திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 601- 700

பாடல் எண்:- 601
ஈராறுசுற்றமதில்- வன்னி- யெய்துஞ்சலநதிநான்கடந்து
நேராய்வாசிக்குதிரை- அது- நிர்ப்பந்தமாய்ப் பாய்ந்துஓடையிலே
ஆராய்ந்துமுப்பதுபேர்- கயிலை- அதிதசித்தவர்வந்தடக்கையில்தான்
மாராடியேமறித்தார்- வாசி- வல்லமையாலே விசுத்திவந்தேன்
அறுகோணஞ்சுற்றிமதில்- அது- ஆறுபத்துநெருப்பாறருகே
துருக்கல்மண்டபமும்- கனக- சொர்னத்தினால்ரத்தினச்சாவடியில்
திருமூர்த்திமூவருமே- தேவ- சித்தர்களும்வீற்றிருக்கையிலே
கருணைமலர்பொழிந்து- மூவர்- கண்டுமதிழ்ந்துகளிகூர்ந்தனர்- தன. 

பாடல் எண்:- 602
திருவள்ளுவனெனவே- ஞான- திருஷ்டியினாற்கண்டு தேவர்களும்
அருவுருவாய்மதுர- மலர்- வாசம்பொருந்திய ஆசிர்மத்தில்
இருமென்றவர்களுமே- கமல- இங்கிதஞான சுகாதிதத்தில்
உருவாய்ச்சொர்க்கப்பதமே- உப- தேசமுந்தந்து முத்தியளித்தார்
கருணாகடாட்சம்பெற்று- வா- சிக்காரிக்குதிரைமேல்சீனிவைத்து
ஏறிக்கனவேகமதாய்- அந்த- ஈரெட்டுமாமதில்தாண்டியபின்
குறிப்பாய் வருகையிலே- பின்- குவட்டுசித்தர்முப்பத்தாறுபேர்கள்
மறிப்பாய்மறித்திடவும்- வாய்வு- வாசியென்றபொடிதூவிவிட்டேன்- தன. 

பாடல் எண்:- 603
விசுத்தியறுகோணங்- காலி- வேகத்தினால்நடுமையத்திலே
உசத்தியதாயறிந்தேன்- வாசி- ஓகோகமலபீடமருகே
நிசுத்தம்வராமலுமே- கொண்டு- நேசமதாகமயேஸ்பரனார்
வசுத்தசித்தாதிகளும்- திரு- வள்ளுவனேஆசிர்மந்தனிலே
கனகரத்தினபீடங்- கருணை- கமலமலர்பொழிந்தேயருள
நினைவாய்மயேஸ்பரனும்- ஞான- நிஷ்டைதந்துயோக தீட்சைவைத்தார்
இன்பமாயுபதேச- முத்தி- யின்பத்துடன் தந்துஅன்பெனும்
மனதுகளிகூர்ந்து- சொன்- மாமதிமோட்சவரையளித்தார்- தன. 

பாடல் எண்:- 604
தத்துவந்தொன்னூற்றாறும்- அதில்- தசவாய்விலகப்பட்டபேர்களையான்
சுற்றத்தாரெண்ணாமல்- இவர்- தூரத்தாரென்றகற்றிவிட்டேன்
சத்தமதிலிருந்து- மூன்று- சாக்கிரவீடுமத்திபமதில்
கர்த்தரிருப்பிடங்காண்- தெய்வ- கமலமலராயிரத்தெட்டினில்
சித்திரச்சாவடியும்- ரத்தின- திவ்வியமாமணிக்கோபுரமும்
ரத்தினமதில்பதினாறு- ஜீவ- ரத்தினக்கோட்டைசுற்றமதிலும்
பக்தியுடன்வரவும்- வாசி- பதினாறுகலைசூழ்நதியருகே
தெத்துகாத்திடும்பேர்கள்- திரு- வள்ளுவனென்றறியாமலுமே- தன. 

பாடல் எண்:- 605
எழுபத்தீராயிரம்பே- ரெழுந்- தோடிவரும்போதினியாதுகாண்
வழுவாமலேயினிதான்- கவன- வாசிகொண்டுசீனிவைத்ததன்மேல்
இழுத்துஅங்குபடி- யானதி- லேறியேசவாரி தூறிடவும்
தொழுதேன்சத்தியனை- துதி- செய்துஆக்கினையிலேகினனே
அருள்பெற்றிலகுசுழி- சத்த- மாக்கினைவந்துஅடி பணிந்தேன்
இருள்போய்நிலவுபொழிந்- தினி- யேக்கமெல்லாம்விட்டுத் தூக்கமற்றுக்
கருவாய்விளங்குநாத- விந்து- கர்த்தவ்வியத்தைக் கண்டேமகிழ்ந்தேன்
பொருளாஞ்சதாசிவமும்- சத்தி- பொற்கமலநாடிப்போற்றி செய்தேன்- தன. 

பாடல் எண்:- 606
கதிர்மதிவான்புவியும்- நின்றுகாத்திருந்துபணியேவல்செய்யும்விதி
மதிநின்றிலகும்- விண்ணு- மண்ணுமுதல்வன்னிவாய்வதுவும்
நதிபதிகாரதுவும்- நவ- கோடிசித்தர்விந்துநாதமதும்
துதிநிதியுமெழுதோற்ற- மதுந்- தொழுதுதோத்திரஞ்செய்து பணிந்திடுங்காண்
முப்பத்துமுக்கோடி- முனி- தேவர்முதல்செந்துமிருகங்களும்
நாற்பத்தெண்ணாயிரம்- ரிஷி- நாரதர்கின்னரர்கிம்புருடர்
இப்படியாயிருக்கும்- இந்த- வேளைதனிற்கண்டுயான் பணிந்தேன்
ஒப்பனையாயெனக்கு- சொர்க்க- யோகதீட்சையுபதேசஞ்செய்தார்- தன. 

(கலித்துறை)
பாடல் எண்:- 607
யநமசிவ வென்று யான்வாசி யூதிநல் லாக்கினையில்
தினம்வைத் துகண்டத் தமர்வாசல் கீழ்வரை திசைபிசகா
மனம்வைத்துக் கும்பித்துச் சுழிமூல நாடி வாசிகொண்டு
தினந்துதித் தவரை யண்டத்தில் புக்குத் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 608
வயநம சியென்று வாசிகொண் டாக்கினை மதிரவியாய்த்
தயிரிய மாய்க்கண்ட தாரையில் நேசத் தனித்துகந்து
மாய மாமூல வாசியி னாலந்த வட்டத்திலே
செகமாய் மேல்நோக்கி ஆக்கினை புக்குத் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 609
சிவயநம வென்று வாசிகொண் டவரைச் சேவித்துமுன்
தவநெறியாய்க் கண்ட தாரை கீழ்நோக்கித் தவறுவரா
முவனச் சுழிமுனை திரிகோண வட்ட மூலத்திலே
தீவர மாயெழுந் தாக்கினை புக்குத் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 610
மசிவயந வென்று மூலங் குடிகொண்டு வாசியினால்
வசிபொக்கி ஷங்கொண்டு வாவென்று வாசி மதிரவியில்
துஜராஜ யோகங் கும்பித்து வூதிச் சுழன்றெழுந்து
தெசவாய் வெழுப்பி ஆக்கினை புக்குந் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 611
நமசிவ வென்று ஐவரை நாடி நலம்பெறவும்
தமதுலகா தீதம் பரப்பிர்ம மூலசந்நிதியில்
எமலபி காண மதிரவி கூடி யிசைவுபடத்
திமிர்தச் சுழியில்நின் றாக்கினை புக்குத் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 612
ஐவர் தெரிசனஞ் சத்தி சதாசிவ மருசுருவும்
பைவினை நீக்கி மதிரவி கற்பம் பழுதுவரா
தைபிறை கொண்டு தசதீட்சை பத்துஞ்சார்ந்திடிலோர்
வையகம் வானம் புவிமுதற் கொண்டு வசியமதே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 613
பராபரையொன் றாலெடுத்த பஞ்சகர்த்தா ளைவரையும்
தராதலமீரேழுமுயிர்ஜாதியொன்றாண்பெண்ணல்லவோ
நிராதரத்துள் ளேயிலகும் நீர்மேல்நெருப் பென்றறியார்
துராகதமாய் வெவ்வேறு சொன்னார்சு லோகமதே. 

பாடல் எண்:- 614
அல்லாகு தாவெனவு மைந்துகரம் வைத்துப்பணிந்
தில்லில்லா வெனத்துதித்து வினிமுடிசாய்ந் தேதொழுவார்
சொல்வா ருபதேசம் சூதர்களுஞ் சூலைவைத்து
வெல்வார்ஞா னப்பிரசங்கம் வெகுகிறிஸ் தவர்மனமே. 

பாடல் எண்:- 615
ஆத்துமம்பி ரிந்ததின்பின் னதிலிருப்ப தென்னவயம்
பூத்தான மாய்ப்புதைத்துப் போட்டுரவை சல்லாவே
சாற்றுமலர் பொழிந்து சாய்ந்துமுடி தானசையக்
காத்துசலாஞ் செய்தெங்கள் கர்த்தனே யெனத்துதிப்பார்

பாடல் எண்:- 616
உங்கள் தெய்வ மெங்கள்தெய்வ முண்டெனவும் வேறுசெய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்க ளுற்பவித்தார்
பங்கமதாய் வேறுசெய்யும் பாதகரே யங்குமிங்கும்
எங்கெங்கு மாய்நிறைந்த ஈசனென் றறிகிலீரே. 

மதபேத கண்டனம்
(தரு)
உங்களுக்கும்எங்களுக்கும்பேதமாமோ- ஆண்டே
உள்ளுணர்ந்துபார்க்கவொருஎள்ளளவில்லை. 

பாடல் எண்:- 617
அங்கமந்தரங்கமனுபோகஞ்செயி- லாண்டே
அவரவர்க்குதிரம்கேளிவேறேயுண்டோ- விந்து
திங்களுஞ்செய்ர திகேளியுங்களுக்காண்டே- அது
செகப்பாமோஎங்கள்விந்துகறுப்பாமோ- பின்னு
மங்களஞ்சேரம்புவியிலமைத்தவிந்துபுவியில்- மாதர்
கருக்குழிதனிலமைத்தவிந்து- பிர்ம
இங்கிதமுளையெழும்அங்கமாச்சு- இரண்டும்
எந்தன்விந்துதந்தைவிந்துமொன்றாய்ப்போச்சே- உங்க. 

பாடல் எண்:- 618
ஊற்றுக்கால்மாறாதகங்கைஓடக்கரையில்- நல்ல
உன்னரியநாதவிந்துதங்குகையிலும்- மறு
வேற்றுமையாயுங்கள்விந்துபெருத்ததென்ன- பேதம்
விளங்கவுமெங்கள்விந்துசிறுத்ததென்ன- சொல்லும்
மாற்றதீதமுண்டோஇந்தஊத்தைக்குழியில்- வேறு
மனிதர்களோபிறப்பார்மாதர்குழியில்- உடல்
பார்த்துக்கரை யேறினவர்க்கொன்றேசாதி- ஜெகம்
படைத்தரக்ஷகன்சொன்னபாதையிதாண்டே- உங்க. 

பாடல் எண்:- 619
மூலக்கருக்குழியில்நாதமும்விந்தும்- நல்ல
முன்னும்பின்னுங்கூடியுருவாகிவெளியில்- விந்து
ஓலமுள்ளபாலரமைத்துத்தித்தபின்பு- ஆண்டே
உங்கள் ஜென்மம்எங்கள்ஜென்மம்வெவ்வேறாசொல்லும்- பேதம்
ஞாலமுள்ளதேகமெல்லாநாதவிந்தின்கூறு- பின்னும்
நம்முடையஉம்முடையதேகம்வேறோசொல்லும்- ருத்திரன்
ஆலவிடமுண்டசிவனாருமிந்தக்கூறு- அரு
ளாதியுமந்தமுமிந்தக்கூறதுவுமாண்டே- உங்க. 

பாடல் எண்:- 620
அச்சதுவுநின்றதெல்லாமாண்டையினி- கேளும்
அதிலெழுந்தபறவுயிருமெல்லாமொன்றும்- மேலும்
உச்சிதமுடனுனக்குச்சந்தத்தென்னவுண்மை- உறுதி
யெந்தனுடலதுதாழ்ந்ததென்ன- சொல்லும்
இச்சடலமச்செடலமிரண்டுமொன்று- ஆண்டே
இம்மயமுமம்மயமுமெல்லா- மொன்று
வச்சதென்னதச்சதென்னரூபமெல்லா- மொன்று
வளமானமயமதுவும்வஸ்துவெல்லாமொன்று- உங்க. 

பாடல் எண்:- 621
ஊணியனுபோகஞ்செய்யசுந்தரலிங்கம்- எண்சாண்
உந்தனுக்குமெந்தனுக்குஞ்சரிதான்காணும்- மாது
வாணிவிந்துஉந்தனுக்குவுசந்ததுண்டோ- நல்ல
வஸ்துவிந்துஎந்தனுக்குறைந்ததுண்டோ- மேலும்
நாணிதனுலிங்கமெல்லாமொன்றேலிங்கஞ்- ஜெக
நாதவிந்தினாலுதித்தலிங்கமது ஆண்டே- உயி
ராணியென்றதசைவெல்லாமசைவமொன்றே- ஆதி
யந்தமென்றுமுருவர்க்கியானவாறாண்டே- உங்க. 

பாடல் எண்:- 622
உருவென்னபுவிதனில்பிறந்தவர்க்கு- ஆண்டே
உற்றுணர்ந்துபார்க்கநாதவிந்துமொன்று- திரு
கருவென்ன இருவரும்வளர்ந்தவீடு- அதைக்
கண்டுகொள்ளும்ரெண்டுருவுமொன்றே- காணும்
அருளருவென்னஆணதுவும்- பெண்ணதுவும்
அமைத்ததென்னரெண்டுமொன்றுஆண்டையேகேளீர்- இது
கூறுமறிந்தோர்கள்கதிர்மதியுங்கண்டோர்- இனங்
கூறறிந்துவாசிகொண்டுஅமுதுண்டோராண்டே- உங்க

பாடல் எண்:- 623
அங்குலமுமங்குவரட்டிப் பிரமாணமாண்டே- இது
அங்குமுண்டுஇங்குமுண்டுஅறிந்துகொள்வீர்- மதி
சங்கவெளிகண்டலிங்கமங்குலங்காணுஞ்- செயல்
தனக்கொன்றுஎனக்காறுகணக்காரோசொல்லும்- உங்கள்
மங்கையும்வந்தநாவினால்மைந்தரும்வந்த- இந்த
வழியறிந்துஒன்றமைத்தபிறப்பிரண்டோ- முன்பு
இங்குமங்குமெங்குந்தானாயிந்திரியங்காண்- வந்த
எறும்புகடையெண்பத்துநான்குயிருமொன்றே- உங்க

பாடல் எண்:- 624
இக்குலந்தனிலேஜீவராசி- இந்த
இகந்தனிலும்விளைந்தஇந்திரியங்காண்- ஜெக
மக்குலங்களாவதுமனேகமுயிர்காண்- ஆதி
அந்தமிதுரெண்டுகூடிசாந்தமிதுகாண்- கண்ட
துக்கமேஜெகமனைத்துந்தன்பமிதுவாம்- அருள்
துரியாதீதங்கடந்தோர்சூக்ஷதேகங்காணும்- அன்னை
மக்கள்மாதருமீன்றவாலாம்பிகைதான்- வகை
வையமும்வானமிருமா தளவாலாண்டே- உங்க. 

பாடல் எண்:- 625
பள்ளையாடுசெம்மறியின்குட்டியாமோ- நல்ல
பசுவைக்கிடாமருவக்கிடாரியாமோ- பின்னு
முள்ளமதிலென்குலத்திலுன்குலஞ்சேர்ந்தால்- புத்திரன்
உன்னுதொன்றோஎன்னுதொன்றோஉணர்வீர்காணும்இனி
துள்ளுஞ்சேவல்கொக்கைச்சேர அண்டாமாமோ- செழும்
நாரைகோழியைச்சேரக்குஞ்சதாமோ- நல்ல
பள்ளப்பாகல்வித்ததுவுஞ்சுரையாமோ- இந்தப்
பட்சியிலும்பேதாபேதந்தோன்றுமாண்டே- உங்க. 

பாடல் எண்:- 626
எள்ளளவும்பிழையில்லையென்நூல்காணும்- எந்தன்
குருவான அகத்தீசரருள்தான்காணும்- வேறு
கள்ளர்கள் வெவ்வேறுபிரித்துக்கருத்திலெண்ணி- ஞானங்
கண்டகண்டவிதம்சொல்லிக்கலங்கினார்காண்- பின்னுந்
துள்ளித்துள்ளிவாய்ப்பினத்திதுக்கிப்பார்க்கிலேசஞ்- செய்தி
சொன்னாலுஞ்செவிகேளாதுதுன்மார்க்கர்காணும்- மாது 
வள்ளலெனுமம்பிகைப்பெண்வரத்தால்வந்த- திரு
வள்ளுவசாம்புவமூர்த்திவம்மிசமாண்டே- உங்க. 

(விருத்தம்)
பாடல் எண்:- 627
கமலமல ராயிரத்தெட் டிதழில்வளர்ந்
திலகுமதி கருவூர் நாட்டில்
குமிழியொரு துளியில்பதி னாயிரத்தி
னொருதுளிதோய்ந் தெருதிக் கூர்ந்து
அமிர்தமதி யின்பசுக மதுரசர்
வாணியில மைத்த விந்தால்
திமிர்தமாய் ஜெகநாத ரருளஇந்த
வகையெல்லாந் தெளிவிப் போமே. 

பாடல் எண்:- 628
அண்டர்களு முனிவர்களு மறியாத
வெகுசூக்ஷ மறிய லானேன்
துண்டர்கள் தான் கூடிவெகு மதபேத 
முணர்ந்துமொழி தொகுப்புண் டாக்கிக்
கண்ட கண்ட படியெல்லாம் நூல்வசன
மாய்க்குறித்துக் கவிகள் பாடி
எண்டிசைமா ணாக்கரிவை உண்மையென்று
மயங்கவைத்து இறந்திட் டாரே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 629
கொத்திப் பிறப்பிலது கொம்பிலிளம் பாவைவிட்டுப்
பத்திமுளைத் ததுவுமிதி பாவலகு வாகுமோதான்
சுத்தியுடன் பூசைசெய்யுஞ் சுந்தரரே யென்மனையில்
சத்தியைநீ சேர்ந்ததனால் தரியாதோ கெர்ப்பமதே. 

பாடல் எண்:- 630
இஞ்சியிட மஞ்சளுண்டோ ஏலமிடச் சுக்காமோ
நஞ்சுகந்த எட்டியிலும் நல்லஎலு மிச்சையுண்டோ
துஞ்சுபுகழ் பூசைசெய்யுஞ் சுந்தரரே யென்குலத்தில்
வஞ்சியைநீ சேர்ந்ததனால் மைந்தன் தரியாதோ. 

பாடல் எண்:- 631
அம்புவியின் மானதனை யறியவரா கம்புணரக்
கும்பிலிரு வாகியதுங் குட்டி யளிக்குமோதான்
நம்பிறவி யந்தணரே ஞாயமுள்ள சூத்திரரே
வம்புரைத்தி ரென்குலத்தை மருவவுரு வாகாதோ. 

(கலித்துறை)
பாடல் எண்:- 632
குட்டிக் கிடாவும் பசுமேல் மருவக் குறியென்னகாண்
முட்டி யெருது முதிப்பதுண் டோஜெக மூடர்களே
மட்டிக் கிடாவுக்கு மாவின் பிறவிக்கும் வாறறிந்தால்
எட்டிக் கனிவந் தெலுமிச்சை யாகுமோ ஈனர்களே. 

(வெண்பா)
பாடல் எண்:- 633
மச்சமதைக் கூர்மம் மருவிக் கலவி செய்தால்
உச்சிதமாய்த் தாதுவிந்து வுருவாமோ- நிச்சயமாய்
எந்தன் குலத்தி லியல்வான வேதியரே
வந்தணை ந்தால் விந்துவுரு வாறு. 

பாடல் எண்:- 634
முல்லைமலர் கம்பநட்டு முக்காலும் நீர்தெளித்தால்
மல்லிகைப்பூ வாசம் வருமோ தான்- தொல்லுலகில்
சோதிவிந்து நாதந் துளியிலுயி ராமவர்க்கு
ஜாதிகுல பேதமில்லை தான். 

(கலித்துறை)
பாடல் எண்:- 635
ஈரேழு லோகம் பதினாலு யர்ந்திரு காலுயர்ந்த
நேரான ஜாதி ஆண்பெண் ணிரண்டும் நிரந்தரமாய்ப்
பேரான செங்கதிர் சந்திர னுண்டண்ட பிண்டமுண்டு
சீரான அன்னமுந் தண்ணீரு முண்டு தெய்வமின்றே. 

பாடல் எண்:- 636
புத்திமதி யில்லாமல் வெடிகோடி மந்திரம் புலம்பியுமே
சத்தியில் வாழ்ந்து தியங்குவர்காண் சர்வ லோகமெல்லாஞ்
சுத்தி தசாதியின் பேதகந் தன்னைச் சொல்லுமவர்
எத்திப் பணத்தைப் பறிக்குந் திருட ரியம்புவனே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 637
மண்டலத்தில் குருக்களென்று பேறும் பெற்று
மகத்தான தூளிதம ணிந்து கொண்டு
குண்டலங்கள் செவியிலிட்டுக் குல்லா சாத்திக்
கோகரணங் கெசகரண மிரண்டுங் கற்றுத்
தெண்டிரையிற் பலவிதமாய்ப் பொய்கள் சொல்லிச்
சீஷருக்கு முபதேசந் தெளியச் சொல்வார்
ஒன்றுமில்லை யவர்கள் கையில் வித்தை யாச்சு
உள்ளவர்த்த மானமிதை யுரைசெய் வேனே. 

பாடல் எண்:- 638
நேத்திரத்தில் துகில்வாங்கி யுடுத்திக் கொள்வார் 
நின்றவரை வல்லியென்றுந் துரத்திக் கொள்வார்
கோத்திரங்கள் விளங்கமுத்தி தருவோ மென்று
கூறுசொல்லி நீறதனைக் குழைத்துச் சாத்தி
சாஸ்திரத்தைச் செவிதனிலு மாண்டே கேளீர்
தவமாகு மஞ்செழுத்தைச் சாற்று வார்கள்
சூத்திரத்தை யின்னதென் றறிந்து பார்க்கச்
சொல்லரிய வைம்பூத மாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 639
உற்றுநின்ற சாஸ்திரத்தைப் பார்த்துப் பார்த்து
ஊணுகிடை யாமலுந்தான் பிரட்டிப் பேசி
பத்தரென்றுங் குருக்களென்றும் வகுத்துச் சொல்வார்
பரகதியுந் தருவமென்று பணம்ப றிப்பார்
வித்துநின்ற விடங்காணார் வேருங் காணார்
விளங்குபரந் துலங்குகின்ற வீடுங் காணார்
எத்தவமுந் தருளமென் றுலகஞ் சுற்றி
யெளியோர்கள் பாவமெல்லா மினிக்கொள் வாரே. 

பாடல் எண்:- 640
உடலெடுத்த நேர்மைகண்டால் குருக்க ளாகும்
உள்ளுணர்ந்து பாராதார் மருக்க ளாகும் 
செடமெடுத்த வுயிர்கள் கண்டால் தீட்சை யாகுஞ் 
செயலறியார் குருபூசை தெளிந்து கூடார்
குடலெடுத்த பசியறியறிந்தா லாசா னாகுங்
குறிப்பறிந்து கொள்ளாதார் போசா னாகும்
சுடலடுக்குங் கணக்கதுவு மான தாலுஞ்
சொல்லுகிறேன் மந்திரமும் நில்லா தாண்டே. 

பாடல் எண்:- 641
அடியான பாதமதும் வளர்ந்த தெங்கே
ஆதிநட னம்புரிந்த தந்தை யெங்கே
வடிவான மூங்கிலெங்கே வட்ட மெங்கே
வளர்ந்ததெழுந்த ஆயிரத்தெட் டிதழு மெங்கே
கொடியான மகமேரு வளர்ந்த தெங்கே
குருவென்றுஞ் சீஷனென்றும் பிறந்த தெங்கே
முடிவான சிரமெங்கே சடல மெங்கே
முதலிருந்த குருவெங்கே அழைத்த தேதோ. 

பாடல் எண்:- 642
ஓதுகின்ற வேதமது பிறந்த தெங்கே
உன்னியநீ ரிறைக்குமிட முயிரு மெங்கே
வாதுகள்செய் மந்திரமும் பிறந்த தெங்கே
மறைவேத சைவர்களும் பிறந்த தெங்கே
சூதுகள்கண் டிவையறிந்தால் குருக்க ளாகுந்
தொல்லுலகி லறியாதார் நம்மி லொன்று
ஏதுமில்லாப் பொய்களவு சொல்வார் காணும்
இவைராஜ யோகியென்று மியம்ப லாமே. 

பாடல் எண்:- 643
விட்டகுறை வருமளவு முபதே சங்காண்
மெய்யுடலுந் தளர்ந்துபுவி மேலு நோக்கித்
தட்டழிந்து விழும்போது ஓதி வைத்த
சாஸ்திரத்தில் க்ஷணப்போது மறிக்கப் போமோ
எட்டுரெண்டு மறியாதார் குருக்க ளாமோ
என்னையினிப் பறையனென்றுந் தள்ள லாமோ
மட்டமரும் பூங்குழல்வா லாம்பி கைப்பெண்
வங்கிசத்தி லுதித்தசாம் புவனு நானே. 

பாடல் எண்:- 644
நரகமதைத் தவிர்த்து சொர்க்கந் தருவோ மென்பர்
நாட்டிலுள்ள காரியமாங் குருக்கள் வந்து
நரகமது நின்றதற்கு நிறந்தா னென்ன
நமனான எமனைவெல்ல நானே யென்பார்
இறப்பிறப்பு மறிந்துணர்ந்து உரைத்தா னாகில்
எம்பிரா னென்றவரைப் பணிவேன் காணும்
மறுபிறவி யுண்டென்பா ருலகத் தாசான்
மதியெனது கருத்தினிலுங் காணே னாண்டே. 

பாடல் எண்:- 645
இருவினையுந் தனையுரைத்து வுலகத் தாசான்
இறந்தவுடல் விழுந்தாவி பிரிந்த பின்பு
மறுசெனன மாகிவந் துடலெ டுத்து
வாழ்புவியில் வருவமென்று வகுத்துச் சொல்வார்
குருவறிந்து புவியில்வந்து வயது நூறு
குறிப்பாகப் பிறந்திருந்தால் குழந்தை யாமோ
அறிவதிக நற்பிறவி பிறப்பா ரென்று
மதிதவெகு பொருள்களெலாம் பறிப்பா ராண்டே. 

பாடல் எண்:- 643
விட்டகுறை வருமளவு முபதே சங்காண்
மெய்யுடலுந் தளர்ந்துபுவி மேலு நோக்கித்
தட்டழிந்து விழும்போது ஓதி வைத்த
சாஸ்திரத்தில் க்ஷணப்போது மறிக்கப் போமோ
எட்டுரெண்டு மறியாதார் குருக்க ளாமோ
என்னையினிப் பறையனென்றுந் தள்ள லாமோ
மட்டமரும் பூங்குழல்வா லாம்பி கைப்பெண்
வங்கிசத்தி லுதித்தசாம் புவனு நானே. 

பாடல் எண்:- 644
நரகமதைத் தவிர்த்து சொர்க்கந் தருவோ மென்பர்
நாட்டிலுள்ள காரியமாங் குருக்கள் வந்து
நரகமது நின்றதற்கு நிறந்தா னென்ன
நமனான எமனைவெல்ல நானே யென்பார்
இறப்பிறப்பு மறிந்துணர்ந்து உரைத்தா னாகில்
எம்பிரா னென்றவரைப் பணிவேன் காணும்
மறுபிறவி யுண்டென்பா ருலகத் தாசான்
மதியெனது கருத்தினிலுங் காணே னாண்டே. 

பாடல் எண்:- 645
இருவினையுந் தனையுரைத்து வுலகத் தாசான்
இறந்தவுடல் விழுந்தாவி பிரிந்த பின்பு
மறுசெனன மாகிவந் துடலெ டுத்து
வாழ்புவியில் வருவமென்று வகுத்துச் சொல்வார்
குருவறிந்து புவியில்வந்து வயது நூறு
குறிப்பாகப் பிறந்திருந்தால் குழந்தை யாமோ
அறிவதிக நற்பிறவி பிறப்பா ரென்று
மதிதவெகு பொருள்களெலாம் பறிப்பா ராண்டே. 

பாடல் எண்:- 646
வித்திருந்தால் விளைவுமுண்டு மரந்தா னுண்டு 
வேரற்றால் மரமதுவுந் தளிர்க்கு மோசொல் 
சத்தியமா மொழியவுங்கா ணாண்டே கேளீர் 
சாஸ்திரத்தை மெய்யெனவு நம்பொண் ணாது
செத்தசவ முயிரொடுங்கி நின்ற போது
சிறுமதலை யாய்ப்புவியிற்  பிறந்த தேது
இத்தையினி யறியாத உலகத் தாசான் 
இறந்தவுடல் பிறக்குமென் றியம்பு வாரே. 

பாடல் எண்:- 647
பாதமது மாயிரந்தா னுள்ள அட்டை
பதறியது காதவழி நடக்கு மோசொல் 
பேதமில்லா சாஸ்திரங்கள் நமக்குச் சொல்லும்
பிரபலம்போல் தூக்கம்வரு மறிந்தி டாது
வேதமதை நமக்குரைப்பா ரவர்கள் தங்கள்
விதிப்பயனை யின்னதென்று விளங்க மாட்டார் 
நாதவிந்து வுற்பவமே யெவருங் காணார்
நாட்டிலுள்ள குருக்களறி யார்கள் தானே. 

பாடல் எண்:- 648
பாரான வுலகத்து மாண்பர்க் காகப்
பகிர்ந்துரைத்தே னறிவுள்ளோ ரறிந்து கொள்வீர்
கூரான கோழியுடன் போத்து மாகில்
கொடிதான வலியனுடன் காடை கேளீர்
பேரான கடுநாரை கோட்டான் கிள்ளை
பெரிதான கெருடனுடன் குட்டி நாரை
சீரான சகுனமது நமக்குக் காட்டுந்
தீங்கதுக்கு வருவதுதான் தெரியா தாண்டே. 

பாடல் எண்:- 649
இலக்கணநூ லறிந்துகவி யினமாய்ப் பாடும்
இவர்களுரைப் பதுவாஞ்சை யிகத்துக் கொக்குஞ்
சிலைகள்கல்லு மனிதர்கள்மேல் சீர்தான் கோணா
செம்பொன்பொருள் பறித்துமிகச் செகத்தில் வாழ்வார்
துலக்கமில்லாக் கவிமிகவுந் தொடுப்பார் புஷ்பந்
தொடுப்பதுபோல் வயிறுவளர்த் திடுஞ்சூ தாகும்
கலக்கம்வரு மவரவர்க்கே யெழுத்தெல் லாம்போய்க்
கர்மவினை யாலொழிய வருந்து வாரே. 

பாடல் எண்:- 650
ராசிலக் கினமிருபத் தேழுங் காற்று
நாடதிலு மிரந்தைய முண்டே செல்தார்
வாசியிருந் துலவும்மா வாசி காணார்
வயதுகுறைந் திடுநூறில் சுவாசங் காணார்
கோசபீ சத்தொழிலுங் குறியுங் காணார்
குறிப்பறிந்து மூலத்தின் குறியுங் காணார்
ஆசுமது ரக்கவிதை பாடும் பேர்க்கு
அவரவர்க்கி ரட்டியிவர்க ளனுபோகந் தானே. 

பாடல் எண்:- 651
தனக்குவரும் வழியறிந்து விதிக்க மாட்டார்
தரணிதனி லெவருக்குஞ் சாஸ்திரஞ் சொல்வார்
செனிக்கும்வினை நல்வினை தீ வினையுங் காணார்
தேய்பிறையும் வளர்பிறையுஞ் செப்பார் காணும் 
சுணங்கனது போல்திரிந்து ஜோஸியஞ் சொல்வார்
சூதர்களைப் போலொருபொய் சொல்வா ரில்லை
எனக்குமுனக் காதியிலும் விதித்த தந்தை
இந்திரியக் கூறறிந்து இயம்பா ராண்டே. 

பாடல் எண்:- 652
அந்தணரும் வேதியருஞ் சாஸ்திரி மாரு
மகிலமெல்லா மிரட்டுகின்ற ஆசான் மாரும்
சந்தமதாய்ச் சொல்லியென்கைப் பொருளும் வாங்கி
சாஸ்திரத்தால் முகூர்த்தமெனுஞ் சாந்தி செய்வார்
எந்தன்விதி வந்ததென்றால் நானும் போறேன்
எனக்குசற்றுங் குறைந்ததென்றா லினியங் கேது
சொந்தமுட னுங்கள்மனை வேத மோதுந்
தொல்லுலகி லுள்ளமட்டும் வாழொண் ணாதே. 

பாடல் எண்:- 653
தனக்கவஸ்தை வருகிறதை யறியா மற்றான்
சாஸ்திரங்கள் சொல்லிவயிறு தனைவ ளர்ப்பார்
கணக்காக வகுத்துமிவை பார்க்கும் போது
கருத்திலுந்தான் மறுபிறவி கனவிற் காணேன்
எனக்குமுத்தி தருவமென்றா ரவரு மாண்டார்
எளிதான தீட்சைபெற்று மிவரு மாண்டார் 
உனக்கெனக்கென் றறிந்துவுரை யுணர்ந்து கொள்வார்
உகமையறிந் தசருரைத்துப் பறையென் றாரே. 

பாடல் எண்:- 654
உகமையறி யாமனிதர் கோடா கோடி
உரையறியா மாந்தரொரு கோடா கோடி
வகையறியா சாஸ்திரிமார் கோடா கோடி
வண்மையில்லாத் தெளிவுடையோர் கோடாகோடி
திகையாம லெனைப்பறைய னென்று சொல்லுந்
தீங்காண மாந்தரெனைத் தள்ளினார்கள்
நகைபுரிந்து புரமெரித்த சோதி நாதன்
நளினபுவி படைத்தவகை நாம்சொல் வோமே. 

ஈஸ்வர சிருஷ்டி
(தரு)
ஆதியானசோதியிந்தப்புவிபடைத்த-முன்னோர்
அருமையச்சொல்லுகிறேனாண்டையேகேளீர். 

பாடல் எண்:- 655
ஆதியில்லைஅந்தமில்லைரூபமில்லை- காலம்
அண்டரண்டபேரண்டமும்பிண்டமில்லை
ஜாதியில்லைநா தியில்லைஆண்பெண்ணில்லாக்- காலந்
தாணுவாய்நாதவிந்துவூணுதலாக
ஓதியதோர்வேதமில்லைமறையோரில்லை- சாஸ்திரம் 
ஒன்றுமில்லையன்றுமின்றுமொன்றதாச்சு- இந்த
சேதிவரலாறறியநாள்செல்லுஞ்- ஜெகம்
ஜெனனமெடுத்தாலிந்ததேகங்காணாண்டே- ஆதி. 

பாடல் எண்:- 656
மின்னலிடிகாற்றுமழைக்கொண்டலுமில்லை- நல்ல
விண்ணுமில்லைமண்ணுமில்லைவேதமுமில்லை- மேலுஞ்
சொன்னமில்லைஅன்னமில்லைதண்ணீருமில்லை- இந்த
ஜெகதலம்படைத்தவகைசெப்புவேன்காணும்- ஆதி
பின்னுமில்லைமுன்னுமில்லைபேருலகிலில்லை- வளம்
பெருமையைச்சொல்லவும்யானும்பேர்தானில்லை- முன்பு
தன்னையறிந்தென்னைவளர்த்தன்னையினாலும்- இந்த
சர்வலோகமானவகைசாற்றுவேனாண்டே- ஆதி

பாடல் எண்:- 657
ஈரேழுபதினாலுலகுமெங்கெங்குமில்லை- நல்ல
இமையோர்களிந்திராதியில்லாதநாளில்- ஆதி
பேரிருபத்தேழுநக்ஷத்திரங்களில்லாக்காலம்
பேருலகும்வந்தவகைபேசுவேன் காணும்- அந்தம்
வேரேழுவாரிதிவானம்வந்தவகைகாண்- இந்த
மண்ணும்விண்ணுமுற்பவித்தமார்க்கமிதாகும்- புவி
காருலகுமேபடைத்தகர்த்தனருளால்- இந்தக்
கருத்தையுநூல்விதியாய்க்கண்டேன்காணாண்டே- ஆதி. 

பாடல் எண்:- 658
தாபரசங்கமுமில்லைசெந்துகளில்லை- நல்ல
தாணுவாய்விளங்குங்கதிர் தண்மதியில்லை
பாரதனிலாதித்தன் நக்ஷத்திரமில்லாக்- காலம்
பார்படைத்தஓர்முதலைப்பாடுவேன்காணும்- ஆதி
ஆரபாரமாயுலகிலிருதான்மூடி- மேலும்
ஆதியென்றஜெகத்திருள்முனைதானாடி- விந்து
வாரதெழுபாருக்குள் ளேவிளங்கியிருந்த- நன்றாய்
வழுவாமலுமெழுந்தவாறுசொல்லுவேனாண்டே- ஆதி. 

பாடல் எண்:- 659
பாரானவட்டம்பத்தனந்தங்கோடி- நல்ல
பரிவாசலதுரெட்டிபகருவேன்காணும்- கனல்
நேரானவன்னியதுமிரட்டியதாகும்- நிலை
நெறியானவாசிவெளிரெட்டியதாகும்- பின்பு
வாறதொருநாதத்திலும்விந்துதோன்றி- மதி
வலுவானவிந்தில்சதாசிவனுந்தோன்றி- செயல்
சீரானசதாசிவத்தில்மயேஸ்பரன்தோன்றி- பின்பு
சிறந்தமயேஸ்பரத்தில்ருத்திரன்தோன்றி- ஆதி. 

பாடல் எண்:- 660
உதித்ததொருருத்திரனில்விஷ்ணுவுந்தோன்றி- மேலும்
ஊன்றியும்விஷ்ணுவுக்குள்பிர்மாவுந்தோன்றி- யுடல்
கதித்ததொருபிரமாவிலாத்துமந்தோன்றி- கரு
கனமான ஆத்துமாவிலாகாசந்தோன்றி- ஆண்டே
சேதித்தஆகாசந்தனில்வாயுவந்தோன்றி- சித்தி
சிறந்தருளும்வாய்வதுக்குள் தேயுவந்தோன்றி- மூலந்
ததித்ததேய்வுதனிலுமப்புவந்தோன்றி- மிகவுஞ்
சதிரான அப்பதுக்குள் பிருதிவியாண்டே- ஆதி. 

விருத்தம்
பாடல் எண்:- 661
வளர்ந்தருளும் புவிதனிலு மாண்டே கேளீர் 
வளமாகும் வித்தில்லா விளைவுண் டாகித்
தளர்ந்ததிக அஞ்சுருவா யாணி யாகி
சர்வலோ கங்களுக்குத் தாணு வாகித்
தெளிந்தெழுந்த அண்டபிண்டம் கண்ட மாகி
ஜெகத்திலுள்ள ஜீவஜெந்து செழிக்கத் தானுங்
குளிந்தரு ளாறாதாரக் கமல மாகிக்
கொண்டுநின்ற சுழிமுனையா மகமே ராண்டே. 

பாடல் எண்:- 662
ஓங்கார மாவதுவு மகமே ராகும்
உதித்துநின்ற பர்வதத்தைச் சுற்றி மேவும்
நீங்கரிது அசையாத கிரிதா னுண்டு
நினைவரனு மேதெனவே யாண்டே கேளீர் 
வாங்கார அகரமுடன் உகரம் ரெண்டு
மருவிநின்ற நகரமுடன் மகரத் தோடு
பாங்கான சிகரமுடன் வகரம் ரெண்டு
பரிவான யகரமாதா லக்ஷரமுண் டாச்சே. 

பாடல் எண்:- 663
கூறுகின்ற அக்ஷரமு மஷ்ட வெற்பாய்க்
கொள் கிறதோர் சுழிமுனைதான் மகமே யாகும்
மேருவெனு மெழுந்தநுனி முனையி லேதான்
விரிவதிலுன் சிவசிங்கா தனத்தின் மீதில்
சீர்கொண்ட பார்வதியுஞ் சிவனு மங்கே
ஜெகந்தழைக்க எழுந்தருளி யிருப்பா ரொக்க
பேர்கொண்ட விருவருந்தா னிருந்த வீட்டில்
பேசுகிறே னெனமூன்று மொன்றாச் சாண்டே. 

பாடல் எண்:- 664
மூன்றுபதி யேதென்றா லுணரக் கேளீர் 
முதல்மேலு மடியினிலும் நடுவில் தானும்
வேன்றுமகா மேருவுந்தான் முடியி லாதல்
விதமாக எழுந்துநிற்கு மென்மே லாகத்
தோன்றிநிற்குங் கயிலாச மிதுகா னென்று
துடர்ந்துநிற்பா ரீஸ்பரனீஸ் பரியுந் தானாய்த்
தூண்டிமுடி யாதவொளி பிரகாசத்தைச்
சொல்லுகிறே னுலகெங்குஞ் சுபஸ்த மாண்டே. 

பாடல் எண்:- 665
அக்கினியு மேருவுக் கடிதா னாகும்
ஆதித்த னதினடுவில் பிரகாசிக்கும்
திக்கினிய சந்திரனு முடிய தாகுஞ்
செப்புகிறே னதற்கப்பா லளவற் றேபாழ்
தக்கினிமுப் பாழதுக்கு மூன்று பேருஞ்
சாற்றுகிறேன் சிவம்பாழாஞ் சத்தி பாழாம்
கைக்கினிபோல் பரமதுக்குப் பரையி னாட்டங்
கருத்துபோ லளவற்ற பெரும்பா ழாண்டே. 

பாடல் எண்:- 666
அளவற்ற பெரும்பாழின் வெளியி லேதான்
ஆதியும னாதியுமாய் ரூப மாகி
அளவற்ற பேரொளியா யானேகங் கோடி
ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியு மல்ல
விளைவற்று நின்றதல்ல விளையா தல்ல
வித்தாகி நாதாந்த ஞான ரூபக்
களைபெற்று இலங்கும்பிர காச மான
கதிர்மதியி லொருபுறமாய் மலராப் பூத்தே. 

பாடல் எண்:- 667
கண்ணுருவாய்க் கண்டதல்ல காணா தல்ல
கருத்தாலு மதித்ததல்ல கருதா தல்ல
எண்ணுருவாய் நின்றதல்ல இல்லா தல்ல
எழுதிமுடிந் தறிந்ததல்ல அறியா தல்ல
விண்ணுருவு மானதல்ல ஆகா தல்ல
வேதமறை யொழிவதல்ல ஒழியா தல்ல
நண்ணுதலின் நின்றதல்ல நில்லா தல்ல
நயம்பெறவஞ் சுயம்பெனும்பிர காச மாண்டே. 

பாடல் எண்:- 668
மந்திரத்தால் கற்பத்தால் கற்கா தல்ல
வாசித்து அறிந்ததல்ல அறியா தல்ல
தந்திரத்தா லெடுத்ததல்ல ஏடுக்கா தல்ல
க்ஷணத்துக்கு ளிருப்பதல்ல தனதே யல்ல
சுந்தரமாம் ரூபமல்ல அரூப மல்ல
சொல்லாத வடிவல்ல சோதி ரூபம்
அந்தரமாய் நிராதார வெளியி லேதான்
அடியிலொரு கொடிமுடியாய்த் தழைத்ததாண்டே. 

பாடல் எண்:- 669
தழைத்தெழுந்த கயிலாசந் தள்ளி டாமல்
தாங்கினது மேதென்றால் நிராதார ரந்தான்
வழைத்தநிரா தாரத்தை ஆதாரந் தாங்கும்
வளமான ஆதாரந் தன்னைத் தானும்
முளைத்தெழுந்த மூலாதி பாதந் தாங்கும் 
முதல்மூல மக்கினிதான் சூக்ஷ மாகிச்
செருத்தெழுந்த மூலாதி பாத மாண்டே
செப்புகிறேன் கீழ்மேலாய்ச் சிறந்து நின்றே. 

பாடல் எண்:- 670
ஆதார மாவது மண்டந் தானாய்
அழகான பொன்னிறங்காண் மகமே ராகும்
நிராதார மாவதுவு மஷ்ட வெற்பு
நெறியதுநி தானமெனுஞ் சிவரூ பங்காண்
சூதான கயிலாச மீதா னத்தில்
தோன்றியநி ராதார சூக்ஷங் கண்டாய்
தாதுநிரா தாரமதிலா தாரந் தோன்றித்
தழைத்தவா தாரமதில் பிருதிவி யாண்டே. 

பாடல் எண்:- 671
வந்துதிக்கும் பிருதிவியி லன்னந் தோன்றி
வகையான அன்னமதில் மச்சை தோன்றிச்
சிந்தையுள்ள மச்சைதனி லுதிரந் தோன்றித்
திரமான வுதிரமதி லூனீர் தோன்றி
முந்திநின்ற வூனீரில் நிணமுந் தோன்றி
முதலான நிணமதில்சுக் கிலந்தான் தோன்றி
விந்துதித்த நாதமது மிரண்டுங் கூடி
விந்துகலந் தழைத்தவகை விளம்பி னேனே. 

பாடல் எண்:- 672
சென்னல்முத லானதவ விந்துங் கூடிச்
செழித்துலகந் தழைத்துபுவி வளர்ந்து மேவி
அன்னமயந் தன்னிலொரு அவ்வியந் தோன்றி
அவ்வியத்தி லசத்ததீ வுகளுந் தோன்றி
முன்னைவருந் தாதுவினில் நாற்காற் செந்து
மேலானபக்ட்சிநரர் தாப ரங்கள்
சொன்னவிந்தி லமைத்தஜீவ ராசி யோடு
தொல்லுலகி லூர்வணவுந் தோன்று மாண்டே. 

பாடல் எண்:- 673
ஜெனித்தவகை யெவ்வாறு விளம்பக் கேளீர் 
ஜெகந்தழைக்க எழுந்த பரஞ் சிந்தை கூர்ந்து
மனித்தசதா சிவனையருள் புரிந்து மேவும்
மகத்துவசதா சிவனுமயேஸ் பரற்குச் சொல்லத்
தனித்துமயேஸ் பரனும்ருத்தி ரற்குச் சொல்லச்
சாதகமாய் ருத்திரன்மா லுக்குச் சொல்ல
இனித்திருந்த திருமாலை யழைத்து ரைக்க
எழுந்தருள நாலுலகுந் தழைத்த தாண்டே. 

பாடல் எண்:- 674
மண்டலமுந் தழைக்கஅயன் நினைத்த போது
மருவுமுமை யாளுடையா ளன்னை யானாள்
நின்றஅய னந்தவட்டப் பீட மானார்
நேராகு மோரெழுத்து நாத மாச்சு
அண்டமதில் நின்றசதா சிவன்தான் காணும்
ஆதிபர நாதமதில் விந்துவானார்
என்றிருவர் மனமகிழ்ந்து லிங்கத் துள்ளா
யிருந்துலகம் ஜீவசெந்து தழைத்த தாண்டே. 

பாடல் எண்:- 675
திருமாலு மூலமதாய் நின்று மேவிச்
செழித்துஅவன் லிங்கமதாய் வளர்ந்து ஓங்கிக்
கருவான சத்தியது நாத மாச்சு
கருதும்பரா பரமெனவும் விந்து வாகும்
மருவான சிவனுமையும் நாத விந்து
மண்ணிலெழு தாபரமும் வளர லாச்சு
உருவாகு முகில்நாதந் துளியே விந்து
உவந்துலகந் தழைத்துயிரு மெடுத்த தாண்டே. 

பாடல் எண்:- 676
என்றுமுள்ள படிபுவிகள் தழைத்த வாறும்
எண்ணரிய ஜீவசெந்து வளர்ந்த வாறும்
கண்டறியும் ஜெகம்படைத்த கருத்தின் வாறும்
கருவிகர ணாதிமுதல் செனித்த வாறும்
ஒன்றுபொரு ளொன்றறிந்து வளர்ந்த வாறும்
உள்ளுணர்ந்து பாராதா ரறிந்த வாறும்
தெண்டிரையில் விளங்குகின்ற பரத்தின் வாறுந்
திருவுளத்தால் நினைக்கஇந்தப் படிதா னாண்டே. 

பாடல் எண்:- 677
படர்ந்தெழுந்த புவிதனிலு மாண்டே கேளீர் 
பலநூலுஞ் சாஸ்திரங்கள் விதிக்க வேண்டிச்
சடைமுடிமேல் தரித்தருளும் பரத்தை நோக்கித்
தாளிணையில் விழுந்துபிரமா சரணஞ் செய்து
திடத்துடனே ஜெகந்தழைக்கத் திருத்தி மேலாம்
திதிவாரம் நாள்கள் திங்கள் கூறுவோம்நாம்
விடுத்துவினி யதில்விதிப்போ மியல்பாய்த் தானும்
மெல்லடியில் விழுந்துவாய் புதைத்து நின்றான். 

பாடல் எண்:- 678
அடியில்விழுந் தெழுந்துபரா பரனை நோக்க
ஆதிபரா பரனுமவ ரேது சொல்வார்
கொடியமகா மேருவெனும் வரைதா னுள்ளே
குடியிருந்த முப்பாழுக் கப்பாலே தான்
படியுமொரு ஆறுவரை அதிகந் தோன்று
பகர்ந்தவரை கடந்தந்த வட்டத் துள்ளே
முடிவிலொரு வரைதோன்றுஞ் சூக்ஷத் துள்ளே
முதல்வேதம் பரையதுக்குள் முடிந்த தாண்டே. 

பாடல் எண்:- 679
அரன் மொழியைக் கேட்டுஅய னாண்டே கேளீர் 
அடுக்கான அகண்டவெளி யதனி லேதான்
வரமளித்து வானிலெழு லிங்கத் துள்ளே
வகுத்துரைத்த சரஸ்வதியின் கருவி லேதான்
திருவிருந்து விளையாடும் விரிவுக் குள்ளே
செழித்தசுழி யொடுங்குகின்ற பரையை விட்டு
அறிவறிந்த பலநூல்கள் புவியி லேதான் 
அறிந்தமட்டும் வகுத்துரைத்துப் பிறந்தே னாண்டே. 

பாடல் எண்:- 680
பரையைவிட்டு நானுதித்து வந்த மாத்திரம்
பகர்ந்தெழுந்து அய்யரென்னை யுகந்து மேவிக்
கரையடங்கா லிங்கமதைப் படைத்து வைத்தோம் 
கருதுகின்ற சரியையுடன் கிரியை யோகம் 
துரையறிந்த ஞானமிது நாலுவேதஞ்
சொல்லிவைக்க வேண்டுமென்று வேண்டி னார்கள் 
நிறையறிந்து அவரவர்க்கு லபித்தா ரீசன்
நீள்புவியி லிப்பிறப்பு மிரண்டும் போச்சே. 

பாடல் எண்:- 681
இந்தமொழி ஐயரென்னைப் பார்த்து மேவி
எடுத்துரைக்கப் பார்த்தடிமை யியம்புங் காலை
யெந்தைபிரா னீயாச்சு நீநா னாச்சு
எனைவகுத்த பரைக்குள்ளே யிருந்திட் டேனான்
சந்தேகஞ் சொல்லஇனி வேண்டா மென்று
தாள்பணிந்தெ ழுந்துநின்று கரங் குவித்து
விந்துதனி லேபிறந்த ஜெனன மாச்சு
மேலான பலவிதமாய் விதித்தோ மாண்டே. 

பாடல் எண்:- 682
வேதமெனும் புராணநூல் விதிக்கச் சொல்லி
விளம்புகின்ற ஐயரடி விழுந்து போற்றிச்
சாதகமாயொருவிபரம் புகல்வேன் காணுந்
தரணிதனில் செந்துவெல்லாந் தழைக்க வேண்டிப்
போதகமா யுங்களையான் புகழ்வே னாகில்
புவிதனிலு மதுகண்டு துதிக்க வேணும்
ஆதரமண் டலத்தினில் நீர்போ மென்றும்
அருள்புரிய வேணுமென்று மர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 683
திருவடிப்பொற் பதம்போற்றித் துதித்தேன் யானுந்
தேவசிவ சாம்புவனார் பட்டந் தந்தார்
பொருளாகுந் திருமால்கார் முகிலு மானார்
புகழ்ந்துருத்திரன் அக்கினியு மின்ன லானார்
சிறப்பான பதினாறாம் வீட்டுக் குள்ளே
சிறந்தமயேஸ் பரரிடியுங் காற்று மானார்
மறப்பாக நின்றசத்தி நாத மானாள்
மரூவுபர வெளியுமது மேக மாண்டே. 

பாடல் எண்:- 684
துய்யவெளி யருந்ததியின் குலந்தா னாகுஞ்
சொல்லுகிறே னவனைவர வழைத்து யானும்
வையகத்தோர் புகழ்ந்தேத்த வூனுக் குள்ளே
வகுத்திருப்ப தேழுநக்ஷத் திரமு மாகும்
ஐயமறும் வானில் நக்ஷத்திரங்க ளெல்லாம்
ஆதிசதா சிவனருளா லான வாறும்
செய்யபுக ழன்னமதில் நின்ற வில்லுஞ்
சிறந்தருளுஞ் சிற்பரையால் வளர்ந்த தாண்டே. 

பாடல் எண்:- 685
அவையதுக்குள் ளேயேழு வார மாச்சு
அவள்குலமென் றென்குலத்தி லமைத்த வாறும்
இவையடக்கத் தாலுஞ்செழுந் திதிக ளாச்சே
எனைவகுத்துப் பரைக்குலத்தி யம்ப லாச்சு
திவையடக்கத் துள்ளிருந்த பிரமத் துள்ளே
செயலான சராசரமும் பிறக்க லாச்சு
தவமிகுந்த வப்பிரமப் பிரபை யுள்ளே
தனித்ததொரு சுக்கிரனா ருதித்த தாண்டே. 

பாடல் எண்:- 686
திங்களுடன் திதிவாரம் வகுத்த பின்பு
திருவுள்ளத்தின் கமலமலர் பணிய யானும் 
சங்கரனா ரெனைமகிழ்ந் தேதோ வென்றார் 
ததியினுட னறிந்துலகந் தழைக்க வேணும் 
இங்கிதமா யிதுக்கெவரை வைப்போ மென்று
எழுந்துகரங் குவித்தடியேன் பணிந்து போற்றிக்
கங்கையணி கடவுளர் மதியு மானார்
கருத்திலறிந் துவமையென மகிழ்ந்திட் டேனே. 

பாடல் எண்:- 687
செங்கதிராய்ப் புவிதனிலுஞ் சூழ்ந்து மேவுந்
திருவுருவாய் நின்றுபரஞ் செப்பி னார்காண்
அங்கெனவே யானறிந்து அறிவி னாலும்
அருளறிந்து அரூபநிலை யானும் பெற்றேன்
பொங்கமுடன் புகழ்ந்திருந்தேன் பொருளுங் கண்டேன்
பூரணத்தை யொருநாளும் போக்கா வண்ணம்
எங்கள்மதி யிருந்ததினா லெல்லா மாச்சு
வெம்பிரா னியம்புநிலை யான்கண் டேனே. 

பாடல் எண்:- 688
சொன்னமொழி கேட்டெழுந்து சிறுபெண்ணாத்தாள்
திருவடிதன் கமலமலர் துதித்து மேவி
என்னமொழி நீருரைத்தீ ரென்பிரா ணேசா
எனக்கடிமை யுனையன்றி யினியொன் றில்லை
இன்னிலத்தி லிருளகற்றி வெளியைத் தாண்டி
யெழுந்ததொரு கடிகைமுப் பதிலு மாகும்
அன்னவெளி தனையறுக்கத் தோணு வீர்காண்
அடியாளுந் தனித்திருக்க மாட்டி லேனே. 

பாடல் எண்:- 689
தனித்திருக்கத் தரமென்று வுமைதா னோக்கி
சச்சிதா னந்தபர மேது சொல்வார்
செனித்தபுவி விளங்குங்கலை பதினாறாகில்
சேர்ந்திருப்போ முன்னிடத்திலகலா மற்றான்
கனித்தகலை யொன்றாக நாளொன் றாகக்
கருதிடுமூ வஞ்சான ளாகும் போது
செனித்தவுயிர் யாதுக்குங் குளிர வென்னில்
தெரிந்தொருநாள் பிரிந்திருப்போ மறிவிராண்டே. 

பாடல் எண்:- 690
துய்யபர மானசிவம் விளக்க மேவித்
தொழுதுமையாள் வணங்கிச்செங் கதிரு மானாள்
வையகத்தி லிருள்தனையே யறுத்துச் சுட்டு
மதியதனால் வெளியாகி யொளியாய் நின்றாள்
ஐயமற இருவருந்தா னாகா சத்தில்
அகிலபுவ னந்தழைக்கப் புட்பம் போலாய்
வெய்யவனும் வெண்மதியு முலகந் தன்னில்
வீற்றிருந்து புவனமெல்லாம் விளங்கி னாரே. 

பாடல் எண்:- 691
சத்தியுடன் சிவனுங்கதிர் மதியு மாகித்
தனித்தபிரமா வெழுந்துகரங் குவித்து மேன்மேல்
முத்திதரு முதலெழுத்தே தேவ தேவா
மூன்றுலகும் நிரந்தரமாய்ப் படைக்கச் சொன்னீர்
எத்திசையுஞ் சரிசமனாய் விதித்து வைத்தால் 
எங்கள் சொல்லு மேலாக வேணுந் தானாய்
இத்தலத்தி லுள்ளோர்க ளெனைத்தான் போற்ற
வெழுபரத்தி லொருபுதுமை யருள்தா னென்றே. 

பாடல் எண்:- 692
அந்தணரு மடியிணையைத் தொழுது மேவ
அம்பரவி லாசருமே யருளு நேர்மை
விந்துபர நாதமது மொன்ற தாகி
விளைந்ததுகா ணெண்பத்து நாலு லக்ஷம்
செந்ததுக்குள் செனித்துயிராய் நிறைந்து மேவிச்
செகதலத்தி னமதுயிர்க்குஞ் சேர்க்கை யில்லா
எந்தவித மாகவுந்தான் புதுமை யுங்கள்
இடத்திலுற்தான் தருணமென் றியம்பி னாரே. 

பாடல் எண்:- 693
தரவரிது என்றபரந் தன்னை நோக்கித்
தாள்பணிந்து கரங்குவித்துச் சதுர்பிர் மாவும்
வரைதனிலும் நின்றபரம னகம கிழ்ந்து
வள்ளலெனுந் திருபரைக்குள் வகுக்கச்சொன்னார்
திருமறைக்கு ளிருந்தவரை வெளிய தானோந்
திருவுளந்தான் கருத்துகந் தெனைத்தா னோக்கி
அரைபுகுந்து அந்தனர்கள் புதுமை கண்டு
அந்தரத்தி லறிந்துகொள்ள அருளென் றாரே. 

பாடல் எண்:- 694
அந்தரத்தி லொருபுதுமை  யருளுஞ்சொல்லு
அரனடியைப் போற்றிநின்றா ராண்டே கேளீர் 
சுந்தரமாந் தும்பிசுக்கிர வார நாள்தான்
சொல்லிமந்த வாரமெனுஞ் சூக்ஷ மானார்
தந்திரமாஞ் செங்கதிரோ னாதி வாரம்
சர்வவுயிர் நாதனருள் சோம வாரம்
மந்திரமங் களவாரம் ருத்திர னாகும்
வளர்ந்தபுதன் மயேஸ்பரன்தான் வகுத்தே னாண்டே. 

பாடல் எண்:- 695
அந்தரத்தில் நின்றகுரு வாரந் தன்னில்
ஆதிசதா சிவனருளா லகமே ழாகும்
விந்தையதா மவரவர்க்கு வார நாள்தான்
விளங்கினோம் விபரமாய் விளங்கக் கேளீர் 
பைந்தமிழா லருளியதோர் ஞான வாக்கியம்
பரமான அகத்தீசர் பகர்ந்த வண்ணம்
இந்தவித நூல்வகையை விதித்தேன் காணும்
இனியுரைக்குஞ் செய்தியெல்லா மியம்ப லாமே. 

பாடல் எண்:- 696
வாரமினி யேழதனை வகுத்த பின்பு
வள்ளல்பரந் திருமாலை யருகே வைத்து
ராகுடனே கேதுஅணி யாகு மென்னில்
நளினமல ரடியதனைப் போற்றி செய்வார் 
தாரகமாம் பிரமநதி தீர்த்தந் தன்னைத்
தனித்தொருநாள் திரிகடுகை மறிப்போ மென்றார்
ஆரணிந்தோர் சம்மதித்து அருள மேன்மேல்
அந்தணர்கள் கண்டுகொள்ள அருள்செய் தாரே. 

பாடல் எண்:- 697
பூரமுட னுத்திரமு மஸ்தஞ் சித்திரை
புகழ்சோதி விசாகமது அனுஷங் கேட்டை 
சீரான மூலரோ கணியு மென்னில் 
செயசதைய முத்திரட் டாதி யென்னில்
ஈராறுங் கூடிநக்ஷத் திரம தாச்சு
எழுந்துவளர்ந் திருக்குமினி யியம்புங் காலை
கார்வடியு மாகின்ற பிர்மா வுக்குக்
கருத்துலகம் பிரித்துரைக்கக் கருதினாரே. 

அசுவனியும் பரணிகார்த் திகையி னோடு
அருள்மிருக சீரிஷந்திரு வாதிரையு மாகில்
திசைபுகழு புணர்பூச மாயிலியத் தோடு
சிறந்தமகம் பூராட முத்தி ராடம்
நிசமான திரிவோண மவிட்டம் பூரட்
டாதிரேவதியு மூவஞ்சு நேர்ந்த தாகில்
விசுவதிசெங் கதிரதனில் வளர்ந்து மேவும்
விரித்துலக மந்தணர்க்குப் பிரித்துணர்வ தாமே. 

பாடல் எண்:- 698
கண்டுகொள்ளு மந்தணர்கள் புவியிற் குள்ளாய்க்
கருத்தாலும் வகுத்துரை த்துக் காலம் போக்கும்
என்றுபரஞ் சொல்லியருள் புரிந்த மாத்திரம்
இணையடியிற் போற்றிசெய்து எழுந்து பின்னும்
நன்றெனவுங் கரங்குவித்துப் பிர்மா வுக்கு
நாயனா ருரைத்தபொரு ளிதுதான் கண்டீர்
வண்டர்கள்தான் புவியதுக்குள் பிறந்த பின்பு
மனதாலும் வகுத்துரை த்தார் வேதந் தானே. 

பாடல் எண்:- 699
வேதமறை யாகமங்கள் பிறந்த தெங்கே
வேள்விகன லுதித்தவிதம் படையிற் குள்ளே
கதிர்முனையு முளைத்ததெங்கே ரவிதா னெங்கே
கமலரவி யுதித்ததுவும் பரையிற் குள்ளே
போதநதி கிரியுமலை வனங்கள் தானும்
புகழனந்தம் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
தீதில்லாச் சங்கரனா ரயன்மால் ருத்திரன்
தேவர்களும் பிறந்ததெந்தன் பரைக்கு ளாண்டே. 

பாடல் எண்:- 700
அந்தணரும் வேதியரு முதித்த தெங்கே
ஆசாரம் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
விந்துதித்துப் பிறந்ததெங்கே நாத மெங்கே
வெகுவிசித் வுயிர்களெந்தன் பரையிற் குள்ளே
செந்தணலும் பிறந்ததெங்கே ஜெகந்தா னெங்கே
ஜெகதலமும் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
மந்திரமும் பிறந்ததெங்கே மனுக்க ளெங்கே
மனுநீதி பிறந்ததெந்தன் பரைக்கு ளாண்டே. 


Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900