு மாமே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 238
வேதமறைக் கெட்டாத மிகுந்தகரு வூர்வெளியாய்
நாதமுடன் வந்துதவு நடுவணையிற் சேர்கையிலே
சூதாகு நாடிசிறு துடித்தே வகுத்ததென்றால்
பேதமில்லை யாணாய் பிறமுகமும் பாராரே. 

பாடல் எண்:- 239
சக்கரநின் றாடுகின்ற சத்யமுயர் வீட்டிலொரு
சுக்கிலசு ரோணிதமுந் துய்யகரு வூர்தனிலே
அக்கரமாம் பிங்கலையு மதிர்ந்து துடித்ததென்றால்
திக்கினியப் பெண்ணால் திருட்டுமிகச் செய்வாரே. 

பாடல் எண்:- 240
நிலையாய்க் கலையோதி நின்றுதிரு வீட்டிலொரு
அலையாத நாதவிந்து அணிவரையிற் சேர்கையிலே
துலையா மிடதுகலை துரியமதி லேயிரண்டால்
விலைமதிக்கு மாணாகும் வெகுதிருட்டுச் செய்வாரே. 

( வெண்பா )
பாடல் எண்:- 241
சண்டவெளி தாரகையில் சச்சிதா நந்தமதில்
கொண்டலெனு நாதவிந்துகூடினால்- ஒன்றதுவாய்
முட்டிச் சுழிநாடி மூன்றுந் துடித்தக்கால்
வெட்டிமடிந் திடுவார் வீண். 

பாடல் எண்:- 242
அரியயனுங் காணாத ஆதிதிரு நாதவிந்து
மரியதனு வீட்டில் வருமோ- குறியாக
வளருஞ் சுழிமுனைதான் மாறித் துடிதுடித்தால்
கருவி லுயிர்விடுவார் காண். 

( கலித்துறை )
பாடல் எண்:- 243
மதியாத வீட்டி லதிபோகஞ் செய்து மனமகிழ்ந்து
பதியான நாதவிந்த துங்கூடி யேபயி ராகியபின்
சதியாக நின்று சுழிமுனை நாடித் தயங்கினதால்
கெதிவேறு மில்லை வெகுநோய்கள் கண்டு கிடந்தனரே. 

பாடல் எண்:- 244
கருத்தை யிருத்தி யனுராக மாய்கை கலக்கையிலே
மருத்தெழு நாதமும் விந்ததுங் கூடி மருவியபின்
அருந்தி டும்வாச லப்பாற் சுழிமுனை யசைந்த தென்றால்
தரித்திடு மைந்தர் சுரம்வந்து சூழ்ந்து தயங்குவரே. 

( விருத்தம் ) 
பாடல் எண்:- 245
வையமெனும் பதினாலு வுலகுக் குள்ளே
வகுத்தெழுந்த சாதிகுல மாண்பெண் ரெண்டும்
சையோகஞ் செய்கையிலே நாத விந்து
தரித்தகெர்ப்பந் தனக்குவய துரைத்தேன் கேளீர்
குய்யமெனும் வச்சிரப்பை தனில்வ ளர்ந்த
குழவியர்க்கே வயதுநின்ற குறியுஞ் சொன்னேன்
மெய்யெனவே யோடுகலை நாலி னாலே
விளைகின்ற பொருளையெல்லாம் விளம்பு வேனே. 

பாடல் எண்:- 246
சுழியெழுத்து மரியெழுத்து மிரண்டுங் கூடிச்
சுக்கிலமே சிவயமெனுஞ் சொல்லும் போது
சுழியெழுத்து நாலதனா லுலக மாச்சு
கனகஜெக சாலமெனுங் காட்டி வைத்து
வெளியெழுத்தாம் அவ்வதிலே உவ்வுங் கூட்டி
விளங்குகின்ற குண்டலியி லுதிக்கும் போது
குழியெழுத்தில் வளருகின்ற மைந்தர்க் கெல்லாங்
குருடுசெவி டானவகை கூறு வோமே. 

பாடல் எண்:- 247
தப்பாது கருவூரின் வெளியி லேயான்
தாண்டியுயர் நாதவிந்து திக்கும் போதில்
வெப்பதிக சப்பாணி நொண்டி யாக
விதிக்கின்ற கருவிலே விளங்கும் வாறும்
ஒப்பதித வொருகாலு மொருகை நொண்டி
யோங்கியொரு பிறமுடலு திக்கு நேர்மை
கற்பான கலைநாலில் வகுத்து நின்ற
கருத்தையுமே யின்னதென்று காட்டு வேனே. 

அவயவங் குறையுமுறை
( தரு )
வித்தில்வின்னமெய்துமாண்டே- இனி
வினைப்பயனருளுவேனாண்டே. 

பாடல் எண்:- 248
தோத்திரத்தோடுதொக்குந்துடராதே துண்டித்துப்போனால் அகம்
வேற்றுமையாயுடல்வேறு கூறாகிடுமாண்டே
மாத்தியசட்சுசிங்குவை யாக்கிராணமருவாதேபோனால்- அந்த
வெற்றிடுநாக்குமூக்குவிழியு குறையுங்காணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 249
சத்தபரிசரூபந்தானதுஞ் சாராமற்போனால்- மதி
வெத்திச்செவிடுடனே குருடும்விவேகமில்லா தாண்டே
புத்திர சமுங்கெந்தம்பொருந்தாமற்போய் விடுமாகில்- வாக்கு
எத்தனைசொன்னாலுஞ்செவியிசை வுபடாது ஊமையாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 250
தூக்கியரசமுங்கெந்தந் தொந்தித்திராதெனுமாகி- உடல்
நோக்கியகைகாலும்வாய்தொடித்துச் சப்பாணியாமாண்டே
வாக்கியபாதமுபாணிவதுவுபஸ்தஞ் சேராதென்னில்- லிங்கம்
ஓக்கியசுரணையற்றுவொடுக்கங் கொண்டிடுங்காணுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 251
வசனங்கெமனந்தானமதுவுஞ் சேராதிடில்என்னில்- வார்த்தை
மசக்கல்தடத்தவெனில்கொடுத்தல் வாராதுகாணாண்டே
விசர்க்கமானந்தமிரண்டுஞ் சேராதிடில்காணும்- மூல
மிசக்கல்மலசலமும் விடுத்திடாதுகாணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 252
மனமாங்காரஞ்செயலும் வசனித்திராதிடில்வாதம்- கன
நினைவைக்கொண்டு விசாரித்தியல்பு கோபத்தைப்போக்குமாண்டே
செனனச்சித்தமுயற்சி சித்தமுடலும்வேறாய்ச்- சிதறி
இயல்புதினமுமறியுமன்புந் தயவுங்குறைந்திடுங்காணான்டே- வித்தில். 

பாடல் எண்:- 253
பரிவாகிடுதல்நெஞ்சமறிவொன்றதுஞ் சேராதேபோனால்- இந்தப்
பரியாசம்புவியதனில்பாரிலொன்று நடக்காதாண்டே
சிறியத்துரியகலைசுழியிற் சேராதிடிலும்போனால்- விழியும்
சிதறிச் சுருங்கியிருமுழியுங்கலங்கிடுங் காணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 254
இடைபிங்கலையுஞ் சுழிமுனையுஞ் சேராதிடிலும்- வேறாய்
இன்பமிடறுங்கூனாய்க்குருடாய் முருடுமொண்டியுமாகுமாண்டே
திடசிங்குவைபுருடனிரண்டுஞ் சேராதிடினுமாகில்- அன்னம்
திடப்படாதுசெவியுஞ் சிமிட்டிடாதுகாணாண்டே- வித்தில்.  

பாடல் எண்:- 255
காந்தாரியத்திரண்டதுங்கலந் துறவாடிடாதாகில்- நல்ல
கந்தமுஞ்சந்தஞ்செவியுங்கருதான் குறைந்திடுகாணாண்டே
சுந்தரவலம்புருடன்சங்குனி ரெண்டதுஞ்சேராதாகில்- இந்த
மைந்தனிடதுதாள்வாயதாதுலிங்கம் குறையுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 256
பேதமாகியக்குரோதன்பின்பு சேர்ந்திடிலும்- போனால்
பித்தும்பிதற்றுஞ்சுரணையற்றுப் பிரியுமறிவுசொக்குமாண்டே
போதகப்பிராணனபானன்வியானனுஞ் சேராதிடிலுமாகில்- பிரியா
பேதித்துவன்னமுமலம்பிரித்து விடாதுகாணுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 257
உதானனுஞ்சமானன்கூர்மன்னுகந்து சேராதிடிலுமாகில்- சலம்
இறக்கமில்லாமல்மனஞ்செலுத்தேப்ப மிடுப்பிக்குமாண்டே
சூதனாந்திரிகரனுமாறியே சேராதிடிலுஞ் சேர்ந்தால்பார்வை
நீதவிழிமாறிடுஞ்சாதனையி தாகிடுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 258
சத்தமுயிர்தேவதத்தன்வித்திலுஞ் சேராதிடிலுமாகில்- நல்ல
புத்தியுங்கொட்டாவிவிக்கல்நகைப்புஞ் சிரிப்பில்லைகாணாண்டே
மத்தலத்தனஞ்செயனுமவ்விடம் விட்டதுசேரா- தாகில் 
சுத்தம்வித்தையும்பத்தியுங்கல்விவிழலா முளமாந்த பித்தமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 259
வாய்வதுவுமீரைஞ்சுவளர்பிறையு மீரெட்டுமோடில்- வாசி
தேய்பிறையுமீராறுதேறுநாடியுந் தசைமாறிகலைபாயுந்தேகாதி
தேகம்பகிரண்டங்களாவிபாய்ந்தும் அமைத்திடும்
நோயுமூழ்வினைமீறி நோக்குங்காசமோசாடிவினை- வித்தில். 

( விருத்தம் )
பாடல் எண்:- 260
மருவுயருங் கயிலைநக ரகண்ட வீதி
மறையிலகுந் திரை கடந்து நாத விந்து
உருவுயர்ந்த பதின்மூன்றாங் கோட்டின் மேலு
மோங்கியொரு துளியிறங்கித் திரண்டு மேவிக்
கருவளரு பெருகுதிகப் பதனா லேதான்
கனகரத்ன வீட்டிலொரு வீடு கட்டிக்
குருவிருந்த மண்டபத்தில் குடிதா னேறிக்
கூடிநின்ற குறிகளெல்லாஞ் சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 261
ஆதியென்ற நாதவிந்த மைந்த வாறு
மளவற்ற கருவிலுரு தரித்த வாறும்
நீதியுட னின்றுவய துரைத்த வாறும்
நிலைமையில்லாக் கருக்கரைந்து நின்ற வாறும்
வீதியிலே பிறந்தெழுந்து போன வாறும்
விவரமதை யின்னதென்று விதித்த வாறும்
பாதிமதி சடையணிந்த பரனே போற்றிப்
பத்தியுள்ள பெரியோர்கள் பாதம் போற்றி. 

பாடல் எண்:- 262
வடிவெழுதி முடியாத நாத விந்து
மாறியுயிர் கலைபிரிந்து பரத்தில் மேவும்
முடிவிலொரு மலரெனவே பூத்த வாறு
முனைசாய்ந்து வாடாமல் பின்சின் வாறும்
குடிலமெனு நடுவணையில் கருக்குள் வாறுங்
கூடியிரு கால்வாங்கி யடியிற்பாய்ந்து
மடிமீதில் கருவியெனும் வீடுண்டாக்கி
வகைவிபர மாகவெல்லாம் வகுத்தே னாண்டே. 

பாடல் எண்:- 263
உருவெடுத்து வந்தவர லாறு சொன்னேன்
ஊமையெனுஞ் செவிடான துருவுஞ் சொன்னேன்
கருவுதித்து நின்றசைவு வயதுஞ் சொன்னேன்
கலைபிரிந்து மாறுகின்ற கருத்துஞ் சொன்னேன்
துருவெடுத்துப் பூரகத்தி லுதித்து நின்ற
துயரமெல்லாம் விபரமுடன் சொன்னேன் காணும்
அறிவறிந்த பெரியோர்கள் புவியின் மீதி
வவர்மகிழ வவனியுள்ளே ரறியத் தானே. 

பாடல் எண்:- 264
விற்பனமாந் துருவவெளிக் கப்பால் நின்ற
மேலான சகலகலை நாவி னாலே
இப்பாரி லுதிக்கின்ற மைந்தர்க் கெல்லா
மியல்பான வறுமைநல மிகவுஞ் சொன்னேன்
கற்பான கற்பனையா லெழுந்த பாண்டங்
கருவிலுயி ராகிநின்ற கருந் துள்ளோர்க்குச்
சப்பாணி கூன்குருடா யான நேர்மை
சாதகமா யானறிந்து சாற்றி னேனே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 265
நாற்சதுர மண்டபத்தில் நவ்வும்மவ்வும் ரெண்டிருந்து
தீச்சுடரை மூட்டியேதான் செங்கமல வீடதனில்
பேச்செழூம்பா வக்ஷரத்தில் பேசவுரு வாய்ப்படுதல்
காச்சி யுருக்கியொரு கருங்குகையில் விட்டனரே. 

பாடல் எண்:- 266
விட்டகுறை தன்னிலொரு விந்துகுறை யாகாமல்
நட்டுவிளை வித்தேனே நடுவனையி லேயிருந்து
முட்டி யெழுந்துமுனை மூலசுழி நால்வரையில்
கட்டி யுருக்கியதில் கருத்தால் வளர்ந்தேனே. 

பாடல் எண்:- 267
உள்ளிருந்த கள்ளரையு மூனெடுத்த நேர்மைகளும்
புள்ளிருந்த வாழ்மனையிற் புகுந்துரைத்த வாழ்த்தல்களும்
தெள்ளிருந்த தீவினையுந் தேகமிதித் தாக்கையதும்
வள்ளலெனு வம்பிகையின் வாய்மொழியாற் கண்டேனே. 

( கலித்துறை )
பாடல் எண்:- 268
தாக்கிப் பொருந்தையில் மூலத்தி னாதமுந் தாதுவிந்து
நோக்கிக் கலந்துரு வாகிய நுனியூ சிவழி
நீக்கிப் பகுத்த தலைநாசி யாலு நிரந்தரமாய்
வாக்கி லுயர்ந்த கனியாகி நின்று வளர்ந்தனனே. 

பாடல் எண்:- 269
கருத்தி லிருளை யகற்றி வெளியிற் கதிர்மதியில்
விருத்து வகுத்து விபரமதாய் வெற்றி யாகவேதான்
வருத்த மில்லாமல் சுழிவிட்டு வாசல் மதிநடுவில்
ஒருத்தனு மாகி வெகுஞாயங் கொண்டு திக்கின்றனனே. 

பாடல் எண்:- 270
இருளை யகற்றி மருளை விலக்கியே காக்ஷரத்தில்
பொருளை யடுத்துப் பயனறிந் துள்ளம் புவனம்விட்டு
அருளை யடுத்து அறைவீட்டி லோட்டி யடைத்துவைத்துத்
துளிரை வளைத்துத் தெவிட்டாக் கனியுண்டு தூங்கினனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 271
முக்கோணச் சக்கரத்தில் முப்பாழுக் கப்புறத்தில்
சட்கோண வீட்டுத் தலையிடியில்- அக்கோணம்
வெளியில் வளர்ந்தருளும் வெங்க நதியான
குழியில் வளர்ந்த குழவி. 

பாடல் எண்:- 272
வாசிகட்டிப் பந்தடித்து மாறி யிருகாலால்
நேசமுட னேபிடித்து நின்றறிந்து- ஓசைதனில்
ஆதிச் சிலம்பொலியை யண்டந் தனிலெழுப்ப
நீதியுட னேவளர்ந்து நின்றேன். 

பாடல் எண்:- 273
ஒட்டுப் பலகை யொருசாண் சிறுவீட்டில்
முட்டி வளர்ந்து முனையடியில்- நட்டு
அனந்தகம் பத்தடியி லகத்திய னேகண்டு
இன்பமுடன் யான்வளர்ந்தே னினி. 

( விருத்தம் )
பாடல் எண்:- 274
இப்படியே விழிமடவார் கெர்பபத் துள்ளே
யினிவளர்ந்த நேர்மையெல்லா மியம்புங் காலை
எப்படியுந் தப்பிதங்க ளினிவா ராமல்
என்னாலே யறிந்தமட்டு மியம்பி னேன்காண்
சொற்படியுஞ் சுழிமூல வீட்டுக் குள்ளே
துகையான கருவிநின்ற சூக்ஷா சூக்ஷம்
இப்படியே வகுத்துரைத்த மைந்தர்க் கெல்லாம்
இனியமுறை யிப்புவியி லியம்பு வேனே. 

பாடல் எண்:- 275
பத்தான திங்கள்சென்று பிறந்த பாலன்
பாக்கியமனு பவித்துப்பர தேசி யாகி
விஸ்தார மானபரி கரியு மேறி
விட்டகுறை தவிர்ந்துடனே யிறந்து வுண்ணும்
அஸ்தான திரவியத்தில் வாழ்ந்து மாறி
அதுகடந்து வையமடுத் ததுவு முண்டு
சித்தாடு கின்றசிவ யோகி யாகித்
திரிந்தவகை யறிந்தமட்டுஞ் செப்பு வேனே. 

பாடல் எண்:- 276
ஒருத்தனவன் கருத்தாலே யுலக மாள்வன்
உகந்துலகில் வாழ்ந்துஇரந் துண்டு வாழ்வன்
பெருத்தொருவன் புவியாசை பிரித்துக் கொள்வன்
பிராணன்வெறுத் தகமீறிப் பிதிர்களாவன்
துரைத்தனங்கள் செய்துபெருஞ் சிவிகை யேறிச்
சுவைமாறிச் சிவயோகஞ் செய்து வாழ்வன்
வெறுத்திந்தச் சபைதனிலே யாண்டே கேளீர்
விபரமெல்லாம் வெளியாக விளம்பு வேனே. 

பாடல் எண்:- 277
சுந்தரஞ்சேர் நாதவிந்து மூலந் தன்னில்
துளிபெருகி யொருமடையி லோடும் போது
அந்தமில்லா முகபேத மான வாறும்
அழகுமஷ்ட வயிஸ்வரிய மமைந்த வாறும்
சந்ததமி ழுரைத்தவர்கள் கற்ற வாறும்
சந்நியாசி தவசிகளாய்ச் சார்ந்த வாறும்
கந்தமலர்ப் பூங்குழலை வெறுத்து நின்ற
காரணத்தை யின்னதென்று கருது வேனே. 

பாடல் எண்:- 278
அறிவறிந்து மனுபோகஞ் செய்யா மாண்பர்
ஆதிவிந்து நாதமென்று மறியா மாண்பர்
கருவறிந்து பொறியடங்கிச் சித்த ரானார்
கருத்துமனம் ரெண்டாகி யோகி யானார்
திருவுடனே சேராமல் ஞானி யானார்
தேசமதில் பூசைசெய்யுஞ் சைவ ரானார்
குருவுடனே சீஷனென்று மிருவ ரானார்
குறிப்பறிந்து பிண்டமதிற் கூறு வேனே. 

பாடல் எண்:- 279
அலையாமல் பசியறிந்து உண்ணும் பேரும்
அனுதினமுந் துயரமதி லழுந்தும் பேரும்
நிலையாமல் நினைவுதடு மாறும் பேரும்
நித்திரையில் பயந்தெழுந்து நின்ற பேரும்
துலையாம லுலகமெல்லாந் திரிந்த பேரும்
சேர்ந்துமொரு சந்திதனில் மடிந்த பேரும்
மலையாமல் போர்க்களத்தில் ஜெயித்த பேரும்
வகித்தவிந்தி லுதித்தவகை வசனிப் போமே.

பாடல் எண்:- 280
மந்திரங்கள் கல்விமிகக் கற்ற பேரும்
மகத்தான சாஸ்திரங்கள் வகுத்த பேரும்
சிந்தையெனுங் கிரியைதனி லிருந்த பேரும்
ஜெகஜால மறிந்துலகில் வாழ்ந்த பேரும்
அந்தமெனும் யோகமதி லடர்ந்த பேரும்
அனாதியெனு ஞானமறிந் தமைந்த பேரும்
இந்தவகை யிப்படியே யான வாறும்
எனையீன்ற குருவருளா லியம்பு வேனே. 

இடைபின் கலையளவு
( தரு ) 
ஆராறமைத்தவிதியாண்டே- கருவூரினில்
யானும்விதித்தவிதியாண்டே. 

பாடல் எண்:- 281
பார்தனிலேகருவூர் பாலனமைந்தவிதி
சீர்பெறுஞ்செல்வமுண்டான செய்தியைச்சொல்லுவேனாண்டே
தாரணிதனிலேவதந்தைதாயுமிருவர்கூடி
கருவிரதிகேளிதானாடிய போதினில்- ஆரா. 

பாடல் எண்:- 282
ஓடுங்கதிர்மதியுமொன்றுட னிரண்டும்வளர்ந்தால்
நீடுலகும்புவியில்வாடு வார்வறுமைகொண்டு
ஓடுமதியுங்கதிரோ டிரண்டொன்றுபாய்ந்தால்
வீடுமிழந்துவையமேலுந் தரித்திரவான்காணும்- ஆரா. 

பாடல் எண்:- 283
முதல்மூன்றும்பூரணசந்திரன் விதமாயமைக்குமைந்தன்
சுதனருள்கல்வியும்பாக்கிய மதிகலைபதினாறெனில்
அதுவுமல்லாமனாலி லருணன்சோமனுங்கூடில்
விதியமுழையில்மைந்தன் விவேகியோகவானாண்டே- ஆரா. 

பாடல் எண்:- 284
நாலுகலைபிரியா ரவிதன்மதிவளரில்
பாலன்தனக்கெந்நாளும் வாலப்பருவங்காணும்
காலையில்பாலன்னஞ் சுவைசுகியோடதுமாறாது
காலனணுகாதஷ்ட கனயோகவான்காணும்- ஆரா. 

பாடல் எண்:- 285
வஞ்சிகெர்ப்பந்தனிலே வளருமதியஞ்சானால்
மிஞ்சும்புகழ்பாக்கியங் கொஞ்சும்யோகவானாண்டே
ரஞ்சிதக்கருக்குழியிலாத லால்மதியாறானால்
செஞ்சொலும்பார்தனிற்காணி செழிக்கும்பதியுண்டெனில்- ஆரா. 

பாடல் எண்:- 286
மாதுவிழிமடவாள் மதிசூலகெர்ப்பந்தனிலுந்
தாதுமதியேழெனில் தழைத்துவாழ்வார்கள்செல்வம்
சாதனமிதுதப்பாது நாதவிந்தாலனேகம்
பேதாபேதங்கள்கோடி மேதினியோர்களிவ்வாறு- ஆரா. 

( விருத்தம் )
பாடல் எண்:- 287
கங்குநதி நகரிலங் கருவூர் நாட்டில்
கதிர்மதியா லெடுத்தபலன் கணக்க தாக
மங்கையுடல் மாதுகெர்ப்பந் தனிலே விந்து
மகிமையதா யவதரித்த வண்மை யெல்லாம்
சிங்கார மாகவெந்தன் தெளிவி னாலே
திங்கள்பத்தி லுதித்தமைந்தன் செயலே கண்டு
செங்கமல மங்கையம்பி கைப்பெண் மாது
செப்பிடிலுங் கருத்தையினித் தெளிவிப் பேனே. 

பிண்டோற்பத்தி
( தரு )
தெந்தினதினதினனா- தினதின- தெந்தினதினதின- தினதினனா. 

பாடல் எண்:- 288
திட்டமுடன்வெட்டவெளியில்- கலையெட்டில்
செனித்தருள்கெர்ப்ப மதினுற்பவத்தைக்கேள்
வட்ட மதிவிட்டகுறையால்- செல்வம்
வளர்ந்திடுந்திருமுகம் விளைந்திடுங்காண் 
அட்டதிசையம்பரத்திலே- சுழியின்முனை
ஆதாரகுண்டலி தனகத்துக்குள்ளே
விட்டமதியொன்பதிலே- விந்துதரிக்க
விஜயராஜாங்கயோக வாசஞ்செய்வார்- தெந்தின. 

பாடல் எண்:- 289
உதித்தபெருந்துறைமூல- மூத்தைக்குழியி
லுற்பனமாகவேகெர்ப்பந் தரித்ததென்றால்
பதித்தசமதிலுதித்தால்- விந்துசிவ
பாருலகிலட்டசித்து மாடிடுவர்காண்
விதித்தவிதியறியாத- கருக்குழிதன்
வீதியிலுநாதமதுமேவிடிலுமே
பதித்தமதிபதினொன்றா- லட்டசுக
பாக்கியசிவயோக ராஜயோகியிவர்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 290
எண்ணிரண்டாங் கோட்டினிலே- சுரோணித
மென்றிருக்கின்றநாதமெனு முதிக்கையிலே
பன்னிரண்டில்மதியானா- லிப்புவியில்
பாராளுந்துரைத்தனஞ்செய் தரசாள்வார்
உன்னிதச்சுழிமுனையிலே- கெர்ப்பந்தரித்து
உற்பனமாகவேமதிபதி மூன்றானால்
இன்னிதராஜாங்கந்தனில்- மந்திரியாகி
யேகசக்கரவர்த்திகட்கு யோக்கியவான்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 291
மதிசந்திரன்பதினாறில்- கெர்ப்பந்தரிக்க 
வந்தவதரித்தமைந்தன் விந்துபலன்கேள்
பதிகருவூர்தனைவிட்டு- அம்புவியில்
பாலகனவதரித்தால் ஞானியாவார்காண்
மதிரவிநடனஞ்செய்யும் பூர்வக்கியான
வாசிவசமாகும் ரசவாதமுமெய்தும்
அதிவிதயோகதிசைவான்- மறுபிறவியாதலா
லாண்டவன் செயலமைப்பிதுவே- தெந்தின. 

பாடல் எண்:- 292
பாதகஞ்செய்திடுங்கருவூர்- அவ்வூரினில்
பதிக்குள்மைந்த னுதிக்கப்பலனதுகேள்
மூவஞ்சுமதியானால்- அம்மதியில்
முக்குணமதாகி வளர்சகுணவான் காண்
மேவுங்கருவூர்தனிலே- கெர்ப்பந்தரிக்க
மேதினிதனிலேமைந்தன் வீதிவந்தபின்
பூவுலகில்மூவுலகமே- கர்த்தவ்யமெனும்
புகழுடைய மும்மூர்த்தியீஸ்பரன்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 293
மருவுயர்திருவீட்டில் கருவூரினில்- வந்துதித்து
மைந்தர்களும் வரும்போது
பெருகியமதியீரெட்டில்- உதித்திலகும்
பிரபஞ்முழுந்திரக் கடலுலகுங்
கருவியிலுதித்தபலன்- இப்புவிதனில்
கனயோகச்சித்ததி கர்த்தனிவர்காண்
அருமறையோர்புகழும்- அம்புவிதனில்
அட்டஅவதானியென மனைவர்தொழும்- தெந்தின. 

பாடல் எண்:- 294
இந்துமதிவிந்துநாதமு- மிரண்டுங்கூடி
என்னுடைய தந்தையுடனன்னை சேர்ந்திடில்
மைந்தனாய்க்கருக்குழிதனி- லவதரித்து
வந்துதித்தபாக்கியமினி விந்தையாய்ச் சொல்வேன்
விந்துதிக்கும்விட்டகுறைகாண் இந்தமதி
அந்தணர்முனிவரெல்லாம் வந்துதித்தனர்
செந்தமிழ்க்கவிதையாய்ந்தனர்- ஞானப்புலவ
ரைந்துபூதமைந்துந்தெளிந்தவராண்டே-தெந்தின. 

( விருத்தம் )
பாடல் எண்:- 295
காரணத்தால் நாதவிந்து கருவூர் தன்னில்
கலந்துவுரு வாகிவந்த கருத்தை யெல்லாம்
சீர்படைத்த புவிதனிலே வகுத்து யானுந்
தெளிவாகத் தெரிந்தமட்டுஞ் செயலாய்ச் சொன்னேன்
வாரணமாஞ் செங்கமல வீட்டுக் கப்பால்
மாறுகலை நாலதுவால் வகுத்த நேர்மை
பேர்படைத்த பதினாறி லொன்று போனால்
பேருலகில் தவசியெனப் பிறப்பா ராண்டே. 

பாடல் எண்:- 296
குருவிருக்கு முப்பாலி லேதான் குய்ய
நடுவுமையத் தின்குறிப்புக் குள்ளி லேதான்
கருவுறையு நாதவிந்து கலக்கும் போது
கதித்தகலை மதியிரண்டு குறைந்த தாகில்
விருப்பமுடன் பார்தனிலே பிறந்த பின்பு
விளங்குஞ்செல்வம் பாதியிலே கழிந்துபோகும்
பருவமுள்ள பதின்மூன்றுங் குறைந்த தாகில்
பரதேசி யாகிடுவார் பாரி லாண்டே. 

பாடல் எண்:- 297
சிறுபிறைக்குள் திரைமறைந்து சிறந்த வீட்டில்
சித்துவித்தை கல்விதரு நாத விந்து
ஒருதுளிகொண் டிருதுளியு லுறையும் போது
வுதித்தகலை நாதனா லாண்டி யாவார்
தருவணையுங் கலையுமைந்த தானாற் கேளீர் 
சாந்தநற் குணமழகுஞ் செல்வ மட்டாம்
பெருமையெனு மாறிலுஞ்சன் னாசி யாவார் 
பேர்பெரிய யேழினிலு மதிதி யாண்டே. 

பாடல் எண்:- 298
வட்டமதி யெட்டுகலை குறைந்த தாகில்
வகுத்தவுடல் பெருத்திருக்கும் வளர்ச்சி யுண்டாம்
விட்டமதி கலையொன்பதுங் குறைந்த தாகில்
வீறாகப் பிறந்துவளர்ந் திரந்துண் பார்கள்
சட்டமதி கலைபத்தில் குறைந்த தாகில்
சாகுநாள் பரியந்தந் தரித்திர ராவார்
தொட்டகலை நீங்கிவிட திருக்கு மாகில்
தொல்லுலகி லுள்ளவர்க ளறிந்தி டீரே. 

பாடல் எண்:- 299
வடிவுகொண்ட திருமூலத் திரைக்குள் ளேதான்
மருவுகின்ற நாதவிந்து வமைந்த போது
முடிவுகின்ற மதிகுறைந்து பதினொன் றாகில்
முதலான வாழ்வுயுரு மீயா மூடர்
மிடிகொண்டு விருளகற்றி வளர்ந்து மேன்மேல் 
மேலான பல்களையு மீரா ராகில்
குடியிருக்குங் குறையில்லா தாச்சு தாகில்
குவலயத்தி னாற்பதிலே சித்த ராண்டே. 

பாடல் எண்:- 300
சிவ்வெழுத்து மவ்வெழுத்து மிரண்டுங் கூடிச்
சிறந்திருந்த அவ்வெழுத்தில் வவ்வுஞ் சேர்ந்து
நவ்வெழுத்தி லுதித்தருளு மைந்தர்க் கெல்லாம்
நயந்துசரி வாழ்த்தின்பின் னிரந்துண் பார்கள்
மவ்வெழுத்து நவ்வெழுத்து மிரண்டுஞ் சேர்ந்து
மகிழும்யவ்விவ் வவ்வெழுத்துஞ் சிவ்வுண்டாகி
இவ்வுலகி லுதித்தருளும் பாலர்க் கெல்லா
மினியசரி பாதிவாழ்ந் திரந்துண் பாரே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900