திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1401- 1500

பாடல் எண்:- 1401
ஒன்றாகி முப்பு ஓருரு வாகி யொளிவதுவாய்க்
கொண்டே யொருபலம் பண்ணைச்சவ் வீரங் குறித்துசமன்
நன்றாகு நாதமும் விந்துவுங் கூட்டி ரவிமதியாய்
அன்றாதங் காய மதில்வனார் விட்டு ஆட்டிடுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1402
விந்துநீர் விட்டுவிடாம லிதையாட்டி
அந்தமது வழித்து அருணனி- லிந்த
முகம்பட வும்வைத்த மூடிய சீலைதனில்
புகழ்சீலை செய்துபுடம் போடு. 

பாடல் எண்:- 1403
ஆறிய தோர்பின்பு அதற்குச் சரிசூதம்
வாற்றிய முன்பதமாய் வார்த்து- மீறிடா
ஆட்டியதை வதித்து அருணன் முகம்படவும்
நாட்டுமுழப் புடத்தில் நன்று. 

பாடல் எண்:- 1404
நன்றிகாண் கழஞ்சி நாதவிட் டமர்த்தி
துன்று துருசுதனில் தொந்தித்து- நன்றறிய
மூலப் புளிகவச மூன்றுமண் சீலையது
ஞாலக் கவுதாரிபுட நன்று. 

முப்பு முடித்தல்
(தரு)
முப்புமுடிந்ததுகாண்- மூலம்புளி முப்புமுடிந்ததுகாண். 
பாடல் எண்:- 1405
முப்புமுடிந்ததுகைப்புமுறிந்தது
அப்புமுப்புங்கம்பியுப்பிதுமூன்றினால்
கற்பகஞானவாலாம்பிகைதன்னருள்
அற்புதமாமலரர்ச்சனைசெய்துயான்- முப்பு. 

பாடல் எண்:- 1406
சீனச்சரக்கறுபத்துநாலுஞ்சுன்னஞ்
செந்தூரபற்பமுஞ்செயநீர்திராவகம்
பாணத்தினால்குடோரிகட்டுங்களங்கதும்
பார்க்கப்பார்க்கச்சரக்காதிதமுநீரே- முப்பு. 

பாடல் எண்:- 1407
துருசிசுன்னமுடிந்தாச்சுதுமுப்பினால்
தொந்தங்கோடாகோடிசோதிக்கவேதைகாண்
பரிசைவேதையிதிலனந்தங்கோடி
பாடுபட்டுச்செய்தோர்க்கெய்திடுமாண்டையே- முப்பு. 

பாடல் எண்:- 1408
காரீயஞ்சேரொருசேர்த்துஅயச்சட்டி
கண்டுகனத்தினகாரீயஞ்சலமதாய்
வீரியமாமுப்புக்கழஞ்சிடை
வேகத்துரிசியிடைச்சரிசுன்னமே- முப்பு. 

பாடல் எண்:- 1409
கம்பியுப்புபதினாறுபலமதில்
காட்டிடுஞ்சுன்னங்கலக்கவுமூட்டியுந்
தும்பிமுகன்பதம்போற்றியாடுபின்பு
தொந்தித்துக்கிராசமுந்தூவிக்கடைந்திடே- முப்பு. 

பாடல் எண்:- 1410
அஸ்வகெந்திக்கிழங்கவ்விதவேரினால்
யிசைவதாகவிருசாமம்வறுத்துடன்
பஸ்பமாகும்பருதியொளிவுபோல்
நிசமதாகுநிலைகண்டறிவதே- முப்பு. 

பாடல் எண்:- 1411
பச்சைப்பனையதினேடுசெந்தூரிகம்
பழையசட்டிதனில்நடுவைத்துகாண்
உச்சிகம்புகழ்செந்தூரந்தன்னிலும்
அச்சமிலாவிந்துநாதம்விட்டாட்டிடே- முப்பு. 

பாடல் எண்:- 1412
நாதவிந்துநீர்விட்டொருசாமம்
நேரஆட்டிவிடாமலுங்காசுபோல்
தீதில்லாமல்ரவிமுகங்காட்டியும்
பேதமில்லாமல்செந்தூரத்தில்மாட்டிடே- முப்பு. 

பாடல் எண்:- 1413
சட்டிமேலுஞ்சந்தில்லாமல்சீலைமண்
கெட்டியாய்க்கவசங்களுமேலதாய்ச்
சட்டியில்லங்காற்றில்லாமலும்படி
முட்டிவன்னிமுதல்சதுர்சாமமே- முப்பு. 

பாடல் எண்:- 1414
ஒட்டியேகமலாக்கினிதீமிதம்
யோகநாதவாலாம்பிகைதன்பதம்
வெட்டியால்வீரசாம்பவமூர்த்தியால்
அட்டியில்லாமலென்னாண்டேமுடிந்ததே- முப்பு. 

பாடல் எண்:- 1415
கர்த்தனருள்கருவங்கசெந்தூரமும்
நித்தம்பூசித்துடன்நின்றறிவோர்கள்தான்
சித்தியெய்துஞ்சிவசத்திபொற்பதம்
முத்திமோட்சமெய்ஞ்ஞானம்லபிக்குமே- முப்பு. 

பாடல் எண்:- 1416
இந்திரனுமதிரவியுங்கதிரொளி
சந்திரசூரியர்விந்துநாதஞ்சேர்ந்து
இந்தவெண்சாணுடல்பஞ்சபூதங்கூடி
ரஞ்சிதஉப்புநவலோகநீற்றுமே- முப்பு. 

பாடல் எண்:- 1417
நீலமேகவர்னமாலின்மதிமலர்
வாலைரூபிவடிவம்பிகைதன்செயல்
மூலாதாரமுமண்டலஞ்சூழ்மதி
ஆறாதாரமமைத்தாராண்டையே- முப்பு. 

பாடல் எண்:- 1418
கற்பகோடிகற்பசோதனைசெய்கினும்
உற்பகங்களொருவரறிகிலார்
சற்பமாவததுகடித்தேவிஷம்
கைத்தால்ஞானங்கரைகண்டறிவரே- முப்பு. 

பாடல் எண்:- 1419
வங்கசெந்தூரமிருபத்துமேகமும்
வாரியேழுகடலேழுஞ்சுழலவும்
தங்கமிதுபதினாறுகலையினால்
கருவங்கசெந்தூரமருவினால்தங்கமே- முப்பு. 

பாடல் எண்:- 1420
இந்தத்தேகமிருந்தெவ்வுயிர்க்குமே
வங்கசெந்தூரமதுகுன்றித்தேனிடை
அந்திடைவாதமடக்கியுமந்திடைச்
செந்தாவின்கிருதத்திலூட்டியுணருவாய்- முப்பு. 

பாடல் எண்:- 1421
காரிலுதித்துருவாயிறுபத்துமே
கட்டளையின்படி மேகங்கள்சூழ்கிலும்
சாருமுடல்விந்துநாதத்துலாவியும்
பாயுந்தங்கரசவங்கசெந்தூரங்காண்- முப்பு. 

பாடல் எண்:- 1422
குமரிலேகியத்தில்குண்றிடைச்செந்தூரம்
அமிர்தமேயரைமண்டலமுண்பீரால்
தமதுதேகம்பொன்காலையுமாலையும்
அமிர்தமாகுமாவின்பால்கிருதங்களே- முப்பு. 

பாடல் எண்:- 1423
பாலுமன்னம்பரிந்துஅருந்திடில்
வாலையாகும்வயதுவிளமையாம்
சூலைகிராணியெட்டெட்டுமெழும்பிடுஞ்
சோபதாபமாயாசங்களும்விடும்- முப்பு. 

பாடல் எண்:- 1424
வாதமெண்பதுபித்தன்நாற்பது
மாறுஞ்சேத்துமமிருபத்துமேகிடும்
வாதவிந்துமூலப்புளிசுன்னத்தில்
காதமோடிக்கருங்கடல்புக்குமே- முப்பு. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1425
அந்தவொளி யாயிலகுஞ் சுழிமுனை மீதில்
அருள்பரம சிவகுருவே ஆண்டே கேளீர் 
வந்தவழி முப்புமுன்னா ளமைத்த வாறு
மனிதர்களில் மறுபிறவி செனித்த வாறும்
சுந்தரமே யென்குருவே யகத்ய சுவாமி 
சொன்னமறு பிறவியென்ன சூக்ஷ ஞானம்
எந்தவித மாகிலுமே கற்பக் கூறால்
எண்சாணு தேகமது வேறாய்ப் போச்சே. 

பாடல் எண்:- 1426
கருவிதொண்ணூற் றாறுஞ்சுட்ட காய மாச்சு
காமப்பால் வேறுபடக் கர்மம் போச்சு
திருமருவுங் கருவூரு பெலத்தும் போச்சு
திருநடன செகச்சோதி யறிய லாச்சு
வரும்வினைக்கு மூன்றுப்பு முடிந்து போச்சு
மகத்தான செந்தூரம் வசிய மாச்சு
பெரியோர்கள் மறைத்தகரு வெளியாய்ப் போச்சு
பேதபே தங்களெல்லாம் பேச லாச்சு. 

ரசபற்பம்
(தரு)
சூதரசபற்பங்காண்- ரசசூத- வாலைரசபற்பங்காண். 
பாடல் எண்:- 1427
சூதமென்றால்ரசவாதசூதரசம்
சோதித்தொருபலஞ்சூட்சமதாகவும்
நாதவிந்துகாரசாரம்பத்டினில்
மாதுநீர்நாதமருவியும்பாய்ந்திடில்- சூதரச. 

பாடல் எண்:- 1428
நீதமெனும்விந்துநாதத்திற்பொங்கியும்
வேதசாரம்விந்துவெண்மதிபாய்ந்திடும்
வேதசாரம்பழச்சாறெனுங்கூறிடல்
வீதமஞ்சுபலநாதநீராண்டையே- சூதரச. 

பாடல் எண்:- 1429
தோகையெனுமடமாதுமாதவிடாய்
சூதமத்தச்செப்புபாத்திரந்தன்னிலும்
சூதத்தைவிட்டுப்போற்றித்தீபாக்கினை
நாதத்தைவிட்டிருநாலுகடிகைக்குள்- சூதரச. 

பாடல் எண்:- 1430
மாதவிடாய்சருங்கேற்றவாலைரச
மேலுமேன்மேலும்வெகுவலுவாகிடும்
நாதசத்திமூலநாடிப்புளிக்குளே
சூதவாதசித்திகுகைமலப்புளிசீலையே- சூதரச. 

பாடல் எண்:- 1431
மலப்புளிசரக்கானதுகுக்கிடம்
வன்னியிட்டுஅனலாறிசூதபற்பம்
பலமிந்தஎடைமாறாதொருபலம்
பார்க்கப்பார்க்கப்பளிங்காகும்பிரகாரமாம்- சூதரச. 

பாடல் எண்:- 1432
நலமிந்தவுடலெமனென்றநோய்வினை
நாடிடுமேபதினெட்டுகுஷ்டத்துக்கும்
வலையதுவும்வீசும்பஞ்சதாரைக்கிருதமெனும்
அதில்குன்றியிடைவைத்தரைமண்டலமுண்ண- சூதரச. 

பாடல் எண்:- 1433
வாதமடக்கிவேர்க்கொம்புபறங்கியும்
இரவுமேகொடிவேலிவேர்தோளதும்
வீதஞ்சரிஎடைசூரணமாய்ச்செய்து
மேருதேன்கூட்டிக்குழைத்தந்தபற்பத்தில்- சூதரச. 

பாடல் எண்:- 1434
வேதஞ்சொலும்படிமேகவாய்வுகுத்தல்
பேதமானகடிமுடக்குப்பிடிப்பதும்
சூதபற்பங்குன்றிகாலையுமாலையும்
நாதனருளரைமண்டலநல்கிடே- சூதரச. 

பாடல் எண்:- 1435
மூலமெட்டுமூலகிராணியெட்டுவாய்வு
குன்மமெட்டுசுரதோஷத்தோடேழதும்
நீலமேகங்களிருபத்துஒன்றுடன்
காலையோடிகடல்புக்குமாறுமே- சூதரச. 

பாடல் எண்:- 1436
வாலைசூதமகிமைமகத்துகள்
பேதபேதமாய்ப்பேசினார்நூல்களில்
நாதவிந்துகாரசாரமகிமையால்
சூதபற்பமுஞ்சூட்டினேனாண்டையே- சூதரச. 

பாடல் எண்:- 1437
ஊழ்வினைப்பயனோடிப்பறந்திடும்
மைவிழிமடமாதுசூதகம்போம்
பையவினைப்பழிபாண்டுரோகம்விடும்
மெய்யிதுஞானவெட்டியிதுண்மையே- சூதரச. 

பாடல் எண்:- 1438
கர்மாந்தரநோய்கருதிப்பறந்திடும்
மர்மமேதுவழலைமகத்துவந்
தர்மநோய்க்குத்தகுந்தவிழ்தமிட
கர்மநோய்கள்காணாதுசுபஸ்தமே- சூதரச. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1439
வடிவுடைய திருமால்தன் தேவி யான
மதிதலத்தி லவதரிக்கு மரிதா ரங்காண்
கெடிவீர சிங்கமெனுஞ் சரக்கி தாகும்
கேவலமாய்ச் சொல்லுகிறேன் கெருவ மில்லா
மடிமீதி லெனைவளர்த்து அமிர்தந் தந்த
வாலையபி ராமிமலர்க் கமலம் போற்றி
அடிநடுவு முடியுமெனக் கனுக்கிரக கிக்க
அரிதார பற்பமதை யருள்வே னாண்டே. 

அரிதாரபற்ப முறை
(தரு)
தாரபற்பமிதுகாண் திருமாலின் தேவியிதுகாண். 

பாடல் எண்:- 1440
தாரந்தனில்திருமாலின்தேவிபலஞ்
சீராய்காலங்கல்லுசுன்னத்தில்தாளித்து
நீரமுரிபடிநாலுக்கொன்றுகாரம்
நேரத்துடன்மூன்றுநாள்கரைத்துபின்பு
தாரமூன்றுநாளில்தெளியுஞ்செயநீரதில்
வேறொருபடிவெண்காரசாரமும்
பூரம்பலஞ்சரியொக்கத்தூளாக்கிப்பின்
தூறிடுநீரினில்தூள்செய்துபோடுமே-தார. 

பாடல் எண்:- 1441
சாரகாரசெயநீரதும்பீங்கானில்
வீறதாரவிடுமெய்ப்பொருள்முப்புவும்
காரநீரினில்கழஞ்சிடைபாய்ச்சியு
மேறநீருமிறுத்துங்கடிகைதான்- தார. 

பாடல் எண்:- 1442
புரசையாவதும்பூமுருக்கநிறம் 
வரிசையாச்சட்டியில்தாரமும் 
சுரநீர்செயநீரதுஞ்சாமனால் 
துருசமாகச்சுருக்கிட்டுப்பாருமே- தார. 

பாடல் எண்:- 1443
சுருக்கேறவுவந்துய்யவெண்ணரிதாரமாம் 
மிருகுங்கட்டிமினுமினுப்பேகிடும்
இறுகுமுப்புக்கழஞ்செடைவிந்துநீர் 
இரண்டுமிழைத்துக்கவசமுஞ்செய்திடே- தார. 

பாடல் எண்:- 1444
தாரங்கட்டிடுஞ்சத்துகள்வெட்டையாம்
ஈரம்வற்றஇனிரவியின்முகம்
நீறுந்தாரம்பத்திராட்சியரைத்துமேல்
சோரச்செய்துமேசுன்னநீர்ச்சீலையே- தார. 

பாடல் எண்:- 1445
சீலைமண்ணுடன்செய்வதருவஞ்சினில்
வாலையம்பிகைமாதுஅருளினால்
சாலமாமலர்தாயைப்பணிந்துடன்
நீலமேதிருமாலைப்பூசித்தேனே- தார. 

பாடல் எண்:- 1446
வன்னியிட்டுப் பார்க்கவாசம்புகைவரா
துன்னிதமாய்ப்பொன்னரிதாரநீறிடு
மன்னையருள்திருமாலின்தேவியெனுஞ்
சொர்னபற்பந்துடிசொன்னோமீதாண்டையே- தார. 

பாடல் எண்:- 1447
அதிதாரமதுநீறும்பரிசவேதை
யாதலால்தேயுவினதுபத்துக்கொன்றிது
காரியமாமெனும்பொன்னரிதாரத்தில்
வீரியமென்னவிதமறியார்கள்காண்- தார. 

பாடல் எண்:- 1448
கூறறியுமாவின்கிருதமுந்தேனுடன்
சீர்மேவுந்திப்பிலிசிறுமிளகுமது
வாறறியுங்கிராம்புவாதமடக்கிவேர்
சாருஞ்சுக்கதுவம்பலமதாகுமே- தார. 

பாடல் எண்:- 1449
வகைவகைக்குச்சரிசமனாய்த்தூளாக்கிப்பின்
அறியும்பற்பமதுகுன்றிதன்னிடைத்
திகையில்லாமல்தேன்கூட்டிகற்பத்தினில்
பகையில்லாதொருபக்ஷங்கொண்டுணருமே- தார. 

பாடல் எண்:- 1450
வகையிந்தப்படிகாலையுமாலையும்
புகையுமேபுளிபொட்டெனத்தள்ளிடுந்
துகையதாஞ்சயகாசமிருமலுஞ்
சுவாசத்தோடிரைப்பாவதுநீங்குமே- தார. 

பாடல் எண்:- 1451
சாதமிந்தப்படிமேவும்பட்சத்தினில்
தாரபற்பமுஞ்சடந்தனிலூறினால்
வாதம்விக்கலுடன்பித்தரோசிகம்
வாந்திசந்திசுரசன்னியுமேகுமே- தார. 

பாடல் எண்:- 1452
சூதத்தினால்வயிறுவலியுடனுஷ்ணமும்
வாதத்தினால்பெருவயிறுந்துர்க்குணம்
நாதத்தினால்பிரமூலப்பிரமியங்
காசத்தினால்தொண்ணூற்றாறுசயம்விடும்- தார. 

பாடல் எண்:- 1453
பரங்கிப்பட்டைச்சிற்றரத்தைசுக்குடன்
சிறந்தவாதமடக்கித்திப்பிலியும்
நிறைந்ததோர்கொடிவேலிவேர்பட்டையுங்
குறைந்திடமிளகருணையேழுமே- தார. 

பாடல் எண்:- 1454
ஏழுவகைக்குச்சரியெடைப்பாகம்
இடித்துத்தூளதாயினிப்பதனத்துடன்
வாழுமாமலைத்தேன்பசுங்கிருதஞ்சரி
வார்த்துமத்தித்துமதிபற்பங்குன்றியே- தார. 

பாடல் எண்:- 1455
பற்பங்குன்றியெடைகாலையுமாலையும்
உற்பகமாயொருபக்ஷமுணர்வீராய்
அற்பதேகமசாத்தியநோய்களுந்
துற்பலமாவதுந்தூணதுவாகுமே- தார. 

பாடல் எண்:- 1456
சீறுநாசியடைப்புநீர்பாய்ச்சலும்
சேருஞ்செவிதனில்சீழுமடைத்தலும்
தேறுங்கபாலத்தின்சூலையும்பாண்டுடன்
ஊரைவிட்டேகியுகாந்திரமோடுமே- தார. 

பாடல் எண்:- 1457
காசரோகங்கனமேப்படைகளும்
நாசியடைப்புப்புண்புரைச்சீலைகளும்
வாசமாகிடுஞ்சீழுங்கிருமியும்
மாரியோடும்வலுவானநோய்களே- தார. 

பாடல் எண்:- 1458
கெற்பகாசங்கிரந்தியுஞ்சூலைகள்
அற்பநோய்க்குஅவிழ்தங்கொடுத்திட
முற்பச்செய்கைமூலங்களுமறும்
மெய்ப்பொருள்காரபத்தாலாண்டையே- தார. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1459
மூலப்புளியமுரி முன்னேயுள் ளத்திலும்
வாலையது வாய்செனித்து வாசியினால் சுன்னமாம் 
சூலதுவா வந்தமைத்த சூதறிந்து முப்பூவின்
காலத்திலும் கற்பமுண்ட காரணத்தி னால்முடிந்தே. 

பாடல் எண்:- 1460
முடிந்ததுகாண் தீட்சைபத்து மூலப்புளி சுன்னமதால்
படிந்ததுகாண் முப்புசுண்ணம் பார்தனிலுமார்முடிப்பார்
கடிந்தமுரி கற்பசுத்தி காயசுத்தி யானதினால்
வெடிந்ததுகாண் சற்குருவால் வெகுசரக்கு நீற்றினமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1461
ஆண்டுதச பத்து கற்பாதி கற்பத்தி னாதரவால்
பூண்டுத்தி றந்திந்த மூலப்புளியென்ற பொக்கிஷத்தை
வேண்டிவா லாம்பிகை பாதார விந்தத்தில் மேவிடயான்
தூண்டி யெனக்குப தேசந்தந் தென்னைச் சோதித்தளே. 

பாடல் எண்:- 1462
சோதி யானந்த பரிபூர ணானந்த சூக்ஷமதால்
வாத வயித்திய நானறிந் தம்பிகை மதுமலர்ச்
சாதனை செய்தொரு ஈராறு மாச்சுது தானறிந்தேன்
நீதிமெய்ஞ் ஞானத்தில் வெட்டியென்றேவேதநிர்மித்தனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1463
வேண்டு மரிதார வேதையிட பாதையது
தூண்டிதுகாண் மூலப் புளிசுண்ணம்- வேண்டுலகில்
கண்டால் கலகமது காசமறுஞ் சன்னிசுர
முண்டாலு மூழ்வினைபோம் போம். 

பாடல் எண்:- 1464
தேனுமனு பானஞ்சேத்து மந்தொண்ணூற் றாறுமது
முளைவிட்டி வோடிவிடு மூழ்வினைபார்- தேனதனால்
நானுணர்ந்த ஞானவெட்டி நன்னூலது வாயருள
பானமதை யுண்டதுவும் பார். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1465
இந்தமதி யாலெடுத் துரைத்தேன் காணும்
எண்டிசையுங் கீர்த்திபெற விந்நூல் பாடிச்
சந்தயமெல் லாம்வெளியாய்த் தானே தோற்றும்
சங்கையென்ற மர்மமெல்லாஞ் சார்வாய்த் தோன்றும்
கந்தமலர்ப் பூங்குழலா ளன்னை பாதங்
கருத்தில்வைத்துக் கருவியெல்லாங் கணக்காய்ச் சொன்னேன்
இந்தமதி யெய்தினதா லாண்டே கேளீர் 
இனியுரைப்பேன் சவ்வீர சுண்ண மாண்டே. 

சவ்வீரசுண்ணம்
(தரு)
அதிவீரசுண்ணங்காண்- சவ்வீரமாலகாலவிஷங்காண். 
பாடல் எண்:- 1466
விதியிருந்ததினாலிந்தசுண்ணமு
மதிவிதவீரசவ்வீரபற்பங்காண்
மதிரவிராசகெம்பீரபூபதி
கெடிரணசூரமகிபதிராச- அதி. 

பாடல் எண்:- 1467
கட்டுமறுபத்துநாலுசரக்கையும்
வெட்டியெறிந்துவெண்ணீறதுபோலவும்
கெட்டிகாரசாரசிஷ்டையினால்வீரம்
பட்டுப்போய்மர்த்தனம்பற்பமதாகிடும்- அதி. 

பாடல் எண்:- 1468
வீரம்படநவரத்தினமர்தனம்
வேகமிதால்வச்சிரங்களுமர்த்தனம்
காரம்படநவலோகமுமர்த்தனம்
காலனென்றஎமன்கற்பத்தால்மர்த்தனம்- அதி. 

பாடல் எண்:- 1469
தாரத்தினால்செம்புவங்கமுமர்த்தனம்
தங்கமுதல்ரசிதங்களுமர்த்தனம்
சாரத்தினால்சரக்காதீதமர்த்தனம்
சத்துருமித்துருவறிந்துசெய்மாரணம்- அதி. 

பாடல் எண்:- 1470
வீரந்தனிலொருமேலும்பலமறிந்
தேனுமறுவகைநீரிலொருபடி
பானந்தனில்முப்புநானறிந்தோர்களிச்
சேனத்திலுமயச்சட்டிக்குளிட்டுமே- அதி. 

பாடல் எண்:- 1471
காரநீராலுஞ்சவ்வீரஞ்சுருக்கிட
காரசாரசெயநீரினில்கட்டிடு
மூரலற்றுமுழுக்கட்டுமிருரெண்டு
சாமத்திலுஞ்சுத்தபேதியாமாண்டையே- அதி. 

பாடல் எண்:- 1472
முப்புசுண்ணந்தனில்மூன்றுபணவிடை
கற்பூரமுங்காடிக்காரமுமைந்திடை
உற்பகநாபியுமுரவெங்காரமும்
இப்படிச்சூதமினமரிதாரமே- அதி. 

பாடல் எண்:- 1473
மடையன்புனுகுமனோசிலையந்தெடை
எடைபிசகாமலுமிந்திடைபூரமும்
நடைகுருவண்டுநாதவிந்துநீரில்
உடனேமூலப்புளியூட்டியரைத்திடே- அதி. 

பாடல் எண்:- 1474
விந்துநாதத்தினால்விட்டொருசாமமு
மந்தமரக்குமதுமைபோலாகவும்
சந்தயமில்லாசவ்வீரத்தின்மேலெழு
விந்தையெனும்ரவிவேகம்படப்பட- அதி. 

பாடல் எண்:- 1475
காயக்காயக்கதிர்காணசவ்வீரமு
மாயும்படியதுமாறிமாறியிடச்
சாயமேறிசரகாயுலர்ந்தாகிடில்
வேகங்கண்டுவீரமேவிடுமாண்டையே- அதி. 

பாடல் எண்:- 1476
தனியமூலப்புளிதான்சரகானதி
லினியதூளாக்கிடுமொருசட்டினில்
கனியஓரஞ்சதுகாரமதுபலம்
இனியகீழ்மேலுமிவ்வீரத்தையூட்டிடே- அதி. 

பாடல் எண்:- 1477
ஊட்டிமேலோடுஓரெழுகவசமும்
நாட்டிரவிவன்னிநாடிகடியில்
நீட்டியனலுமூலாக்கினைபாய்ந்திடில்
வேட்டியாகுமிதுவீரசுண்ணமிதே- அதி. 

பாடல் எண்:- 1478
வேகம்படவிந்தவீரசுண்ணத்தினா
லோகங்கள்நீறுநுழைந்ததில்பாய்ந்திடில்
சாகுமறுபத்துநாலுசரக்கது
மேகமிருபத்துஒன்றறுமாறுமே- அதி. 

பாடல் எண்:- 1479
ஆலகாலவிஷமானஅவ்வாறினால்
காலனேதுபின்கலிவருகாதுபார்த்து
மூலமெட்டுமுறித்ததுமோடியும்
பாலையாவதும்பாருஞ்சவ்வீரமே- அதி. 

பாடல் எண்:- 1480
வெள்ளியீரஞ்சமிதுசன்னங்குன்றிடை
யள்ளியேமூசையதுவுருகும்பதம்
கொள்ளியாஞ்சுண்ணங்கொடுத்திடப்பத்துகாண்
கள்ளமில்லிகனகமிதாண்டையே- அதி. 

பாடல் எண்:- 1481
தேய்வுமீரெட்டுஞ்செலுத்திமூசையில்
பாயுங்குன்றிடைப்பரீட்சையைப்பார்த்திடில்
வாய்வுபத்துக்குமேவைத்திடுதேனதில்
மாயுமதுநோய்கள்மரணங்காணாண்டையே- அதி. 

பாடல் எண்:- 1482
அசுவகெந்தியாதண்டம்வேர்ப்பட்டையுந்
தினுசுவேரிஞ்சிதிப்பிலிகோஷ்டமும்
வாதமடக்கிவேர்காற்பலம்
வசதியோர்சமன்வைத்தரைசுரமே- அதி. 

பாடல் எண்:- 1483
சுரசமதில்சூட்டிசுண்ணமும்
அரிசிதன்னிடையாவதுங்காண்கிலார்
துரிதமாகத்தொடுத்திடுமஞ்சுநாள்
பருதிகாலையுமாலையுமூட்டிடவே- அதி. 

பாடல் எண்:- 1484
ஓடுமூர்ச்சையுளமாந்தமுசல்வலி
சாடுஞ்சந்நிசந்திவாதத்தின்தோஷமுந்
தேடியுங்கடல்புக்கித்தீவாந்தரம்
நாடியோடிநாசமதாண்டையே- அதி. 

பாடல் எண்:- 1485
குமரகண்டன்குலைவலிபாரிசந்
திமிர்குஷ்டஞ்சேடத்தைவிட்டோடுமாய்
தமரதன்வாய்வுதலையிடிவிக்கலுங்
குமுறுங்கோள்கள்குலைவலியேகுமே- அதி. 

பாடல் எண்:- 1486
திசைகளோடித்திகைத்திடும்வாயுவும்
விஜையவீரம்விளங்கிடும்பாவமாய்ப்
பசையுநீர்கள்பறங்கிக்கிரந்தியுங்
கெசமிகுக்கெதிர்கீடுவராதுகாண்- அதி. 

பாடல் எண்:-1487
நடனமாதுவாலாம்பிகைதன்னருள்
நாதவிந்துமூலமுப்புவதால்சடம்
உடலிலுள்ளவூழ்வினைகளேகிடும்
முடமுடக்குக்கடிப்பதுமாறுமே- அதி. 

பாடல் எண்:- 1488
ஞானவெட்டிநாதாக்கள்மறைப்பெலாம்
பானத்தினால்விந்துநாதத்தினாலதும்
வானமும்மாரிமழைகள்பொழிந்திடும்
தானறிந்தேவீரசவ்வீரத்தாட்டமே- அதி. 

பாடல் எண்:- 1489
சூரனென்றசுத்தவீரசுண்ணமது
காரசாரத்தினால்கட்டுண்டுபோச்சுது
மாறகொடிவலுவேதைகளாகிடும்
வாலசூதத்தைமடக்கியேகொல்லுமே- அதி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1490
அம்பரமாஞ் சுழிமுனைதிரு நடன வோசை
அண்டபரி பூரணத் திலகுஞ் சோதி
தும்பிமுகன் வல்லபைதன் தாளைப் போற்றி
சுபத்தில்சுக மெய்ஞ்ஞான சுகத்தில் நின்று
எம்பிரா னெனதுகுரு முனியைப் போற்றி
எள்ளளவும்பிசகில்லை யானும் சொன்னேன்
நம்பியுங்காண் பாடுபட்டால் கற்பம் வாய்க்கும்
நாதவிந் தறியாரேல் நரகந் தானே. 

பாடல் எண்:- 1491
நரகமென்றுஞ் சொர்க்கமென்று நடத்தை காணார்
ஞானமென்றும் யோகமென்று நாட்டங் காணார்
துரகமென்ற வாசிதனி லேறி ஞான
சுழிமுனையைக் கண்டுமதி யமிர்த முண்டு
இரதமென்ற யானையைத்தான் குளிகை செய்து
இகபரத்தின் வெளிதாண்டி எய்துங் காலை
பரமபத சொர்க்கமென்ற தீபங் கண்டு
பரஞ்சுடரில் நின்றுதினம் பணிந்தே னாண்டே.  

(கொச்சகம்)
பாடல் எண்:- 1492
கடலலைக்கு மூறிவிடுங் காரணம்போல் கண்டமதில்
அடரவுமே தாரைவிட்டு அங்கிருந்து வூதிடவும்
கிடுகிடென அண்டரண்டங் கீழ்மேலுந் தத்தளிக்க 
வடம்பூட்ட வாசியினால் வங்குக்குளிருந் தூதினனே. 

பாடல் எண்:- 1493
ஊதிடவி னாடியெட்டு உள்ளத்தில் நின்றுமனம்
சாதனைசெய் தேயடியேன் சற்றுமறி யாமலுங்காண்
வீதியிந்த மூலம்விட்டு மேல்வரையில் வாசியொட்டி
சேதியறிந் தேன்விடஞ் சிக்கென்றும் வினாடியெட்டே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1494
நாடிடுங் காற்பத்து வோடிடும் வாசிநவத்துவாரத்திலும்
ஆடிடு நரக மரவத்தின் சாயலவ் வழிகளெல்லாம்
மூடிடுங் கற்ப முனைசுழி காணமூ லாக்கினியில்
தேடி யொருவழி பாயுங் கலையொன்று தேறினனே. 

பாடல் எண்:- 1495
காலாக் கினைகற்ப நாதவிந் தூறிய காலத்திலும்
வாலாம் பிகைநின்று மாழ்ந்திருந் தால்மூல வட்டமதில்
தாலாட் டியம்பிகை யமிர்தத்தைத் தந்து தசவருஷம்
நாலாம் பதவிக் கனுக்கிரக வாழ்க்கையை நாட்டினனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1496
தந்து மதியமிர்தந் தாயா ரிருந்தெனக்கு
வந்துகலி தீர்க்கும்வா லாம்பிகைப்பெண்- முந்தி
வாதவயித் தியத்தின் வாறறிய நாதவிந்து
சூதவித்தையின் னதென்றுசொன் னாள். 

பாடல் எண்:- 1497
சூதவித்தை யின்னதென்றுசொல்லவா லாம்பிகைப்பெண் 
வாதவித்தை மார்க்கம் வசனித்தே- சூதவித்தை 
ஆண்டு வொருவருஷ மாத்தா ளமிர் தமதைப்
பூண்டறிந்து கொண்டேன் புகழ். 

கௌரிபாஷாணச்சுண்ணம்- ஆனந்தக்களிப்பு
(தரு)
தனனத்தனன தந்தனானா- தான- தனனத்தனனத்தந்தனா தந்தனானா. 
பாடல் எண்:- 1498
சவுரியமிதுவென்னசிங்கம்- சரக்
கானதில்கெடிவீரகெவுரியுந்தங்கம்
கெவுரிசிந்தாமணிகாணும்- கெடி
யானபாஷாணத்தின் பற்பமுந்தோணும்
கௌரியில்கோடி தொந்தங்காண்- கனக
வேதைதாம்பரத்தின்வேதையிதுகாண்
எவருமறியாரிச்சூட்சம்- ஏம
மிப்புவியில்பரிபத்துக்குமோட்சம்- தன. 

பாடல் எண்:- 1499
பாஷாணம்பலமொன்றுவாங்கி- பழம்
புளிசுண்ணமோரிடைபானநாலிடைதான்
காமாயம்போல்கரைத்ததில்வந்- தெளிய
கருதிடுமூன்றுநாள்கணக்குச்சென்றெடுத்துத்
தாழாண்மைவாராதெளிந்து- சல
நீர்படிகொண்டுசவ்வீரத்தின்பற்பஞ்
சூழனந்ததாரபற்பங்- கெடி
துருசியின்பற்பமுஞ்சூதபற்பங்காண்- தன. 

பாடல் எண்:- 1500
சீனம்வெங்காரம்பொட்ளுப்பு- சாரஞ்
செய்கைவகைக்குப்பலங்கொண்டுதூளாய்ப்
பானத்திலிட்டுப்பூவில்- பணம்
பற்பமெல்லாமினியந்திடைதாக்கி
ஈனம்வராமற்கடிகை- ரவிமேல்
முகம்வீசிடவைத்துக்கலக்கி
ஊனதுவைக்கொண்டுபார்க்க- கலியாண
முருக்கம்பூவதுக்கொப்பாம்- தன. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900