திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 401- 500

பாடல் எண்:- 401
அல்லலற்று அம்பிகையி னருள்தான் விட்டேன்
அண்டபிண்ட நிறைந்தவன்னி யசைவும் விட்டேன்
வல்லமையால் வாருதியைக் கடந்து விட்டேன்
மயிர்ப்பாலமேறியப்பால் வைகை விட்டேன்
சொல்லரிய பெருவெளியம் பரத்தை விட்டேன்
சுகதுக்க மிரண்டமைந்த சூட்சம் விட்டேன்
புல்லறிவால் நின்றபர சபையும் விட்டேன்
புவியில்வந்து பூருவத்தின் பொருள் விட்டேனே. 

பாடல் எண்:- 402
மந்திரசாஸ் திரமுமறை வகையும் விட்டேன்
மதியும்ரவி கடந்துசித்திர வாசல் விட்டேன்
சுந்தரஞ்சே ரமிர்தமுண்ட சுகத்தை விட்டேன்
சுருதிமுடி வானசுகா தீதம் விட்டேன்
தந்திரமாய் வீற்றிருந்த வீடும் விட்டேன்
சச்சிதானந்தசபை தானும் விட்டேன்
அந்தமா யனந்தமென்ற ஆசை விட்டேன்
அம்மைசிங் காதனம்விட் டவைவிட் டேனே.  

பாடல் எண்:- 403
அகங்கொண்ட முக்கோணத் தறைவிட் டேகி
அலமைநெடு வீதிவிட்டு அடியும் விட்டேன்
புகழ்சித்திப் பேறுபெற்ற யோகம் விட்டேன்
பூசையனுஷ் டானமெனும் புதுமை விட்டேன்
ஜெகமுழுது மமைத்தகுரு பீடம் விட்டேன்
திரையகற்றும் பிரகாசத் தெளிவும் விட்டேன்
யுகவளநா டுறையும்வன்னி யுணர்வும் விட்டேன்
உலகுதனில் வரும்விதியை யுரைப்பே னாண்டே. 

பாடல் எண்:- 404
காயாத கதலிவனத் தோப்பு விட்டேன்
கருவிலுயி ரமைத்துவருங் கருவூர் விட்டேன்
தாயான வம்பிகைப்பெண் சார்பும் விட்டேன்
சதுஷ்பீடம் விட்டுச்சல நதியும் விட்டேன்
தூயாதூ ராதூரக் குழியும் விட்டேன்
துரியாதீ தங்கடந்து சுழலும் விட்டேன்
மாயாமல் வாழ்கவென்று மவுனம் விட்டேன்
வாழ்புவியில் பிறக்கவினி வருவே னாண்டே. 

மேற்படி நொண்டிச்சிந்து
(தரு)
தந்தனதனதனனா தனதன- தந்தனதன தனதானதானனா. 

பாடல் எண்:- 405
இடைகலைபிங்கலையுஞ்- சுழியின்முனை
யேகபுரமாகியதோர்திரிபுரமும்
கடைபிங்கலைமதிளுங்- கருவூர்
காட்டைவிட்டேன் சிறுவீட்டைவிட்டேன்
மடவயிலார்புரமதிநதியின்- வாசல்விட்டேன்
சோதிநேசம்விட்டேன்
திடமுடனானிருந்த- சிவ
சிங்காதனம்விட்டே திருவருளும்விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 406
நடனபொற்கமலம்விட்டேன்- அம்பரவெளி
நயனவிழிமதுர நாடும்விட்டேன்
அடரலைக்கடலோர- மலைகடலி
னலையும்விட்டேன் திருமலையும்விட்டேன்
வடதிசைநாடும்விட்டேன்- கனகரத்ன
மாலும்விட்டேனிருகாலும் விட்டேன்
திடமெனுமுடலைவிட்டேன்- சித்திரகூடஞ்
சிங்காரசெங்கநதிகங்கைவிட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 407
அலகைதன்வீதியிலே- ஜலமதனி
னணியும்விட்டேனெந்தன்தொனியும் விட்டேன்
மலைதனையகழத்தில்வைக்கும்- இந்திரபீட
வாசல்விட்டேனேகூடம்விட்டேன்
உலகெலாம்நிறைந்துநின்ற- நடுவணையி
னூரைவிட்டேனதிபாரம் விட்டேன்
சிலகேணிமேடைவிட்டேன்- தேவர்கள் வாழுந்
தில்லையனந்தபுரத்தெல்லை விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 408
மருவுயர்வன்னிவிட்டேன்- கதிர்மதியின்
வாசல்விட்டேன்ரதிபூசல் விட்டேன்
இருவினையாடும் விட்டேன்- நானிருந்த
இடத்தைவிட்டேன் சூழுமடத்தை விட்டேன்
அருவுருவாகிநின்ற- அகத்தியர்தன்
அருளும்விட்டேனப்புமலரும் விட்டேன்
கருவூர்மாறிவிட்டேன்- பறையிலங்கும்
காட்சிவிட்டேனெந்தன் கருத்தைவிட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 409
திருப்பெருந்துறையைவிட்டேன்- புஷ்கரணி
தீர்த்தம்விட்டேன் தெய்வநதியும்விட்டேன்
இருகரைநாடும்விட்டேன்- மண்டபத்தடி
யீசனிருக்குங்கொடிமுடியும் விட்டேன்
மருமலர்கனகரத்ன- வம்பிகைபதம்
வணங்கியேமலரடி கமலம்விட்டேன்
உருவருளுறவும்விட்டேன்- உக்கிரவிசை
உலகுவிட்டேன் மேருதுறக்கம் விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 410
அலையாப்பதியுமிட்டேன்- அமிர்தநதி
அதுகடந்தேயக்கினி ஆற்றைவிட்டேன்
துலையாக்கடலும்விட்டேன்- சுகதுக்க
தூறும்விட்டேனுடல்கூறு விட்டேன்
நிலையாநதியும்விட்டேன்- கரையேறி
நீஞ்சிவிட்டேன்கலைபாஞ்சு விட்டேன்
ஜலசெங்கநதியும்விட்டேன்- ஜலநதியின்
சார்பும்விட்டேன் கரையேறி விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 411
மந்திரகிரியும்விட்டேன்- மயேந்திரிகிரி
மதிளும்விட்டேன் மகமேருவும்விட்டேன்
இந்திரபதியும்விட்டேன்- ஈரைஞ்சிதழ்
எல்லைவிட்டேனெந்தன் தொல்லைவிட்டேன்
சந்திர நாடும்விட்டேன்- சுகந்தபரி
சந்தனசவ்வாதுவீசுஞ் சந்திவிட்டேன்
இந்திரஜாலம்விட்டேன்- இமயகிரி
யிங்கிதமாகவே சங்கப்பலகைவிட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 412
படியிறுமூன்றுவிட்டேன்- அறுவரையின்
பாரும்விட்டேன் திருவூரும்விட்டேன்
அடியெனுமரத்தைவிட்டேன்- நானிருந்த
ஆலயம்விட்டேன் பகடசாலையும் விட்டேன்
வடிவுள்ளதிரையும்விட்டேன்- கருமாளிகையின்
மதிலைவிட்டேன்கெவுனகவனம் விட்டேன்
இடிமின்னல்கனலைவிட்டேன்- ஈராறு
மிருப்பாறும்விட்டே னெருப்பாறும்விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 413
பூரகநாடும்விட்டேன்- திருமால்தன்
பூஞ்சோலையும்விட்டேனெக்கிய சாலையும் விட்டேன்
சாரைபிரமலத்தைவிட்டேன்- பிரகாசவெளித்
தடத்தைவிட்டேனென திடத்தைவிட்டேன்
கூரழியாப்பாலம்விட்டேன்- சல்லிக்கொடியின்
குறிப்பும்விட்டேன் முகப்புச்சிறப்பும் விட்டேன்
ஏறிதழ்நாடும்விட்டேன்- நானிருந்த
இருப்பும்விட்டேன் திரையின்மறைப்பும்விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 414
சீர்புகழும்பூரகத்தில்- நானிருந்த
தேசம்விட்டேன் சுகசந்தோஷம்விட்டேன்
ஆரூர்திருநாட்டைவிட்டேன்- சரஸ்வதியி
னாலயம்விட்டேன் சதுஷ்கோணவிட்டேன்
மூர்வதிதநாதமும்விட்டேன்- மூவர்க்குமுதல்
முத்தியெனுஞ்சத்திசிவமெத்திசை விட்டேன்
பேரூரவதானியும்விட்டேன்- அம்பிகைமாது
பேர் பெரியபீடம்பிசகாமலும்விட்டேன்- தந்தன. 

பாடல் எண்:- 415
சித்தியருளாணியும்விட்டேன்- தில்லைவழியுந்
திருவுருவானசுழிநடுரும்விட்டேன்
கத்தரிக்கோல்மாறல் விட்டேன்- கலைபிறழா
கங்கைநதிகங்கைக்கரைபொங்கமும் விட்டேன்
அத்திபுர நாளதும்விட்டேன்- நாதமும்விந்து
மணுகியத்திருமுகச்சாலையும் விட்டேன்
எத்திசைப்படைத்தருளும்- பிரமாவுடைய
ஏகசர்வேசரிருந்தாசீர்மம் வந்தேன்- தந்தன. 

(விருத்தம்)
பாடல் எண்:- 416
திரிபுரத்தைத் தணலாக வெரித்த வீசன்
திருநடனம் புரிந்தருளுந் தேவ நாதன்
மருமிகுந்த மயிர்ப்பாலங் கருவூர் நாதன்
வல்லஅறு கோணமதில் வாழ்ந்த மூர்த்தி
அருவமதுக் கப்புறத்தே யமைத்த விந்து
அணுகுகின்ற வெல்லைவிட்டுச் சுவாதிஷ் டானம்
திருபுரத்து வீதியிலே வாழ்ந்தேன் யானும்
சிவஞான சிவபூசை செயல்விட் டேனே. 

பாடல் எண்:- 417
மாராட்ட திசைகடந்து வெளியிற் குள்ளே
மன்னுயிரை வகுத்தலிங்க வட்டத் துள்ளே
ஆராடி யத்துடனே யன்னை யார்தான்
அங்கமெல்லா தொந்துமனஞ் சலித்து வாட
பாராட்டங் கொண்டுபரி தவித்து நெஞ்சம்
பாதமதால் தனஞ்செயனும் படவு தைக்க
வீராட்டங் கொண்டுசுவா திஷ்டா னத்தின்
வீதிதனில் வந்துவீற் றிருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 418
வந்துகுடி யிருந்ததிரு நாட்டை விட்டேன்
மாறுகின்ற கத்தரிக்கோல் பட்டந் தன்னில்
விந்துநின்று விளங்குநதி மையத் துள்ளே
விளங்குசுவா திஷ்டான வெளியி லேதான்
முந்திநின்ற பாதநடு வகையி லேதான்
முதலான மூன்றெழுத்து முனையின் கீழே
எந்தனிட வெண்ணமெல்லாம் பொய்யு மாச்சு
ஏளிதமே நிலையாச்சு இருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 419
அடுத்துநின்ற வன்னிநதிக் கரையை விட்டேன்
அலகைநின்று வாழ்ந்ததொரு வீதி விட்டேன்
முடித்திருந்த மனதையெல்லாம் பாழாய் விட்டேன்
முக்கோணச் சக்கரத்தின் முதலை விட்டேன்
கடுத்ததெர்ப்ப சயனம்விட்டேன் காணி விட்டேன்
கதிர்மதியுந் துலங்குபுவி கருத்தைப் பார்க்க
துடுக்கெனவே தனஞ்செயன்தா னுதைக்க வென்னைத்
துயரமுடன் பிரமாவின் தெருக்கண் டேனே. 

பாடல் எண்:- 420
அக்கரந்தான் முன்மறித்துப் பின்னே தள்ள
அலகையொரு புறமதனி லெழுந்து நோக்கச்
சிக்கெனவே தேவதத்தன் மேலே நோக்கத்
திடுக்கெனவே தனஞ்செயன்தான் கீழே நோக்க
மக்கசிக்குப் பட்டுழன்று வருத்த மாகி
வாழ்புவியில் வரப்பட்ட பாடு மெத்த
எக்காலந் துயரமதை யாறு வேனோ
இருந்தகும்பி விட்டுவந்த ஏழ்மை தானே. 

பாடல் எண்:- 421
அக்கினியால் திரிபுரத்தைத் தணலாய் மூட்டி
அதீதமாய் வருணசல மாயமாய்ப் பாய்ந்து
திக்கினிய வாய்வுகடுங் காற்று வீசிச்
செந்தணலாய்த் துரத்தியெமன் தீதான் மூட்ட
மிக்கதிரு வெனைவளர்த்த குபேரன் தானு
மேல்வாங்கி கைக்கனிபோல் விளங்கச் செய்தான்
இக்கடுசா யீசான னிரக்கங் கொள்ள
இந்திரனு மெனைக்கடிந்து இழுக்கின் றானே. 

பாடல் எண்:- 422
இந்தவிதம் பட்டசளம் யானுந் தாயும்
இப்புவியில் செனிக்குமுன்பு இருந்த நேர்மை
கந்தமலர்ப் பூங்குழலா ளாத்தா ளென்னைக்
கருக்குழிவிட்டினிவரும்போ தநந்தம் வேசா
ரந்தமனஞ் சலித்துமிக ஆத்து மாக்கோ
லளவறிந்து துன்பமெல்லா மாண்டே கேளீர்
விந்தையினி யுரைப்பதெல்லாம் வருமப் போது
மிகுவருத்தம் பட்டசளம் விளம்பு வேனே. 

பிறவித்துன்பம்
(தரு)
பட்டசளமெத்தவுண்டாண்டே- வருகையில்நான் பட்டசளமெத்தவுண்டாண்டே. 

பாடல் எண்:- 423
வட்டமிட்டபாறைவிட்டு அஷ்டசுழிமூலவாசல்
கிட்டியேகிட்டிடுக்கிலே முட்டி நான்வருகையிலே
நெட்டவேதனஞ்செயனுங் கிட்டிசேரிடாமல்நேரே
தட்டிமுட்டிடாமல்பாய்ந்து ஒட்டியே நெட்டணையாக- பட்ட. 

பாடல் எண்:- 424
மெட்டுகள்மேடுகள்காட்டச் சிட்டுகள்பாய்ந்ததுபோலும்
எட்டியே தனஞ்செயனும் விட்டிடாம லேயுதைக்க
கட்டுகள்கறடில்லாமல் முட்டுகள்முடுக்கில்லாமல்
திட்டுகள்திரட்டில்லாமல் கட்டமேயனுபவித்து- பட்ட. 

பாடல் எண்:- 425
தக்கதீதமுக்கோணத்தில் மக்குசிக்குச் சக்கரத்தில்
அக்கரத்துவெளிதனில் சிக்கிநான்வருகையில்
உக்கிரமதாகியமூலம் விக்கிரசுழிபக்கமிக்க
நிக்கிரவம்பரத்தைவிட்டுச் சுக்கானைத் திருப்பிவர- பட்ட. 

பாடல் எண்:- 426
பக்கமேயிடைகலைபின்னக் கரைதட்டாமற்பாய்ந்து
சுக்கிரனுதித்தவேளை லக்கினம்ராசியறியும்
திக்குதிக்கெட்டாமல் சூழுமக்கரையாவி சோராமல்
இக்குழியூத்தையைத்தாண்டிப் புக்கிநான் வருகையிலே- பட்ட. 

பாடல் எண்:- 427
கருக்குகையும்தனி லுருக்கமாவுதைத்து
அரக்குமண்டபத்தடி பெருக்கநான்வருகையில்
வருத்தம்பாராமல் தனஞ்செயனும் பாதத்தினாலே
துருத்தத்துடனுதைத்துத் துரத்திவிட்டெனைக்காணும்- பட்ட. 

பாடல் எண்:- 428
அருக்கனாதித்தனெதிர்க் குறுக்கேயெதிர்ப்படையில்
முறுக்குகளாயிடக்குறுக்கப் பின்னுக்குவந்து
சுருக்கச்சுழியைவிட்டுக் கருக்குழியைக்கடந்து
உதைக்கத்தனஞ்செயனு மடக்கில்லாவருகையில்- பட்ட. 

பாடல் எண்:- 429
உச்சிதமாகியகண்டத் தொனியிலோடியதாரை
மச்சுழலண்டத்தைவிட்டு வருகஆண்டையேகேளீர்
தற்சுரூபமதாகி சத்தியெனுநாதவிந்து
திச்சிதரூபமாய்வந்த சிதம்பரவீதிதன்னில்- பட்ட. 

பாடல் எண்:- 430
அச்சுழல்தாரைவெளியி லருளுஞ்சங்கையைவிட்டு
விச்சுவரூபங்கடந்து மேதினிவருகையில்நான்
நச்சுக்குழலடியில் நடுவணையின்பின்னாக
இச்சையுடனேதனஞ்செயனு மெனையுதைக்க- பட்ட. 

பாடல் எண்:- 431
ஓதுந்தாரைவெளியி லூதுஞ்சங்கைவிட்டுச்
சூதுசெய்யுமக்கினித் தூணோரம்வருகையில்நான்
வாதுஇதுவேதனைமாதர் மனதுநோக
சேதியெனதுஅன்னைச் செய்வினைப்பயனேதென- பட்ட. 

பாடல் எண்:- 432
பேதாபேதங்கள்மெத்தப் பேதித்துத்தனஞ்செயனும்
பாதாரவிந்தத்தினாலும் படவேயெனையுதைக்க
தூதுஅபானனெட்டித் தொடர்ந்துமூலத்தின்கீழே
தாதுகுலுங்கநாடித் தனஞ்செயனுந்தள்ளிட- பட்ட. 

பாடல் எண்:- 433
அடங்குஞ்சக்கரந்தனி லமைக்குமதனைவிட்டு
முடங்கிச்சுழியின்வாசல் முனையில்வருகையில்நான்
தொடங்கித்தனஞ்செயனுஞ் சுருக்காய்ப்பாதத்தினாலும்
விளங்கக்குலுங்குதைக்க வெளியினிலம்புவிவர- பட்ட. 

பாடல் எண்:- 434
செடமெண்சாணுங்குலுங்கச் சிவமெய்ஞ்ஞானம்விளங்கக்
குடவயிறுங்குலுங்கக் கையைவிட்டகம்வர
மடவாதலையமீராறு மணிவாசலொன்பது
சேடமுமெண்சாணுடலுந் திரையைவிட்டுமேவர- பட்ட. 

பாடல் எண்:- 435
ஓங்காரத்தொலிதனி லுதித்தகோணமொன்பதில்
ஶ்ரீங்காரத்தொளிவட்டத் தெருவில்வருகையில்நான்
நீங்காநெல்லிக்கனிபோல் நிலைத்தசபையைவிட்டுத்
தீங்கில்லாதஅக்கினித் தெருவில்வருகையில்நான்- பட்ட. 

பாடல் எண்:- 436
ஆங்கத்திருக்கேணியி லமைத்தசக்கரத்தினில்
தேங்கநின்றலகையின் தெருவில்வருகஆண்டே
வாங்குமூலச்சுழியில்வளர்ந்த அக்கினியின்கீழ்த்
தாங்கத்தனஞ்செயனுந் தடங்கலில்லாதுதைக்க- பட்ட. 

பாடல் எண்:- 437
காலைவருத்தம்வாகி நாலைப்பறித்துவுயிர்
சாலப்பெருத்தச்சித்திரச் சாவடிவருகையிலும்
மூலாதாரச்சுழியில் முவனபிர்மத்துக்கப்பால்
மாலினுடசந்நிதி மணிபூரகத்தில்வளர்- பட்ட. 

பாடல் எண்:- 438
இலைகாலிருவிலக்க மறிகாலெனைமறிக்க
தலைகாலுமேநகரத் தனஞ்செயனுதைத்திட
மாலையின்மாதுமங்கைகள் வாலைகெர்ப்பமதனில்
ஓலமூலச்சுழியி னோரம்வருகையிலும்- பட்ட. 

பாடல் எண்:- 439
சிறந்தவர்கள்வயிற்றில் செனித்தபிறகுதிக்க
அறிந்தவர்கள்கருவி லமைப்பதில்லையாண்டே
வரந்தருமம்புவியில் மனதுகந்துஅன்னையும்
பிறந்தாலொருபுத்திரன் பின்னும்போதுமென்றதால்- பட்ட. 

பாடல் எண்:- 440
நிரந்தரிசப்பிரகாச நிலைத்தசூட்சத்தைவிட்டுத்
துரந்தரியமாகத் துரியாதீதமருகே
பரசபையுங்கடந்து துரைசாமியின் றுணை
மறவேன்கமலபத மதியைத்தாண்டிவருக- பட்ட. 

பாடல் எண்:- 441
இனமாய்த்தனஞ்செயன்வந் தெனையேயுதைத்து சுழி
கனகரத்தினமூலங்கருதிக் காட்டியுதைக்கச்
செனனமிந்தப் படிதான்சிவசொரூபமதாகப்
புனலருவிகள் பாயப் பொறியை விட்டுவரவும்- பட்ட. 

பாடல் எண்:- 442
மனம்புத்தியுமாங்கார மகிழுஞ்சித்தமதனால்
இனமாயெனைப்பிரியா திழுக்கத்தனஞ்செயனால்
சுனையிலருவிபாயுஞ் சுழியிலமிர்தமோட
முனையைவிட்டொளிவீச முகப்பைவிட்டுவரவும்- பட்ட. 

பாடல் எண்:- 443
சாக்கிரஞ்சொப்பனந்தாண்டித் தனியேவெளிப்படையில்
ஆக்கிமத்தனஞ்செயன் வந்ததட்டியுதைத்திடவும்
சீக்கிரமதாகியபிராணன் சீறியேபின் னிட்டுத்தள்ளத்
தூக்கியஅபானவாய்வு தொடர்ந்துதைத்திடும்போது- பட்ட. 

பாடல் எண்:- 444
ஆக்கிரமதாகியகேணி ஆரூர்மண்டபந்தாண்டி
நோக்கியேநான்வரும்போது நொடிக்குள்வாசியுஞ்சீறப்
பார்க்கப்பார்க்கப் பலவும்பரிபூரணவிலாசம்
ஏர்க்கவாசனைவீசி வெளிப்படவும்பிரகாசம்- பட்ட. 

பாடல் எண்:- 445
சுழியின்முனையைவிட்டுத் துரியந்துரியாதீதம்
வழியில்வருமளவில் மாறியேகலைகள்பாய
இழியாக்கேணியில்வீழ்ந்து இருவினைகளுஞ்சூழத்
தொழியாவறுமையில்லாச் சுடரைத்தாண்டிவரவும்- பட்ட. 

பாடல் எண்:- 446
அழியாப்பதவிபெற்று அம்பிகைபொற்கமலத்தில்
கழியாவரம்பெற்றுயான் கருவூர்விட்டுவரவும்
ஒழியாப்பாசவினைக ளொழித்துவோங்காரவாசல்
பொழியமதியமிர்தம் வழியமதுரவின்பம்- பட்ட. 

(விருத்தம்)
பாடல் எண்:- 447
ஒத்துநின்ற பிராணனெனை மேலே நோக்க 
ஒருமையினா லபானனது வோங்கித் தள்ள
வெற்றியெனுஞ் சமானனுமே பின்னே தாக்க
மேலான வியானனது மறிக்க முன்னை
சித்தமே யுதானனதுந் திசையை நோக்கத்
திடுக்கிடவே கூர்மனவன் விழிதான் மீட்ட
சத்தியுயர் கண்டவெளி மேலே யேறித்
தனஞ்செயனு முதைத்தென்னைத் தள்ளினானே. 

பாடல் எண்:- 448
தஞ்சமெனு நம்பிநின்ற கருவூர்க் குள்ளே
சதுரகிரி காணவுந்தா னிருந்த வென்னைத்
துஞ்சத்துவ மொடுசோப வினையுண் டாகிச்
சூதுசெய்து நாகனுந்தான் துரோகஞ் செய்தான்
வஞ்சமற வெனைவளர்த்தே தேவ தத்தன்
வருத்தமிகச் செய்துபின்னுந் துரத்தி னான்காண்
கஞ்சமலர்ப் பாதத்தால் கோபித் தேதான்
கருத்துகந்து தனஞ்செயனு முதைத்திட் டானே. 

பாடல் எண்:- 449
இடைகலைபின் னிருகலையு மிழுக்கு முன்னே
யியல்பான சுழிமுனைதா னிழுக்கப் பின்னை
தடமகுட சிங்குவையம் புருடன் ரெண்டுஞ்
சந்திகட்டி மறித்தவர்கள் மாறித் தள்ளத்
திடமுடைய காந்தாரி யத்தி யோடு
தீர்க்கமுள்ள வலம்புருடன் சுழியி லேற
அடவுடைச் சங்குனியுங் குகுதன் தானு
மலமலக்க மூலமதி லழுத்தி னானே. 

பாடல் எண்:- 450
சிட்டர்கள்தா னருகினி லிருக்கும் போது
சிறந்திருந்த நாதவிந் துருவு மாய
வட்டமதில் நானிருந்த திங்கள் பத்தும்
வரிசையுட னேயிருந்து வாழ்ந்த போது
பட்டபா டதிகமெத்த பாடு பட்டேன்
பகர அதைக் கணக்கெழுதி முடியா தாகில்
கட்டமில்லாக் கனகசபை நடனங் கண்டோர்
கருவுடையார் புவியில்வந்து கருதார் தானே. 

பாடல் எண்:- 451
வெற்பான வெளிகடந்து அப்பா லேதான்
வேதமுயிர் நாதவிந் திரண்டுங் கூடி
மயிர்ப்பாலங் கடந்துஅறு கோணந் தாண்டி
வரையெழுந்த மூங்கில்வட்டத் தடியுந் தாண்டி
அப்பாழைக் கடந்துவட்டத் தடிபார்க் குள்ளே
அம்பரத்தின் வெளியில்வந் தமைந்தே னாண்டே
இப்பாரிற் பெரியோர்கள் மனமு கந்து
எந்தனுட வரலாற்றை யியம்பக் கேளீர். 

(கொச்சகம்)
பாடல் எண்:- 452
ஒட்டுப் பலகைதனி லொருசானை துக்கருகே
நட்டசுழி கம்பமதி னடுவனையின் வீதியிலே
மட்டத் தனஞ்செயனு மாறிவுட பாதமதால்
விட்ட வுதையாலே வெங்கநதியோ ரம்வந்தேன். 

பாடல் எண்:- 453
முன்னிழுக்கப் பின்னிழுக்க மூவர் மறித்திழுக்க
என்னைச் சுமந்தஅன்னை யினிவே தனைப்படவும்
தன்னிரக்க மில்லாத் தனஞ்செயனுந் தானெழுந்து
சன்னல்வழி திறக்கத் தாவி யுதைத்தானே. 

(வெண்பா)
பாடல் எண்:- 454
உதைத்த வுதையாலே யுள்ளமெல்லா நொந்துஅன்னை
பதைத்துத் துடித்துப் பரதவித்தான்- சகத்ததிலே
ஊற்றுக்கா லோடே யொருகொம் பிருந்ததந்த
ஆற்றுக்கால் வந்தமர்ந்தே னாண்டே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 455
கூடிக் குலாவி யன்னை பிதாவுங் குழைந்துருகி
வேடிக் கையாக விரும்பு கின்றவெளி நாதவிந்து
ஓடிக் கலந்து வுருண்டு திரண்டுரு வானபின்பு
நாடிப் புவியில் நான்வரு பாடதை நாடறிந்தே. 

பிறந்தவகை
(தரு)
தனனாந்தன தனனா தானதன- தனனாந்தனதன தானதனனா. 

பாடல் எண்:- 456
பிர்மாதிகடந்து- துருதைத்த
பெருவெளியாகியதோர்திட்டு கடந்து
இருமாவொருமாவில்- வருந்தியதோ
ரின்பரசமாயிருந்தகெங்கை கடந்து
மருமாலெழுத்தோடே- தில்லைப்பதியில்
வாழ்ந்துடனேவீற்றிருந்தகெதியை விட்டு
அரிமாலயன்தேடி அறியாத
அம்பரத்திலாடுகின்றபம்பரம் விட்டேன்- தனனாந். 

பாடல் எண்:- 457
குறிப்பாயெனைவளர்த்த- முதலான
குய்யமுதல்நடுவணை மையமும்விட்டு
அறியாதெழுந்துநின்ற- செங்கநதி 
ஆடுகின்றதில்லைவெளியம்பரம் விட்டுச்
சிறியாப்பிறையான- சிதம்பரத்தின்
திருக்குளக்கருக்குகைமுறுக்கை விட்டு
வறியடிமூங்கிலிலே- நின்றதொரு
தாசகவுகாசமெனும்நேசமும் விட்டேன்- தனனாந். 

பாடல் எண்:- 458
கரையொருபுறமாக- வரவழைத்துக்
கைக்கனிபோல்வைத்திருந்தசக்கரம் விட்டு
திரையாமறைவீட்டில்- வீற்றிருந்த
சீர்கமலத்திருக்கேணிவாசல் விட்டுக்
கரையாதுணையும்விட்டு- எனைப்பிரிந்து
முன்மறித்துப்பின்னெழுப்புஞ்சந்நிதி விட்டு
கரையாநலையும்விட்டு- நானிருந்த
நாணியுஞ்சங்கதாரையின் வேணியும்விட்டேன்- தனனாந். 

பாடல் எண்:- 459
ஒட்டியடிமுட்டியும்விட்டு- நின்றதொரு
வூத்தைக்குழியானதொருசேற்றையும் விட்டுக்
குட்டிமறைச்சுட்டியும்விட்டு- மெய்ஞ்ஞானபர
குருவானஅன்பறிவுவூரையும்விட்டு
மட்டுமேயெண் சாணுடலி- லிரண்டுசாணு
மாறியேவளர்ந்தகருவூரையும் விட்டுச்
சட்டெனச்சக்கரத்ததனில்- தனஞ்செயனுந்
தாக்கவுமேயென்மனது வேக்கமும்விட்டேன்- தனனாந். 

பாடல் எண்:- 460
தொக்குத்தொட்டெழுத்தையுங் கொண்டு- அம்பரத்தினில்
சோதிநடனம்புரியும்வீதியும் விட்டு
தக்கபுகழ்சுழியைவிட்டு- நந்திகொலுவின்
தடத்தினில்வீற்றிருந்தேன் திடத்தைவிட்டுத்
திக்கினியநாடுவிட்டு- சிவமிகுந்த
செந்தியொளிசிவசிங்கா தனத்தைவிட்டு
அக்கினிகம்பத்தையும்விட்டு- அடுத்துவிளை
யாடவுமிருந்ததன்கூடம் விட்டாண்டே- தனனாந். 

பாடல் எண்:- 461
மக்கக்சிக்கச்சக்கரத்திலே- வருகையிலே
மாறிதனஞ்செயனுமேமீறி யுதைத்தான்
உக்கிரமதாய்நானிருந்த- பாண்டத்துக்கு
வுடம்பெல்லாநொந்துமெத்தத் தள்ளாட்டமதாய்ப்
பக்கமுள்ளமாதர்கள்வந்து அன்னையவட்கு
பத்திரமாயெச்சரிக்கையுத்தரஞ் சொல்லிச்
சிக்கியேநான்வருகையிலே- சுமந்திருந்த
சித்துடம்புதத்தளிக்கச் சத்தமிடவே- தனனாந். 

பாடல் எண்:- 462
தோய்ந்ததுக்கமிகவதித- சுற்றிலும்நின்ற
தோகையர்கள் மெள்ளவத்துவள்ளலுதவ
கைத்தலத்தையிருத்திக்கொண்டு- அன்னையவட்குக்
கைலாகையாகவுமை மெய்லாகையால்
மெத்தெனவேயிருந்தவர்கள்- இருபுறமும்
வீற்றிருந்தமாதர்களும் பார்த்திருக்கவுஞ்
சாஸ்திரவேதங்களோதும்- வெகுசித
சாந்தகுணமாகமொழி தாழ்ந்துரைக்கவும்- தனனாந். 

பாடல் எண்:- 463
சூஸ்திரமாய்ச்சலக்குடத்தை- முன்னையும்விட்டுச்
சுகமுடனென்னுடலைப் பின்னையும்விட்டு
காத்திருந்தமருத்துவிச்சி- அவளிரண்டு
கரத்தில்விரலைத்தொட்டு அழுத்தினளே
வேற்றுமுகமாகவேதான்- முந்தியன்னையும்
வெகுண்டுவெகுண்டுமிரண்டிடவும்
கூற்றுவனாய்ச்சமைந்ததென்று- அன்னைமிகவுங்
கூக்குரலாய்ச்சத்தமிக நோக்கிடவே- தனனாந். 

பாடல் எண்:- 464
சையோகஞ்செய்யும்போது- இருந்தமனஞ்
சந்தோஷந்தப்பிபின் சந்தோஷமாய்
நொய்யதிருநாதவிந்து வரும்போது
நுண்மையறியார் பெரியோராண்மையறியார்
பைதனிலுந்திரண்டுருண்டு- வருகையிலும்
பத்தியுடனேயுலகில் புத்திரனென்று
ஐயமறஅறிந்துகொள்வார்- எனைச்சுமந்த
அன்னையுடவருத்தத்தை யாருமறியார்- தனனாந். 

பாடல் எண்:- 465
வெயயவனுதிததநாட்டில்- வெகுசாயனும்
வேதனைகளாவந்துபிறந்துவிட்டேன்
வையகமெலாந்துதிக்கும்- பிர்மாவுடைய
மைந்தன் சரஸ்வதி யெந்தனன்னையுமாச்சு
துய்யபரபிர்மநிஷ்டை- உதித்தருளுஞ்
சுகந்த பரிபூரணஞானகுலங்காண்
செய்வினையாலமைத்த- பூர்வக்கியான
சித்தியருளாலமைத்த செய்கையிதாண்டே- தனனாந். 

பாடல் எண்:- 466
விதிமதியிரண்டளவால்- விந்துநாதமு
மிகுந்தவச்சிரக்குகை பைதனிலே
அதிகசுக்கிலசுரோணித- மிரண்டுங்கூடி
அமைத்தபடியால் யோகசாதகத்தால்
பதியராஜாங்கயோக- தீட்சைபலத்தின்
பக்குவமுதித்தந்தப்பாரில் வந்தேன்
நிதியைஸ்வரியத்துடன்- விளங்குகின்ற
நித்தியசவுக்கியகுலமுற்றவனாண்டே- தனனாந். 

பாடல் எண்:- 467
திருவுருகருவிதுமூண்- டமைத்தகுல
தெய்வீகதிரிமூர்த்தியான வரலாறு
மருமலர்சுகந்தபரி- மதிரவியின்
மாமலர்க்கமலரத்ன பூமலர்காணும்
அருதிருவுருவாகி பிர்மாதிகுலம்
அவனிதனிலுதித்த அமிசையினால்
குருவனுக்கிரகச்செயலால்- குவலயத்தில்
குறைவொன்றுமிலை காணிந்தவகையாண்டே- தனனாந். 

(விருத்தம்)
பாடல் எண்:- 468
உந்திவிட்டுப் புவியதனி லமைத்து யானும்
உதித்தசிறு சிற்றிடைப்பெண் மாத ரெல்லாம்
எந்தியிரு கரத்தாலு மனைத்து அன்னை
எனையெடுத்து வொருபுறத்தில் கிடத்தி னார்கள்
நொந்துபட்ட அன்னையர்க்குத் துகிலும் வாங்கி
நுண்மையதா யடிவயிறு தாங்கக் கட்டி
விந்துவிட்டோன் கோத்திரத்தின் குலங்கள் வாழ்க
விளங்குபுத்ரன் பிறந்ததென விளம்பு வாரே. 

பாடல் எண்:- 469
எடுத்தென்னைக் கிடத்திவைத்து மாத ரெல்லாம்
ஏறெடுத்து என்முகத்தைப் பார்க்கும் போது
படுத்துயான் கிடக்கையிலுந் தும்மல் மீறப்
பற்றிடவுங் குளிர்ந்தஜலம் பொழிந்தே மாதர் 
எடுத்தெந்தன் முகந்தனிலு மிறைக்கும் போதி
லேற்றமணி பூரகத்தை நோக்கி யானும்
அடுத்திருந்த அருளையெல்லா மேவி மேவி
யம்புவியி லாசைகொண் டமைந்திட் டேனே. 

பாடல் எண்:- 470
விண்ணைவிட்டு வெளிதனிலும் யானும் வந்து
விரும்பியெனைச் சுமந்திருந்த அன்னை பார்த்துக்
கொண்ணுவிட்டுப் போகவந்த கூற்ற னென்று
கொடூரமுட னென்முகத்தைக் குறித்துச் சிந்தை
கண்ணெடுத்துப் பாராமல் சலிப்புண் டாகிக்
களையாகி மூன்றுபட் டினியு மாச்சு
எண்ணமிட்டுக் கொண்டிருந்தே னறைக்கு ளேதா
னெடுத்தெனக்கு வுதவிசலங் கொடுத்திட்ட டாரே. 

பாடல் எண்:- 471
ஆகமதில் நானிருந்து வந்த போது
அங்கமெல்லாம் வேதனையா யீன்ற அன்னை
தாகமுடன் மனசோப மிகவு மாச்சு
சஞ்சலத்துக் காளானோ மையோ வென்று
வேகமுட னென்னையொரு புறத்திற் போட்டு
வெறுமையுட னவளுமொரு புறமே சாய்ந்து
கோபமினி யறியாமல் நானப் போது
கூகூவென் றழுதுசத்தம் கூப்பிட் டேனே. 

பாடல் எண்:- 472
என்வருத்த மறியாம லய்யோ பாவி
ஏன்கிடந்து கூவுகிறா யென்ன பாவ
முன்வருத்த மூன்றுநா ளுபவாச மாச்சு
மூர்ச்சையுட னெனக்கிளைப்பு மிகவு மாச்சு
என்வருத்த மறியாம லமிர்தங் கேட்டு
ஏனழுதாய் என்றனக்கோர் பிராண னில்லை
பின்வருத்தங் கொண்டுநீ வருவா யென்று
புத்திசற்று மறியாமல் பிசகி னேனே. 

பாடல் எண்:- 473
அடங்காத பசியாச்சு எனக்கு அன்னை
அவள்வருத்த மினியறியா தழுதேன் யானும்
மாங்காரங் கொண்டெழுந்து ஓங்காரத்தை
மடக்கியே பிடித்திழுத்து மருங்கே வைத்தாள்
நீங்காம லருகிருந்த மாத ரெல்லாம்
நிலையாகப் பல அவிழ்தஞ் செய்து கூர்ந்தார்
பாங்காக அறையதுக்குள் மூன்று நாளும்
பசியுடனே யானவளும் படுத்திட் டோமே. 

பாடல் எண்:- 474
வீறாக நாள்மூன்றுங் கழித்து மேவி
விரும்பியென்னைச் சுமந்திருந்த அன்னை யார்க்கு
வாறான மாதர்வந்து வெந்நீர் விட்டு
மதனசூ தகந்தெளியச் சிரமேல்விட்டு
சீரான எனக்கொக்க சலநீ ராட்டிச்
செடமதுவின் கசடெல்லாஞ் சுத்தி செய்து
நேராக இருந்தஅறை புகுந்து மேல்மேல்
நிலமுரைத்துத் திலதநெற்றிக் கிட்டார் தானே. 

பாடல் எண்:- 475
மூளாத பசியெடுத்து அறைக்குள் ளேதான்
முழுசலிப்பால் குழல்கோதிச் சிகையும் போட்டுத்
தாளாமல் வீற்றிருக்கும் க்ஷணத்துக் குள்ளே
தயவாக அறுசுவையோ டன்ன முண்டு
தேளான பசியாறி யடைக்காய் கொண்டு
செழித்தபின்பு என்முகத்தைப் பார்த்தாள் தானே
கேளான மாதரெல்லா முடனி ருந்து
கிருபையுட னெனையெடுத்துக் களித்திட் டாரே. 

பாடல் எண்:- 476
மட்டில்லாப் பசியெடுத்து அன்னை யார்க்கு
மதிமயக்கந் தெளிந்துகளை சோப நீங்கித்
தட்டில்லாச் சந்தான முதித்த தென்று
சார்வாகப் பக்ஷமன்பு மிகமேன் மேலாம்
வீட்டிலரு கிருந்துமைந்த னருமை யாக
மிகமகிழ்ந்து முகமணைத்து முத்தந் தந்தாள்
கொட்டியான் சப்பாணி யிருக ரத்தால்
கூர்முகத்தில் சிறுநகையுங் கொண்டாள் தானே. 

பாடல் எண்:- 477
தேகமெல்லாங் குளிர்ந்தன்னை தெளிந்து மேவிச்
செடவருத்தந் தீர்ந்துஎன்மே லிரக்க மாகி
ஆகமெலாங் குளிர்ந்துசந் தோஷ மாகி
அதீதமைய மிட்டுச்சி முகமுத் திட்டுப்
பாகமுட னெடுத்தென்னை மடிமேல் வைத்துப்
பரிவாகக் கொங்கைமலர் வாயி லீந்தாள்
தாகமினி தெளியவே யமிர்த முண்ட
சட்டமதை யின்னதென்று சாற்று வேனே. 

பாடல் எண்:- 478
காமப்பா லமிர்தமுண்ணுங் கருவைச் சொல்லக்
கருத்தையினி யருள் வதென்ன ஆண்டே கேளீர் 
சோமப்பா லுண்டதனால் சோதி காணுஞ்
சுத்தமதி யமிர்தமுண்டால் சுழிதான் காணும்
வாமப்பா லுண்டபலன் பெரியோ ரானால்
மதுரசஞ்சீ வியையுண்டோர் ஞானி யானார்
தூமதித பாலமிர்த முண்ணு நேர்மை
சொல்லுகிறே னமிர்தரசச் சுகத்தை யாண்டே. 

பாடல் எண்:- 479
சுகத்தில்சுக மதிகசுக சூக்ஷா சூக்ஷஞ்
சொர்க்கபதி யானபதஞ் சுகஞா னங்காண்
அகத்திலிருந் ததீதரச பானஞ் சூக்ஷ
மாருமறி யாதவெகு அநந்த சூக்ஷம்
மகத்துவத்தை யானுரைக்க எளியோ ராண்டே
வான்புவியுஞ் செகமுழுது மதற்கொவ் வாது
இகபரமும் பரமுமிது வான சூக்ஷ
மிருதயத்தி லிருந்தவித மினிச்சொல் வோமே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 480
மாமதுர பானரச வாமரச நாமறிய
கோமளமா தன்னைகெர்ப்பக் குகையைவிட்டு நாபிவழி
பூமலர்வா ழம்புவியில் பிறந்திருப்ப தாமாகில்
காமக்கு ரோதமோகக் காமியத்தில் செல்வாரே. 

பாடல் எண்:- 481
எத்தேச காலமிருந் தெண்சா ணுடல்மீறிப்
பத்தாயி ரம்வருஷம் பாரி லிருப்பார்காண்
உத்தமர்கள் சித்துவிளைந் தூரிலிருந் துச்சிதமாய்க்
கர்த்தனருள் சித்திபெற்றுக் காயசித்தி செய்வாரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 482
நாபிக் கமலத் தருள்வாசல் புக்கிடு நற்கமலந்
தாயித்து அன்னை வளர்கெர்ப்ப வாசல் தனை யடுத்துக்
கோபித் தபான னுதைத்திட யோனிக் குழிவழிபோய்
ஆபித் ததுவருஞ் சிவயோக வாச லதுவழியே. 

பாடல் எண்:- 483
வழியோனி மூடி யுந்தியின் வாசல் வரும்பெரியோர்
கழிவில்லை தேக மூததைக் குழியதும் களைபிரழா
பொழிமலர் வாச மதிமலர் வீசும் புகழுடையா
ருழிவது மில்லை யபான னுதைத்த துணர்ந்திடுவேன். 

(வெண்பா)
பாடல் எண்:- 484
காமப்பா லுண்டு கருக்குழியி லூறும்
நாமப்பா லுண்ண நல்விதியோ- சோமப்பால்
உண்டு கடைத்தேற உந்தி வழிவருகா
இன்று வினையொழியா தினி. 

பாடல் எண்:- 485
வாமப்பா லுண்டு மகிழ்பெறுவ தாமாகில்
காமப்பா லுண்ணக் காரணமோ- ஏமப்பால்
இருகா லொருகா லிரவிமதி யொன்றானால்
குறுகிவரும் வாய்வதுவின் கூறு. 

(விருத்தம்)
பாடல் எண்:- 486
சந்திரபுட் கரணிமதி மதுர வாசஞ்
சைதன்னியப் பாலமிர்த மருவி சூழும்
இந்திரிய காமரச மிகுந்த மாதர்
எனையீன்ற அன்னையவ ளியல்பு தன்னால்
மைந்தன்திரு வள்ளுவனா யுதித்து மேலும்
மதனசூத கந்தீர்ந்து வரும்பா லுண்ண
விந்தவினி யானுரைப்பே னாண்டே கேளீர்
விபரமதா யமிர்தமுண்ணும் விதிசொல் வேனே. 

பாலுண்ணல்
(தரு)
அமிர்தமுண்டேன்காண்- மதிமல- ரமிர்தமுண்டேன்காண். 

பாடல் எண்:- 487
அமிர்தமுண்டேன் மதியாதாரமாக
அன்னைதன்மார்போட ணையவைத்தாசையால்
குமிர்தமாமதிபாலைத் தாராமலுங்
கொடியபாவிகாமப்பாலைத் தந்தனள்
திமிர்தமேதிருநடனம் புரியுமமிர்தந்
தந்தனளன்னையின்பத்துடன்
வமிர்தமாமதுமலர் கொண்டுவீசும்
வச்சிரஊஞ்சல்மீது நித்திரைசெய்துயான்- அமிர்த. 

பாடல் எண்:- 488
ஓங்குங்கேளிக்கையில் மாதுகொங்கைதனை
யொத்தக்கரத்தாலுமஸ்தகத்தைத் தொட்டுக்
தாங்கியேநிற்கவும் பாங்கியணைக்கவும்
தாவிமடிமீதிலேறி யிருந்துயான்
தேங்கியமாதுகளேங்கி யிருக்கவுஞ்
சித்திரப்பீதாம்பரமெத்தையின் பேரிலும்
பாங்கியுமன்னையதிகசந்தோஷமா யணைத்துப்
பாலகனுக்கமிர்த மூட்டினள்- அமிர்த. 

பாடல் எண்:- 489
இன்றுஅறைகுள்ளேமூன்றுநாள் பட்டினி
யின்பமெல்லாம் வெகுதுன்பமதாச்சு
வென்றுபிறவிக் கடலிலிலங்கிய
வேழத்தைவிட்டுயானே சத்துடனுமே
அன்றுபிறவிக்கரு நாட்டி
லதுவிட்டகம்பரமம் புவிவாழ்க்கையில்
கண்டுமிருந்தக்காட்சிகள் யாவையுங்
காமப்பாலுண்டிடுங் காரணங்காண்கிலேன்- அமிர்த. 

பாடல் எண்:- 490
ஆதரவாகவே யென்னையடுத்து
அழகாய்க்கொங்கையிலென்னை யணைத்துடன்
போதரவாகவுமென்முகம் பார்த்துடன்
பொல்லாதகாமப்பாலென் தாயூட்டினள்
ஊதுந்துருத்தியில் நாதவிந்தூணியும்
ஊறிக்குகையிலுருவதுவாகியும்
சூதுகளாகவுடலைக்கொண்டு வந்தேன்
தொல்லுலகிற்பொல்லா காமப்பால்தந்தனள்- அமிர்த. 

பாடல் எண்:- 491
செவ்வச்சிற்றடியும் ரெண்டடிவைக்கவும்
திரும்பச்செங்கைவளர் கொங்கையைக்கிள்ளவும்
மூலத்தடியில்முகத்தோடணைத்துடன் மூட்டியே
காமப்பாலூட்டியேதந்தனள்
வாலைசிற்றடியே ஞாலமுதூட்டுகிறேன்
வாருமப்பாவென்று மார்மேலணைத்துமே
கோலமதாகவுங் கொங்கைமலர்தனைக்
கூப்பிட்டுப்பாலனும் வாப்பிட்டுறிஞ்சவும்- அமிர்த. 

பாடல் எண்:- 492
ஐயுறவேகருவூர்த்திரு நாட்டினில்
ஆதரவும்விட்டுப்பார்தனில் வந்துமே
வையகத்தாசை வருமென்றறியா
மனதிலெண்ணாமல்மயங்கி நின்றேகியான்
பொய்யாசையின் பப்புதுமையைவிட்டுமே
பொல்லாப்பசிகாமப்பாலை யுண்டாகையால்
மெய்யானபுத்திமறந்து அசதியுமிந்த
விதம்வருமென்றறியாமலும்- அமிர்த. 

பாடல் எண்:- 493
மாய்கைக்கடலில் வருஞ்சையோகஞ்செயில்
மாதர்கருக்குழி கெர்ப்பந்தரித்ததில்
உய்வினை மைந்தனுதித்துப்பத்துத் திங்களில்
ஓங்கிப்பிறந்துடன் தாங்கிப்பால்தந்தனள்
காமப்பாலென்றறியாமலும் பாசக்
கடலினிலழுந்தாமலும் பாசங்கொண்
டோங்கிவாமப்பாதந்துணர வொட்டாலும்
உதிரப்பால்தந்து வூட்டினளன்னையே- அமிர்த. 

பாடல் எண்:- 494
செங்கநதிபற்பத்தீர்த்தங் கொள்ளாமலும்
திரோதாயிமாயையின் பாசக்கடல்விட்டுச்
சங்கநதிசந்திர புட்கரணியாணம்
சாகைநீருண்டுதவமுஞ் செய்யாமலும்
பரிதிமதியறியாமலுஞ் சோதியின்
பாலமிர்தந்தனைப் பார்த்துணராமலும்
கருதியுமன்னைக் காமப்பாலைத்தந்துடன்
காட்டினள் முத்தமிட்டாட்டினளூஞ்சலில்- அமிர்த. 

பாடல் எண்:- 495
இடைகலையைக்கொண்டு பிங்கலையிலூட்டி
யோகாக்ஷரத்தைக் கொண்டினியறியாமலும்
மடமயில்மாதவள்மாய்கைப் பாலூட்டியும்
வைத்திருத்தூஞ்சலில்சுற்றியு மாட்டினள்
கெர்ப்பக்குழிதனில்கியானதத்துவமாய் உற்பவித்து
முடலாவிபொருளுடன்
கற்பனைபிரமன் கடாக்ஷத்தினாலருள்
முற்பவஞ்செய்த பூசாபலனாண்டையே- அமிர்த. 

பாடல் எண்:- 496
அண்டரண்ட பகிரங்கமாயிரத்தெட்
டாக்கினைமேவுஞ் சதாசிவசம்புவால்
எண்டிசையு மீரேழுலோகங்களும்
கண்டுமகிழ்ந்திடக் காரணசற்குரு
பூர்வக்கியானம்புகழ் பாரினிலுதித்
தேறுமெய்ஞ்ஞான சித்தாதிகள்பொற்பதஞ்
சீர்பெருந்தசதீட்சை விளங்கிடக்கூறு
மகத்தியமாமுனியின்கிருபை- அமிர்த. 

(விருத்தம்)
பாடல் எண்:- 497
செங்கதிரோ னுதித்துவளர் புவியிற் குள்ளே
செனித்தவுடல் பிறந்ததுநா ளொன்ப தாச்சு
சங்கையுட னானிருந்து வந்த சூதச்
சடங்கறுத்து அங்கசுத்தி க்ஷணத்திற் செய்து
இங்கிதமா யருகிருந்த மாதர்க் கெல்லாம்
இன்பமுடன் தேகமெல்லாம் நீர்க ளாடிப்
பங்கமா மெனைவளர்த்திக் கொடிபு தைத்துப்
பலவிதமா யமுதுகொண்டு படைத்திட் டாரே. 

பாடல் எண்:- 498
மந்திரத்துக் கெட்டாத நாத விந்தை
வரவழைத்த வவனவளும் வேறு காண்க
வந்துவிட்டே யனுபோகஞ் செய்த தந்தை
விந்துஒரு புறந்தனில்வெவ் வேறு காண்க
தந்திரமாய் வயதுதந்த கலையுங் காண்க
சார்விருக்கு மருத்துவச்சி தானுங் காண்க
சுந்தமா மகத்தில்தே வதையை வேண்டித்
தூபமொடு தீபநைவேத் தியந்தந்தாரே. 

பாடல் எண்:- 499
அகத்திலுள்ள சாஸ்திரங்கள் முடிந்த பின்பு
அவரவர்க ளாறுபசி யான பின்பு
மகத்தான பெரியோர்க ளருகே சென்று
வரிசையுட னன்னையுமே யென்னைப் பார்த்து
ஜெகந்தனிலே வெகுகோடி காலம் வாழ்ந்து
ஜென்மித்தோர் வயதுபெற்றுச் செழித்து வாழ்வாய்
வகுத்துவைத்த நேர்மையறி யாம லாண்டே
மாண்பரெல்லா மிப்படியே வாழ்த்தி னாரே. 

பாடல் எண்:- 500
சூதகமா யானிருந்த அகத்தை விட்டுச்
சிறுவனைத்தா னிருகரத்தி லேந்தி மேல்மேல்
சாதகமாய்க் கொங்கைதனி லணைத்துப் பின்பு
சயனமிகப் பார்த்துஅன்னை யகத்தி லுற்றுப்
பேதமிலான் அன்னைபிதா அழகு சுற்றம்
புகழ்பெறவும் வாழ்த்திஆ லாத்தி சுற்ற
ஆதரவா யகத்திலெனைக் கிடத்தி வைத்து
அருள்பெறவு மன்னையுந்தா னமுதீந் தாளே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900