திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 301- 400

(கொஞ்சகம்) 
பாடல் எண்:- 301
துரியாதீத வீடதனில் சொப்பனத்துக் கப்புறத்தில்
மரியாதெ ழுந்திரண்டு வந்தேக லக்கையிலே
விதியாய்வ ளர்ந்தமதி விண்ணேகி யம்பரத்தில்
பதினால்கு றைந்ததென்றால் பாரதனில் வாழ்வாரே. 

பாடல் எண்:- 302
வாழ்ந்துசமர்த் தாகியபின் வான்புவியி லுள்ளமட்டும்
தாழ்ந்துகுண விங்கிதமாய்ச் சாவுமட்டுந் தாரணியில்
சூழ்ந்துலகத் துள்ளிருந்து துய்யகரு ஆத்துமத்தில்
ஆழ்ந்தமறை நூல்பார்த்து அம்புவியில் வாழ்வாரே. 

பாடல் எண்:- 303
கருவூர் வெளிதனிலே கமலமலர் நாதவிந்து
விருவாந் துருவமதில் மெய்கலந்து நிற்கையிலே
அறிவாக மூவஞ்சு மானமதி தான்குறைந்தால்
குருவுடனே சீஷனுமாய்க் குவலயத்தில் வாழ்வாரே. 

பாடல் எண்:- 304
சத்தியருள் புத்தியதாய்ச் சுகந்ததிரு நாதவிந்து
உத்தெழுந்து ருக்கலத்து வுற்பனங்கொண் டூதையிலே
முத்துளித்தே னிந்தமதி மூவஞ்சு மேசுழித்தால்
பத்திதரு மந்திரமும் பலகலையும் பார்ப்பாரே. 

( வெண்பா )
பாடல் எண்:- 305
மருவிக்கல வித்தெளியு மாறியுயர் நாதவிந்து
கருவியுற வாகக் கலக்கையிலே- பருவமதாய்
நின்றுவளர்ந் தகலைநேரில் பத்தாறுங் குறைந்தால்
கண்டுகொளுந் தரித்திரவான் காண். 

பாடல் எண்:- 306
சண்டவெளி தாக்கையிலே தாவித்த நாதவிந்து
அண்டமதைத் தாண்டி யணுகினால்- மண்டலத்தில்
சாவளவு மேவறுமை தரித்திரத்தி லேயழுந்தி
மேகவினை சூழ்ந்திடுங்காண் மேல். 

( கலித்துறை )
பாடல் எண்:- 307
கலையே பகுந்த மெய்ஞ்ஞான சோதி கருத்தினுள்ளே
நிலையே கெதியென்று நின்றுகொண்டே நெடுங்காலமெல்லாம்
புலையே நிகழ்த்தி யுமையாம் பிகையிரு பொற்பதத்தில்
மலையே யகற்றிப் பதிமேலு நின்று வணங்கினனே. 

பாடல் எண்:- 308
நூறாகும் பிஞ்சுசுழி முனைவாசல் சிறுவீட் டுக்குள்ளே
மாறாத விந்துவு நாதமுங்கூடி மறுவையிலே
பேறாத நின்று மதிநா லம்பிகை பேசிநின்றால்
ஆறாகி லிங்கமு நாதாந்தயோகி யம்பரமே. 

பாடல் எண்:- 309
குடிகொண்ட மாதர் மாயக் குழிதனிற் கொண்டுமனம்
படிகண்டு நின்று வளர்ந்துகொண் டேன்மது பானத்திலே
அடிகண்டு போற்றி யம்பிகைப் பாத மருள்புரிய
முடிகண்டு நின்று வணங்கியே காக்ஷரமூ லத்திலே. 

( விருத்தம் )
பாடல் எண்:- 310
மதுரமது வொருபுறமாய்ச் சேர்ந்த வீட்டில்
மதியமிர்தம் நின்றிலங்கு மூல வீட்டில்
கதிருதைய ஜெகச்சோதி யான பீடங்
கனகரத்ன நாதவிந் திரண்டுங் கூடிச்
சிதறாம லொருமுனையி லுதித்து மேலுஞ்
செடமெடுத்த மார்க்கமினி செப்பக் கேளிர்
பதறாமல் யானருளப் பெரியோர் பாதம்
பணிந்திந்நூல் பெருமை யெல்லாம் பகர்வே னாண்டே. 

பாடல் எண்:- 311
மந்திரமும் சாஸ்திரமும் பிறந்த வீட்டில்
மறைநூலை விதித்தவயன் வாழ்ந்த வீட்டில்
தந்திரமாய்ச் சர்வவுட லெடுத்த வீட்டில்
சதாசிவமு நடனம்புரிந் திருந்த வீட்டில்
சுந்தரஞ்சேர் நாதவிந்து தித்த வீட்டில்
துருத்தியுடற் குள்ளுமொரு வுடலாய் நின்ற 
இந்திரன்தன் பதிக்குமே லறைவீட் டுள்ளே
இப்படியே யென்னுடல்தான் சமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 312
கருவிலுட லெடுத்தவிதக் கருத்துஞ் சொன்னேன்
காரணமாய்ச் கருவிநின்ற கணக்குஞ் சொன்னேன்
மருவியுற வாகிநின்ற மைந்தர்க் கெல்லாம்
வயதுகுறை வாகிநின்ற மார்க்கஞ் சொன்னேன்
பெருகிநின்று கலைகுறையு மிரண்டுஞ் சொன்னேன்
பிறந்துலகில் வாழ்ந்திருந்த பெருமை சொன்னேன்
குருவுடனே சீஷனுற வாகி நின்ற
கூர்மையறிந் தெந்திரத்திற் கூறி னேனே. 

பாடல் எண்:- 313
சித்துவிளை யாடுநவ ரத்ன பீடஞ்
சிறந்தசத்தி வல்லபைதன் னருளினாலே
வித்திருந்த விடமறிந்து வகண்டஞ் சொல்லி
வேதமறி யாதவுடல் வகுப்புஞ் சொல்லிக்
கொத்திருந்து குலைசாயுந் தலமுஞ் சொல்லிக்
குருவான நாதவிந்தின் கூறுஞ் சொல்லி
முத்துதித்த சிறுவீட்டுக் குள்ளே யிந்த
முறைப்படியே கருவியெல்லா முடிந்ததாண்டே. 

பாடல் எண்:- 314
தன்னினைவைத் தானறியு நாத விந்து
தரிசனத்தை யாட்டியது மேலும் பூட்டி
உன்னினதால் யானுமொரு சடல மானேன்
உறுதுணையா னேனுந்த னுந்திக் குள்ளே
என்னினைவை யானறிந்து கருவூர் நாட்டில்
இப்படியே சிறுகுழந்தை யானு மானேன்
முன்னினைவைத் தவிர்த்தாந்த மூலத் துள்ளே
முடிந்தவகை யிவ்விதங்கா ணாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 315
தாங்கிநின்ற கருவிதுக்குள் யானும் வந்து
தரித்தபின்பு அன்னையென்னைச் சடத்தி லேதான்
பாங்கதுவா வெனைச்சுமந்த ஆத்தா ளுக்குப்
பளபளப்புந் தளதளப்பும் பாரின் மீது
ஓங்கியொரு அடியெடுத்து வைத்த போது
உள்ளமெல்லாம் வேதனையால் நொந்து வாடிச்
சாங்கியமுந் திங்களொரு ஐந்துக் குள்ளே
சாதகமாய் முடிந்தவகை சாற்று வேனே. 

பாடல் எண்:- 316
நடக்கையிலே யிருகாலு மசைவுஞ் சேர்ந்து
நாவிலிந்த வசனத்தை யுரைக்கக் குன்றிப்
படுக்கையிலே யொருபுறமாய்ப் புரண்டு ருண்டு
பத்தாவைக் கண்டவுடன் பார்க்குங் காலை
முடக்கையிலே மேனியெல்லா மூதி வாடி
மெய்க்கரத்தில் கனத்ததொரு மைந்தர் தன்னை
எடுக்கையிலே தள்ளாடி சோப மாகி
யிப்படியே சுமந்திருந்தா ளென்தா யாண்டே. 

பாடல் எண்:- 317
சாந்தமா யெனைச்சுமந்த அன்னை யார்க்குச்
சரீரமதில் வடிவுநிறந் தங்கம் போலாம்
ஆய்ந்தமதி பூரணம்போல் முகமே யாகும்
அழகுமதி யொளிவதுபோல் புருவ மாகும்
தோய்ந்தவிழி நிறமதித குமிழி யாகுஞ்
சொல்லரிய நாசியதும் வசிக ளாகும்
காய்ந்தமலர்க் கொப்பான இதழே யாகுங்
கனத்ததந்தங் கருநாகக் கனிபோ லாண்டே. 

பாடல் எண்:- 318
வரையெழுந்தக் கதிரவன்போல் செருக்க முற்று
வயிரமிட்டி ழைத்தசித்திர மார்பு மாகும்
திரையெடுத்து அலையதுபோற் சிறந்த வுந்தி
செவ்விளநீர்க் கொப்பான கொங்கை ரெண்டும்
துறையடுத்தத் தேளியைப்போல் கணுக்கா லாகுந்
தொந்திவயி றாலிலைபோல் துண்டு காணும்
நிறையடுத்த புத்தகம்போ லொத்த பாதம்
நேராக நானிருந்த பாண்ட மாண்டே. 

பாடல் எண்:- 319
இருந்ததலம் விட்டெழுந் திருக்க அஞ்சி
யென்மனதா லறுசுவையை வாங்க அஞ்சி
சிறந்தருளுந் தெய்வதலம் போக அஞ்சி
ஜென்மவினை தீரநதி முழுக அஞ்சி
பரந்தவயி றினிலிருந்து பாடு பட்டார்
பாலகனாய் வளர்ந்துவிந்தப் பாரில் வந்தேன்
வருந்தியென்னை வளர்த்தெடுத்த அன்னை கெர்ப்பம்
வயிறுதனி லிப்படியே வளர்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 320
ஊணில்லை யுறக்கமில்லை யுணர்வு மில்லை
யுறவாகச் செயவிஜய யோக மில்லை
நாளில்லை நகைப்பதில்லை நலந்தானில்லை
நல்லறிவு சற்குணமு நாட்ட மில்லை
வீணில்லை விருப்பமில்லை விகற்ப மில்லை
மெய்தளர்ந்து மேனியுண்ணாய் மெலிந்து அன்னை
ஆணில்லை யென்றுமன நொந்து வாடி
அங்கமதி லிப்படியே யமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 321
கையாரச் செய்கின்ற தொழிலு மில்லை
காலார நடக்கின்ற சுறுக்கு மில்லை
மையான விருமடவா ளுறவு மில்லை
மனதார அள்ளியிடுந் தரும மில்லை
செய்கின்ற வாழ்க்கையில்லைச் செழிப்பு மில்லை
சேர்ந்தணைந்த தந்தையின்மே லாசை யில்லை
ஐயாறு நாள்முதலாய் மூன்று நாளும்
அங்கமெனுந் திருக்கோயி லமர்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 322
ஓரடிதா னெடுத்துவைத்தா லுடலுங் குன்றி
ஒத்தவிடை சிறுத்துகொங்கை யுடலக றுத்து
சீரடியாய் நடந்துந்திக் காலு மீறிச்
செப்பரிய அன்னைமனஞ் சலித்து வாடி
சாரடியு மின்னல்கரு மனமே துஞ்சிக்
கன்னமுகில் வருஷித்துக் கடின மாகி
ஆராடி படுக்குமனை கெர்ப்பத் துள்ளே
அமைந்திந்தப் படியாக வளர்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 323
உருவாகித் தலைகீழ்க்கால் மேலே யாகி
யூனாகி யொப்பரிய வுடலு மாகித்
தருவாகிக் கண்டனணு காம லாகிச்
சடம்வளர்ந்து ஒன்பதுதிங் களிலே யென்னைத்
திருவாகித் தனஞ்செயன்தா னெழுந்து வோங்கித்
தீர்க்கமுடன் தலைமேல்கால் கீழே நோக்கி
அருவாகி யன்னையுட கருவூர் தன்னில்
ஆதியெனுஞ் சோதியைத்தா னர்சித் தேனே. 

பாடல் எண்:- 324
அகத்திலோ ரகமெனவே வீடுங் கட்டி
அஷ்டகரு விக்குலத்தைக் குடியாய் நாட்டி
ஜகத்திலுயர் வேதமறி யாத சூட்சும
சிறந்தருளும் வயதுபிர மாணங் கூட்டி
யுகத்திலெழு சாஸ்திரத்தால் முடியா வண்ண
முற்பத்தி யானவகை யுண்மை காட்டிக்
குகைத்தலத்தி லிருந்தவன்னைச் கருவூர்க் குள்ளே
கும்பிட்டே கோயிலெல்லாங் கூறுவேனே. 

ஆறாதார தரிசனை
( தரு )

கும்பிட்டுக்கொண்டேன்காண்- கணேசனைக்
கும்பிட்டுக்கொண்டேன்காண். 

பாடல் எண்:- 325
கும்பிட்டுக்கொண்டேன்குருவருள் பாதத்தில் 
கோயில்திருக்காணிமூலத்தில் வாசலில்
வெம்பிட்டக்கனியையின் பிட்டுவுண்டருள்
வெத்திமதகரிசத்தின் பாதத்தில் 
அம்பிகையாகிய ஆதிபரஞ்சோதி
அண்டத்தைவிட்டு அணுகியமூலத்தில்
அம்பக்கனியுண்டு தும்பிக்கைபாதத்தை
நம்பிக்கையாக நாற்கோணவீட்டுக்குள்- கும்பி. 

பாடல் எண்:- 326
துன்பமகற்றுஞ்சுழிமுனை வீட்டில்
துலையாததுயர்ந்துலைத்திடும் வீட்டினில்
நம்பனருள் புகழன்புதருமூலம்
நாலிதழ்மீதிலேநாயகன் பாதத்தைச்
சின்மயசிற்பரஞ்சித்ரமணிவாசம்
அன்னையருள் திருஅம்பிகைத்தன்பதம்
உன்னிதமானசுழிமுனை வீட்டினில்
தன்னைத்தானறியுந் தந்திமுகனருள்- கும்பி. 

பாடல் எண்:- 327
செங்கதிர்ச்சந்திரன் தங்கியவீட்டினில்
திருநடனம்புரிந்தப்புக் கோட்டினில்
ஐங்கரன்வல்லபை சங்கரிபாதத்தில்
ஆனந்தமூலத்தில் நானின்றனுதினம்
கங்கையணியுந்திருமலர்ச்சோலை
கமலமலராயிரத்தெட்டிதழில்
திங்கள் மதிவளர்சிங்காசனத்தில்
எங்கள்குருபரனீசன் பொற்பாதமே- கும்பி. 

பாடல் எண்:- 328
முத்திதருஞ்சுழிமூலத்தின் வாசலில்
முன்னேமறித்தெழுசந்நிதி வீதியில் 
தந்திமுகவனும் வல்லபையாகிய
சத்திநாற்கோணச்சதுரிதழ் மேலேயான்
சித்திதருஞ்செயல் வித்தியாதனத்தில்
உத்தமர்குழுமுலகரசாள்வது
மத்தகசநவரத்தினகுண்டலி
வல்லபைதான் பதமுல்லாசமென் சொல்வேன்- கும்பி. 

பாடல் எண்:- 329
சொல்லும்பதிக்குமேனாலிதழ் கோணஞ்
சுழித்தெழுந்தக்ஷரந்தும்பி யருள்முகம்
வெல்லும்விதியைவிதித்தருள் கர்த்தன்
பிரம்மா சரஸ்வதிபாதத்தைக் கண்டுநான்
அல்லலகற்றுமகண்ட மதுகடந்
தப்புரஞ்சித்திரமணிமலர்வாசலில்
வல்லபையாகிய பிரம்மாசரஸ்வதி
வச்சிரமேடைநாடுரக்ஷதன் பொற்பாதம்- கும்பி. 

பாடல் எண்:- 330
ஆதிமறைநூலும்வேதம் வகுத்தவராயன்
தன்னாபிக்கமலந் துதித்துவா
சாதிகுலத்தை வகுத்தசரஸ்வதி
தந்தைபிரமாவைநான் சிந்தைகொண்டர்ச் சித்து
சோதியெனுஞ்சுழுமூலஸ்தானங்கடந்
தோதுமறைநாதவிந்தினருள்பதம்
வீதியெனுஞ்சதுஷ்கோணத்திலங்கிய
பிர்மா சரஸ்வதிபாதம்பணிந்தேன்- கும்பி. 

பாடல் எண்:- 331
சொன்னபதிக்கு மேலக்ஷரம்பத்துத்
துலங்கியவீடு பிறைகோணத்தாலையம்
வண்ணமில்லாததில் மாலுடன்லட்சுமி
வீற்றிருந்தார்மணிபூரக வீட்டினில்
வன்னமலர் மணிபூரகந்தன்னில்
நன்னய நாபிக்கமலத்திலட்சுமி
நாரணன்பாதத்தில்காரணமாகவும்- கும்பி. 

பாடல் எண்:- 332
உருத்தமதிக்குமப்பாலேழு கோணம்
உயர்கின்ற அக்ஷரம்பன்னிரண்டாம் வீட்டில்
திருத்தமிழிருக்கின் றருத்திரனுத்திரியைத்
தேடிக்கதலியடிக்குள்ளே கண்டுயான்
இருநாளிருத்தி யொருநாளையோட்டி
யெழுந்துவளர்ந்த கதலியடியினில்
மருவியருத்திரிதன் பதம்வணக்கத்
துடன்கண்டிணக்கத்துடனே- கும்பி. 

பாடல் எண்:- 333
காரும்விசுத்தியறு கோணவாலையுங்
கண்டுகொள்ளும் பதினாறிதழக்ஷரம்
தீருமயேஸ்பர தேவரிருப்பிடஞ்
சீராய்மயேஸ்பரி பாதத்தைக்கண்டுயான்
தேருங்கரியுஞ் சிவிகைபரியுந்
தெரிசனங்காட்டி யருளுஞ்சுழுத்தியில்
மாருருவாகிமயமாய் விளங்கும்
மயேஸ்பரன்பாத மயேஸ்பரிபாதத்தில்- கும்பி. 

பாடல் எண்:- 334
வித்தியாதனகனமேவுஞ் சிவாலய
மேருவினாக்கினைலலாடஸ்தானந் தனில்
அத்திபுரத்திலருளுஞ் சதாசிவ
னாயிமனோன்மணிதாயார்தன் பாதத்தில்
சித்தியருள்சத்தவட்டத் திலங்கிய
சிற்பரத்தக்ஷரந்தற்பொருள் ரெண்டினில்
முத்தியாநின்றபதிக்கு மேலப்புற
மோனவளர்ந்தெழுந்தக்ஷர மொன்றிலே- கும்பி. 

பாடல் எண்:- 335
அன்பிருநூறுமிருபத்து நான்கும்
அகண்டகடாகமதுபடைத் தாக்கினை
துன்பமகற்றுவாலாம்பிகை பாதத்தில்
தொண்டுசெய்தர்ச்சனைகண்டு மகிழ்ந்துயான்
இன்பமதிமலரன்பு வைத்தம்பி
யேகாக்ஷரங்கொண்டுவாகாச மேருவில்
தன்மயசுரூபசுகாதீதங்காட்டியே
தந்தனரிந்திரசந்திரப் பிரகாசனே- கும்பி. 

பாடல் எண்:- 336
சுழித்தாளைமூன்றுமெழுத்தாளை மூலம்
விழித்தாளைக்கண்டுஅழித்தாளை யம்பிகை
யிழித்தாளையாக்கேகி யெழும்பும்
பரத்தாளிணையடிப்பாதம் பணிந்து யான் 
அழையாளையன்னநடையாளை யின்பத்
துடையாளைமூலத்திடையாளை யம்பிகைப்
பழையாளைலோகம்பதினாலுங் காத்தாளை
தழையாளையென்னுடதாய்ப் பதங்கண்டுயான்- கும்பி. 

பாடல் எண்:- 337
துல்லியைமெல்லியைஒல்லியை முல்லியை
நல்லியையெல்லியைவல்லியைக் கண்டுயான்
அல்லிநகர்விட்டகண்டவெளி கடந்தத்
திரிபுரத்துக்கே சுழிமுனை
துல்லியமாமதிசூழ்நகர் மாளிகை
சுத்தபெருவெளிகர்த்தனிருப்பிடஞ்
சொல்லிலடங்காதுருவெளி தனில்
றுரியாதீதமடவாலயங் கண்டுயான்- கும்பி. 

பாடல் எண்:- 338
மதியைப்பிடித்து நிதியைத்தரித்து
விதியைப்பிடித்துப் பதியிலடைத்துக்
கெதியையடக்கிச் சதியையொடுக்கி
அதிவிதவம்பிகையாத்தாளைக் கண்டுயான்
விதிமதிரெண்டு மிறுக்கியிறுக்கி
விளக்கித்துலக்கிப்பெருக்கி வித்தாக்கி
நதிவலமாக்கியடக்கியே பிங்கலைநாடு
நடுவணை கூடுறவாகவே- கும்பி. 

பாடல் எண்:- 339
பாணிச்சியம்பரகாணிச்சி யென்னுடல்
ஊணிச்சிப்பிரசங்கவாணிச்சி யுத்தண்ட
வேணிச்சியாக்கினைமேவும் வாலாம்பிகை
ஆணிப்பொற்கமலஅம்பிகைப் பொற்பதம்
பாணிச்சடைச்சியை பங்கவலைச்சியைப்
பத்தியிடைச்சியை வெத்திநடைச்சியை
ஆணுப்பறைச்சியை வாணுதுரைச்சியை
அம்பிகைப்பாதத்தை நம்பினேனன்பனான்- கும்பி

பாடல் எண்:- 340
ஆசைப்பெருங்கடல் வெள்ளத்தினுள்ளே
அழுந்தியுடலையெடுதது மயிர்ப்பால
மோசைச்சிலம்பொலிகேட்டு வாலாம்பிகை
யுத்தமியாகியசத்தி தன்பாதத்தைப்
பாஷைபதினெட்டுவாசம் பொருந்திய
தேசதேசாதிகள்ராஜர் பணிந்திடும்
நேசபுவனமீதாளுஞ் சக்ரவர்த்தி 
பூசிதபிர்மசதாசிவ சம்புவை- கும்பி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 341
மரகதத்தி பரிபுரத்தி வாமி வாலை
மகுடரத்ன வம்பரத்தி மதுர வின்பம்
திரிபுரத்தி செழுங்கரத்தி தில்லை வாழுஞ்
செயபுரத்தி மாபரத்தி சிறுபெண் ணாத்தாள்
அரிபுரத்தி மகுடான ஆதி சோதி
யகண்டத்தி யுகண்டத்தி யலகை யான
திருபுரத்தி கருவிருத்தி செழிக்க வந்த
சிவகாமி கமலமலர் தெரிசித் தேனே. 

பாடல் எண்:- 342
வாரிடைச்சி கார்குழைச்சி வதனப் பேச்சி
வாழ்பறச்சி யாழ்புறச்சி வட்ட மீதில்
சீர்புரச்சி மாவிடைச்சி திங்கள் சூட்சி
செங்கனலாற் சிவந்தெழுந்த சிறுபெண் ணார்கல்
ஆர்விழிச்சி போர்நடைச்சி யதித சூட்சி
அழகிடைச்சி துடிநடைச்சி யகமில் லாத
பூரணத்தி யம்பனத்தி பருவ மையம்
பொருளான வம்பிகையைப் போற்றி னேனே. 

பாடல் எண்:- 343
காத்தாளை யகண்டமதின் கருத்தி னாளை
கனகசபை வட்டமதில் கதிர் ஞான
மூத்தாளை மூவருக்கும் தாயா னாளை
முப்புரத்தை யெரித்தமூலச் சுழியி னாளை
பாத்தாளை பற்பநதி கரையாத் தாளைப்
பதினாலு உலகுக்குந் தாயா னாளைப்
பூத்தாளைப் பூவிலொரு பிஞ்சா னாளைப்
புகழுமா தளம்பூவின் வடிவா னாளை. 

பாடல் எண்:- 344
சித்தர்கள்தான் பதினெண்பே ராத்தாள் சொன்ன
செயலெல்லாங் கண்டுணர்ந்து தெளிந்திட் டார்காண்
வித்ததித நாதபரி பூர ணத்தின்
விபரமெல்லாங் கண்டுணர்ந்து மேன்மேல் வாழ்ந்தார்
கூத்தாடித் திருநடனக் குவட்டி லேதான்
கும்பமுனி யால்தெளிந்தோர் கோடா கோடி
தீர்த்தாளை யென்கலியைச் சிறுபெண் மாது
செம்பொனிற வம்பிகையைத் தெரிசித் தேனே. 

பாடல் எண்:- 345
ஆரணத்தி நாரணத்தி யாக மத்தி
அகண்டத்தி யம்பபரத்தி யாதி யான
காரணத்தி வாரணத்தி கனக சத்தி
கமலமலர் கருணைவெற்பில் காட்சி தந்த
சீரணத்தி மாரணத்தி திங்கள் சோதி
செம்பரத்தி யம்பரத்தி சிவகா மத்தி
பூரணத்தி பொற்கமலம் புருவத் தாயைப்
புவனமயேஸ் பரிகமலம் போற்றி னேனே. 

பாடல் எண்:- 346
கனல்கோடி ரவிகோடி காந்தி கோடி
கருதுசுழி முனைகோடி மின்னல் கோடி
அனல்கோடி முகில்கோடி யகண்டங் கோடி
அகண்டமண்ட லங்கோடி யளவில் லாத
சுனைகோடி சுழல்கோடி சூக்ஷங் கோடி
சூக்ஷசடா தரங்கோடி சுடர்தான் கோடி
புனல்கோடி விலைகோடி தாபங் கோடி
புகழ்வணங்கித் திருவடியைப் புகழ்வ னாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 347
என்னையுரு வாக்கியுட லெண்ணெழுத்தை மெய்யாக்கி
அன்னையெனு மண்டபத்தி லம்பரமாஞ் சிற்பரத்தில்
கன்னல்விழி மாமறைச்சி காதலரு ளும்பறைச்சி
உன்னிதவா லம்பிகையெ னுட்பொருளைப் போற்றினேனே. 

பாடல் எண்:- 348
முட்ட லிருசுட்டி முகமறியா வம்பிகையைத்
தட்டழியா வட்டமதில் தானவனாய்த் தானிருந்து
மட்டுமறி பன்னிரண்டில் வாங்குமொரு நாலதனில்
கட்டி யிறுக்கிநல்ல கருத்தால் துதித்தேனே. 

பாடல் எண்:- 349
மறைநாலும் வாழுகின்ற மாமறையுந் தாண்டியப்பால்
கரைகடந்து யான்மகிழுங் கருவீட்டி லேபுகுந்து
திரைகடந்து நின்றுவளர் திருவீட்டுக் கப்புறத்தில்
அரைகடந்த சோதிநட ரம்பிகையைப் போற்றினேனே. 

மேற்படி ஆனந்தக்களிப்பு
(தரு)
தனனதனனதந்தனனா- தான தனனதனனதனனதந்தனனா. 

பாடல் எண்:- 350
நாற்கோணசக்கரவீட்டில்- நல்ல
நாலிதழானநடுவணைக் கோட்டில்
தீர்க்கமாயெனையுருக்காட்டி- வைத்தகண
சித்திவிநாயகாநித்தஞ்சரணம்
சட்கோணத்துள்ளலங்காரம்- பிர்ம
சரஸ்வதிபாதபங்கயத்தைநான் மறவேன்
தற்காத்தருள்புரிந்தோன்- சிவ
சம்போசதாசிவசங்கராசரணம்- தனன. 

பாடல் எண்:- 351
ஆசாபாசமுந்தவிர்ந்து- நல்ல
ஆனந்தஞானக்கடலில் மூழ்கி
பூசாபலன்செய்துவைத்த- ரத்ன
பொன்னுங்கணபதியின்னஞ் சரணம்
நேசபரிபூரணத்தின்- மதுர
வாசமலரருள்கணேசனே சரணம்
பேசும்பெருமூலாதாரஞ்- சுழியின்
பிராணகுண்டலிபொற்கமலத்தை மறவேன்- தனன. 

பாடல் எண்:- 352
அடிநடுமுடியறிந்து- நல்ல
அகண்டசாக்ரஞானக் கடலிலிருந்து
கொடியபாசத்தைப்பிரித்து- நிதம்
குடியாகும்பிர்மாவை நோக்கினேன்
சரணம்பிடி படாதுரவிமதியும்- இதைப்
பலமாய்ப்பிடித்துயான் வாசிகொண்டூதித்
துடியொருசாதனையாண்டில் துன்ப
மகலும்பிர்மாவையான்தொழுதடி சரணம்- தனன. 

பாடல் எண்:- 353
உந்திக்கமலத்தின்மீதே- நல்ல
முக்கோணவட்டத்தினுள்ளே பிரகாசஞ்
செந்திசிங்காசனத்துள்ளே- சிவ
சித்திதரும்பாருத்திரி சரணம்
சந்திரபுட்கரணிதன்கரையில் சித்திரச்
சாவடிமண்டபசாலை நடுவில்
கெந்தசுகந்தவிலாசம்- வினோத
அந்தபரிமள அகண்டவிலாசம்- தனன. 

பாடல் எண்:- 354
காயமென்றோரையடுத்து- நல்ல
காணாதரூபகருத்தைக் கொடுத்து
மாயாவிசுத்திப்படைத்து- வாழும்
மயேஸ்வரன்பாதத்தைமறவேன் காணாண்டே
தூயபதிகளுந்தாண்டி- நல்ல
சுக்கிலத்தாடுஞ் சதாசிவந்தாண்டித்
தாயுநானுமறவேண்டி- குரு
தற்பரஞானப்பிரபந்தமிதாண்டி- தனன. 

பாடல் எண்:- 355
தும்பிமதகரிவீட்டில் - நல்ல
சுக்கிலநாதமிரண்டையுமூட்டி
வெம்பாலுருவையுங்காட்டி- வைத்த
அம்பிகையுன் பதம்நம்பினேசரணம்
தம்பித்துவாசிரெண்டூதி- மதி
சார்வானசுக்கிலத்தாலே கொண்டேத்தி
மம்பித்துஎண்சாணளந்து- வைத்த
வாலாம்பிகைப்பதமறவேன் காண்சரணம்- தனன. 

பாடல் எண்:- 356
ஊதியதாரைவெளியில்- நல்ல
உம்மென்றுமோங்காரவூத்தைக் குழியில்
வீதியிலென்னையழைத்து- வைத்த
மெல்லியேயம்பிகைவல்லியே சரணம்
சேதியறிந்தேன்காணம்பாள்- மதி
சேரும்பதியறிந்தாரூரைக் காட்டி
மேதினியோர்களெல்லாம்- ஞான
வெட்டியானென்று மகிழ்ந்தாரே- தனன. 

பாடல் எண்:- 357
சிங்கார அம்பரவீதி- நல்ல
சிற்பரவானந்ததற்பரசோதி
ஆங்காரக்கூத்தோடேவெற்றி- நின்ற
அம்பிகையுன்பாதநம்பினேன் சரணம்
நீங்காமற்பிரகாசவீட்டில்- நின்று
நெடுநாளிருந்தநிலையெல்லாங் கண்டு
தீங்கில்லாச்செகச் சோதிபாதம்- சென்ம
சாகரமுள்ள நாள்வரையுநான் மறவேன்- தனன. 

(விருத்தம்)
பாடல் எண்:- 358
திருமருவுங் கருவூரி லுதித்துப் பத்துத்
திங்கள்சென்று பாரில்வந்த செய்கை யெல்லாம்
கருவுருவா யான்வளர்ந்து கண்ட காட்சி
காயமெடுத் துழன்றதன்பின் கருத்து மாறி
உருவெடுத்து மனையாட்டி கையிற் சிக்கி
உபாயமதா யான்விளங்கி யுலகத் துள்ளே
இருவருமே யொருமனதாய்க் குருவுஞ் சீஷன்
இருப்பதுபோ லில்லமதி லினிவாழ்ந் தேனே. 

பாடல் எண்:- 359
இனியிருந்து வாழ்ந்தசங்கை யெவருங் காணார்
இகத்தில்ரதி புருடனிருந் ததுபோ லுள்ள
வனிதையுடன் மாய்கைதனில் மயங்கி டாமல்
மனுநீதி தவறாமல் மனையாள் கையில்
தனைநினைவாய்த் தாயுடனே மைந்தன் கூடித்
தானிருக்கும் பாவனைபோல் தனதா யொத்து
நானிந்தப் படியெரியுங் கும்பிக் காக
நயந்துநெய்தல் செய்துமிந்த நாட்டில் தானே. 

பாடல் எண்:- 360
நாட்டிலனை வோரிருக்கு நடத்தை போலும்
நாயகனும் ரதியுமுற வாடும் போலும்
ஊட்டியுணர் விக்குமன்ன சுவைகள் போலு
முடுத்ததுகி லாபரண முவமை போலும்
காட்டியநாள் திதிகள்கர்மங் கருது போலும்
கவிதைபுல வோர்கள்வரப் போகும் போலும்
தேட்டினிலு மாகுதிகள் பூசை போலுந்
தேவதைக்கு முபசாரஞ் செய்தல் தானே. 

பாடல் எண்:- 361
இந்தவித மாயிருந்து வுலகந் தன்னில்
இனியிருந்து வாழ்ந்ததுபோ லெடுத்தேன் ஞானம்
பைந்தமிழ்க் குயர்ந்தஅகத் தீசர் வந்து
பலகலையு மெனக்குரைத்துப் பாலித் தார்காண்
எந்தைகுரு பரனையனு தினமும் போற்றி
யெடுத்தவடி யறிந்தநடு முடியுங் கண்டு
சுந்தரமாங் காயசித்தி யோக சித்தி
சிவரூபசித்தி ஞானசித்தி துதிபெற் றேனே. 

பாடல் எண்:- 362
பெற்றபே ரிப்பரிதா னமைக்கும் வாறு
பிரபல்லியம் விளங்க இந்நூற் பிரசங் கத்தைச்
சித்தருக்குஞ் சிவயோகி ஞானத் தோர்க்குந்
தெரிந்திடயான் தத்துவத்தின் செயல்க ளாய்ந்து
முத்தமிழால் பூருவத்தின் கருவூர் நாட்டில்
மூலமெல்லாம் வெளிதிறந்து முன்னேசொன்னேன்
கற்றறிவோர் ஞானவெட்டி வேதாந் தத்தின் 
கற்பனையைக் கண்டறிவோர் கருத்துள் ளாரே. 

பாடல் எண்:- 363
கருத்தறிந்து கருவறிந்து கமல வீட்டில்
கருணைமதி யமிர்தரச பான சூட்சம்
பொருத்தமதா யருள்விந்து கார சாரம்
பூரணத்தி லிலகுஞ்சுழி புகழை யாய்ந்து
தரித்திரமும் வறுமையகன் றருள்பெற் றாசான்
சமுசயங்கள் விளங்கசங்கை தமிழாற் சொன்னேன்
குருவிருள் புகழ்பெறவு மினிதான் கூறுங்
கோடான கோடிரக சியமுஞ் சொல்வேன். 

பாடல் எண்:- 364
சொன்மொழியை யறிந்துவெகு சூக்ஷங் கண்டு
சுழியின்முனை யறிந்துகற்ப சுகாதீ தத்தில்
வல்லமையாய்ச் செகச்சோதி விளங்கும் வீட்டில் 
மதியும்ரவி யொளியுமணி முடியு நேர்மை
அல்லலற்றுத் திருநடனக் கமல வீட்டில்
ஆயிரத்தெட் டிதழினின்று அமிர்த முண்டு
நன்மைதுன்மை யறிசிவ யோக ஞான
நற்கமல நாதவிந்தின் நடன மாண்டே. 

ஜெனனகால தரிசனை
(வண்ணத்தரு)
தானதனந்தனனா-தன தானதனந்தனனா-தன
தானதானனா-தானதானா- தானதனனா-தானதானா. 

பாடல் எண்:- 365
சோதிப்பெருந்துறையிலுயர் நாதவிந்துதித்து
சுக்கிலமாகியமூலமேலுந்திடு ஞாலமுமிந்திரசாலமதாகவே
வீதிநடுவணையிலுடலாம் வளர்ந்தெழுந்துவிவேகமும்
வைபோகமும்வெகுபாவமுங் கருவூர்தனில்வாழ்கவே
ஆதியென்றம்பரத்தில் வாலாம்பிகைபாதத்தில்கொண்ட 
ஆசையும்பசுபாசமும்விட்டு நேசமதாகவேநின்றுவணங்கியான்
பாதிமதியணிந்தசிவபாதபங்கயத்தில் பதிவீட்டிலேகெதிகாட்டியே
எனைஅழைத்துவளர்த்து அமிர்தமூட்டினள்அம்பிகைபாதமருள் புரிவேனே. 

பாடல் எண்:- 366
வாழ்வுபரிந்தருளுந்திருவாலாம்பிகை பதத்தில்சதுர்
வாசலில்சவுகாசமாய்பிரயாசைமுத்தி பூஞ்சோலைவிட்டேகிநான்
பாழுமுப்பாழ்கடந்து கருவூர்கடந்துநின்று
ஆதிலாவியபரமேவியும் துரைசாமியிருந்ததிசாரமே நம்பினேன்
சூழுந்திரிபுரத்தில் சுகஞானப்ரகாசமதில் மலர்தூபமும்
வன்னிதீபமும்வலமாகவன்பாய் வணங்கிப்பணிந்துயான்
தாழ்வுவாராமலுமே பசியாறவுமமிர்தமுண்டு வெகுசாகரமுஞ் ஞானமார்க்கமுங்
கருநீக்கியபிராமியின் பதம்போற்றியே வாசியறிந்துமலர் பொழிந்தேனே. 

பாடல் எண்:- 367
தாயகமால்கினதாசிவதற்பரை பொற்பதத்தில் பலசாஸ்திரங்களுங்
கோத்திரத்தோடுசூஸ்திரமே செய்யுஞ்சூதுகள்விட்டந்த
ஆயனரண்மனையில்மணியான பூரகத்தில்வாலாம்பிகைப்
பதமாமலர்மதிவிலாசமேவிய வண்ணக்கவியருள்
ஓயாமல்வாசிகொண்டுகண்டமூதிடுந் தாரையிலேயமுதூட்டமு மதிலாட்டமும்
ரவிகூட்டமுங்கமலவீட்டிலுதித்துக் கருவூரில்வந்துயான்
காயசித்திபெறவும் உடல்மாயா மருந்தறிந்தேன் கலைவாசியுமதிபேசியு
மிருநாசிசுவாசமிறந்து மீறாமலுமிருந்துலகத்தோடுணர்ந்து வாழ்ந்தேன். 

பாடல் எண்:- 368
ஊதுந்துருத்தியிலேதாரையோடாம லோங்காரங்கொண்டதிலோக்கிய
முங்குருவாக்கியமும் அருள்பாக்கியந் தந்துபாலித்துவாலாம்பிகை
சூதுகவுடுறையாசிறுவீட்டிலே யழைத்துதிருவாலையை
முடிமேலேறியொருநாலையுங் காட்டியேஞானம்புகழ்ந்தருள்
பாதகமென்செய்திடும்பசுபாசம் விட்டகன்று
பலந்தாரும்நிலையூரும்கலை நாடுங்கருவூரிலேறுங்குடிவளர்
வேதவெளியறியாசாரம்வெண்மதி வெண்சுடர்வெகுநேமியைசிவகாமியை
அபிராமிபதமறவாமலனுதினமசடறவும் யான்வணங்கினேனே.

பாடல் எண்:- 369
முப்புரமுச்சுடரில்சிவமூன்றெழுத்திலே மூலச்சுழியில்
ஞானப்பதியில்மலர்முத்திதருஞ் சிவசத்திப்பிரகாசமே
தற்பரமாகியதோர்சுவாதிஷ்டான ஆலயத்தில்சரஸ்வதியும்
சதுர்முகனும்பலசாதி வகுத்தவர்பாதம் பணிந்துயான்
அப்புவுமானதோமணிபூரகத்திலே தானலைகடலில்மலைவளவில்
ஒருஆலிலைமேல் திருமால்திருலட்சுமி
சிற்பரைமுக்கோணத்திரள் கதலிவட்டமதில்வருஞ்சேர்ந்து வல்வினை
தீர்ந்துமாறிடகாய்ந்து ருத்திரனுருத்திரிதன் பதங்கலங்காமல் வணங்கிக்கருதினேனே- தான. 

பாடல் எண்:- 370
தெண்டிரைவாழ்புவியுஞ் ஜெகமுழுது நாதவிந்துநல்- கனந்
தேடலுங்கவிபாடலுமதிகூடலும் நடமாடலும்போலவே
கண்டுமகிழ்ச்சிபெறக்காட்டும் விசுத்தியிலேகதிசாயமும்
வெகுஞாயமும்வைத்துமாயமாகி மறைந்தசுழுத்தியிலே
மண்டலமூன்றதுபோல் அறுகோணவாசலிலேகலைமாறவும்
பதினாறிலேஇருநாலையிருக்கி நாளையும்விட்டவர்
வெண்டிருமலர்பொழியும் விசுத்திமயேஸ்பரத்தில்வெகு
வேதமுஞ்சகலகீதமுமலர் நாதம்புரியு மயேஸ்பரிதன் பதமயங்காமலனுதினம் வணங்கினேனே- தான. 

பாடல் எண்:- 371
ஆக்கினை வட்டமதில் வளரவ்வளனுவ்வாகி சிறுவரையிலே வட்டத்
திரையிலேதெண்டிரையிலேபொருளொன்றென நின்றவர்
தூக்கியபாதமுடன் சுடர்நோக்கியே நின்றணுகாவாசிதூக்கியே
மதிநோக்கியே வினைபோக்கியே காயத்தில்பூரணத்தினருள்
உக்கிரமாய்நற்கமலமோராயிரத் தெட்டிதழில்ஒளிவாகியே
சுழிதாவியேயுறவாகவேமதி சூடியசெஞ்சடைமீதிலணுகிநான்
பாக்கியவானெனுமே பாரில்பாசவினையகற்றிப் பாரிசாதகத்துடன்
மேலிருந்துடல் வாழும்மகிழ்ந்துஇருந்து நான்வணங்கச்சதாசிவன் மனோன்மணியைவாழ்த்தினேனே- தான. 

பாடல் எண்:- 372
நவ்வுடன் மவ்வாகியோடும் நானிந்த வீதியிலேவரு
ஞாயமுமுயர் கீதமும்வெகு நீதமுமாகவேநின்று பொற்பதத்தில் 
சிவ்வுடனவ்வதிலேவாசி தேரோடும் வீதியிலே மதிதேங்கிடையாமலு
மோங்கிப் பானுவில் தீங்கில்லாத் தெளிந்து ஆக்கினையில்
அவ்வில் வளர்ந்தருளுங் கமலமாயிரத் தெட்டிதழில்
அருகாகநின் றதிலாளவெண்மதிதாள் சிறந்த சதாசிவன்பாதத்தில் வெவ்வையுந் தானடக்கி சத்தம் ஏகாந்த வீதியிலே இருகாலிலே
யுருவாகு மருகாகவும் நின்றவே ஆண்டே வணங்கினேன் ஆதி சதாசிவனை யனுதின மறவேனே- தான. 

(விருத்தம்)
பாடல் எண்:- 373
நாற்சதுர மூலமதில் கணேச பீடம்
நல்லறிவு புத்திதரும் பிரம பீடம்
ஊர்ச்சிதமாம் பூரகத்தில் திருமால் பீடம்
உற்றதொண் ணூற்றாறு கருவி பீடம்
தீச்சுடரில் செங்கதலி தோப்புக் குள்ளே
சிறந்ததொரு ருத்திரன்தன் தேவ பீடம்
மேற்சதுர மானதொரு மஹேச பீடம்
விளங்குசதா சிவனிருதாள் பீடம்போற்றி. 

பாடல் எண்:- 374
விரைந்துநின்ற ஐம்பூதந் தன்னைக் காட்டி
விழாமலுமே யொன்றாகி மேலே நோக்கி
உரைந்துநின்ற மனத்தையடி மூலம் வைத்து
ஓங்கார வீட்டுக்குள் புகுந்து மேவி
விரைந்துபிற விக்கடலைக் கடந்து யானு
மேலான ஆக்கினையின் பதியி லேறி
இறவாம லிந்தவுட லெனக்குச் சொந்த
மிருந்ததனா லம்பிகையை வருந்தி னேனே. 

பாடல் எண்:- 375
விஸ்தார விருமடவாள் கெர்ப்பத் துள்ளே
விளங்கியினி யிப்படியே யிருந்து வாழ்ந்தேன்
ஆஸ்தான நாதவிந்தி ரண்டுங் கூடி
யருவாகி யுருவாகி வளர்ந்த வாறும்
ஆஸ்தான மெனுங்கருவூ ரதனில் நின்று
அழகுதிங்க ளொன்பதுஞ் சென்றா னவாறும்
வாஸ்தான சித்திகரு வூரில் மேவி
வணங்கிதெரி சித்ததலம் வசனித் தேனே. 

பாடல் எண்:- 376
வீறுபெற்ற கருவூரு நாட்டுக் குள்ளே
விளங்கவும்யான் சொந்தமென் றிருந்து வாழ்ந்து
பேறுபெற்ற சதாசிவனைப் போற்றி செய்து
பெருமையுள்ள திங்களொரு பத்து மாச்சு
தூறுபெற்ற கருவூரின் வளப்பமெல்லாஞ்
சொல்லிவிட்டேன் கணக்கதுவா யினிதான் கேளீர்
கூறுபெற்ற இப்புவிக்குள் யான்பி றந்த
குறிப்பையினி யறிவதற்குக் கூறு வேனே. 

பாடல் எண்:- 377
சிறந்தருளு நாதவிந் திரண்டுங் கூடி
செடலமெனத் திரண்டுவந்த செய்தி யெல்லாங் யானும்
கறந்தபால் காய்ச்சியதைத் தோச்சுப் பின்னுங்
கடைந்தெடுத்த வெண்ணையைப்போல் பிரித்து
தெரிந்தமட்டும் வகுத்துரைக்குங் கருவூர்க் குள்ளே
செழித்தநாள் முந்நூறுஞ் சென்றதாகில்
மறந்திருந்து செய்தசிவ பூசை விட்டு
வாழ்புவியி லுதித்தவகை வசனிப் பேனே. 

பாடல் எண்:- 378
ஆணவமு மாய்கையொடு காமியம் விட்டு
அணுகியிந்தப் படியாக நம்பி யானும்
தாணுவமாய் வீற்றிருந்தேன் கருவூர் நாட்டில்
தயங்காமல் திங்களொரு பத்து மாச்சு
வாணுதலாள் கருவுக்குள் வளர்த்தி சொன்னேன்
வயதாச்சு நானிருந்த காணி போச்சு
ஊணுதலா யடுத்திருந்த அறையை விட்டு
உண்மையுடன் வெளியில்வந்த துரைசெய்வேனே. 

பாடல் எண்:- 379
சுழிமூலத் தடிவாசல் கருவைத் தாண்டி
தூங்காமல் தூங்கிவெகு ஞானங் கொண்டு
ஒளிவாச லுட்புகுந்து நின்று மேவி
உற்றவபி ராமியிவ ளுருவங் கொண்டு
கழிநாலுஞ் சுழியேந்தி யொருவ ரோடுங்
கருதாமல் பேசாமல் கலக்க மெய்தார்
பழிபாவ மென்றறியார் தனஞ்செ யன்றான்
பரதவத்தைப் பார்த்துலகில் போவென் றானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 380
முன்னா ளிருவினைகள் மூண்டுவரு மென் றறிவில்
தன்னா லறியாமல் தானவனாய் வீற்றிருந்து
எந்நாளுஞ் சொந்தமென்று எண்ணிமனம் புண்ணாகி
விண்ணே தனஞ்செயனும் வெளிப்போவென்றுரைத்தானே. 

பாடல் எண்:- 381
ஆசைப் பசுபாச மகன்றபதி வீட்டிலேதான்
நேசமுட னின்றினியான் நித்திரைகள் செய்கையிலே
ஓசைச் சிலம்பொலியி லோங்குந் தனஞ்செயன்தான்
வேஷமவன் மாறிவந்து வெளிப்போவென் றுதைத்தானே. 

பாடல் எண்:- 382
ஆடுநதிக் கரையி லம்பரமா மம்பரத்தில்
சூடு மலர்ப்பதத்தில் தூங்கி யிருக்கையிலே
கூடு தனிலிருந்த கூட்டுறவு போதுமென்று
வீடுந் தனஞ்செயனும் வெளிப்போவென் றுரைத்தானே. 

பாடல் எண்:- 383
நம்பிக் கருவூரில் நாடிச் சுழிமுனையில்
அம்பிகையைப் போற்றிசெய்து யானிருப்பதென்றறிந்தேன்
எம்பித் தனஞ்செயனு மென் முகத்தைப் பாராமல்
வெம்பியொரு காலெடுத்து வெளிப்போவென் றுதைத்தானே. 

பாடல் எண்:- 384
வட்டமதி பூரணத்தில் மாறுந் தனஞ்சயன்தான்
விட்டதிங்கள் பத்தாச்சு வெளியேபோ வென்றுரைத்தான்
அஷ்டதிசை யானதிரு ஆறூ கரந்தனிலே
கஷ்டமணு காமலுமே கருக்குழிவிட் டேகுவேனே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 385
தீராப் பிறவிக் கடலையறுத் துச்செழுஞா னங்கொண்டு
கூறான வம்பிகைப்பாற் பதமே விக்கொடி தாகவென்னை
நேரான திங்கள் பத்துஞ் சென்று நிலைத்ததென்று
பாராத் தனஞ்செயனார் பாதந் தூக்கிப் படவுதைத்தே. 

பாடல் எண்:- 386
குடிவாழ்க்கை விட்டுப் பசுபாச மற்றுக் குருவினிட
அடிபோற்றி நின்ற வமிர்தமுண் டேன்வா லாம்பிகையை
முடிபார்த்து நின்றவள் பாதார விந்த முழங்கையிலே
இடிபார்த் தனஞ்சயன் தலைமேலு வைத்து விருத்தினனே. 

பாடல் எண்:- 387
வாளாகி நின்ற விழிமட வார்கள் மயக்கம் விட்டுத்
தேளாகி யோடும் பசியைவிட் டுச்சிவ ஞானத்திலே
மூளாமல் நின்றந்த வம்பிகை பாத முழங்கையிலே
கீழாலே போவென் றுதைத்தான் தனஞ்சயன் கிடுகிடவே. 

பாடல் எண்:- 388
தான்மோகங் கொண்டந்த மூலத்தின் வாசலில் சார்வு விட்டு
வான்மோகங் கொண்டந்த வம்பிகைபாதத்தில் வணங்கையிலும்
நான்மோகங் கொண்டு தனஞ்சயன் பார்த்து நடவுமென்றால்
யான்மோகங் கொண்டே னபிராமி யுந்த னடைக்கலமே. 

பாடல் எண்:- 389
வாவென்ற ழைத்துச் சிவ்வென்ற வீட்டில் வரைதனிலே
வேவென்று ஆயிவிதித்துவைத்தா ளென்தன் வேதனைகேள்
போவென் றுதைத்துத் தனஞ்சயன் வந்து போடுகிறான்
ஆவென்று சக்கரத் தபிராமி யுந்த னடைக்கலமே. 

பாடல் எண்:- 390
தாங்கி மூலக் கருக்குழி யாசை தயவுவிட்டுத்
தேங்கிக் கருணை தித்திக்க வுண்டு செழித்தேயிருந்தே
ஓங்கித்தனஞ்செயன் புவிதனில் போவென் றுரைத்துநின்றான்
ஆங்கிய சக்கரத் தபிராமி யுந்தனடைக்கலமே. 

பாடல் எண்:- 391
ஒழியாத கேணி மூலத்தி னாசை யொழித்துவிட்டு
வெளியேகி யம்பிகை பாதார விந்த மிகத்துதித்தேன்
பழியாக வந்து புவிமீதிற் போவென்று படவுதைத்தான்
அழியாத சக்கரத் தபிராமி யுந்த னடைக்கலமே. 

பாடல் எண்:- 392
கலைநாலைக் கட்டி யபிராமி பாதங் கருத்தில்வைத்து
மலையாமல் நின்று வணங்கிநின்றேன் வல்லதனஞ்செயனும்
துலையால் புவிதனிற் போவென் றுதைத்துத் துரத்துகிறான்
அலையாத சக்கரத் தபிராமி யுந்த னடைக்கலமே. 

பாடல் எண்:- 393
வெம்பா லுயர்ந்த கருவூரு நாட்டை விளம்புகின்றேன்
வம்பாய்த் தனஞ்செயன் வந்துதைத் தானிந்த வாழ்புவியில்
நம்பாதே யென்மதி நான்சொந்த மென்று நம்பிவிட்டேன்
அம்பா ளனுக்கிரகத் தபிராமி யுந்த னடைக்கலமே. 

பாடல் எண்:- 394
ஊருற விட்டுக் கருவூரு நாட்டினுக் குள்ளிருந்து
நேருற வாகி யம்பிகை பாதத்தை நீக்கிவிட்டுப்
பாருற விட்டுத் திங்கள்பத் தாச்சுதிப் பார்தனிலே
ஆருரை விட்டு அவனியில் வந்த தறைகுவனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 395
நாடிய குண்டலியில் நாடுஞ் சுழிமுனையில்
கூடிக் கருவூரில் குடியிருந்து- சூடியதோ
ஆசைவிட்டுப் பாசம்விட்டு அம்பிகையின் பாதம்விட்டுத்
தேசம்விட்டு வந்தேன் செயல். 

பிண்டங் கீழ்நோக்குற்ற முறை
(தரு)
திரும்பிக்கொண்டேனே- அம்பிகையின் திருவடிவிட்டேன். 

பாடல் எண்:- 396
திரும்பிக்கொண்டேன் தில்லையெல்லையும்விட்டுச்
சிவகாமிபாதச்சிலம்பொலி விட்டு
வருந்தித்துதித்தகருத்தையும் விட்டு
வாலாம்பிகைபதத்தின் வாழ்க்கையைவிட்டுநான்
ஆருமறியா வும்பரம்விட்டு
அகாரஉகாரத்தகண்டம் விட்டாக்கினை
மேருவின் பூசைவிதியையும் விட்டு
விளங்கியம்புவியில் மேவித்துலங்கிநான்- திரும். 

பாடல் எண்:- 397
கட்டுங்கலைபதினாறையும் விட்டுக்
கருத்தாயிருந்த சனத்தையும் விட்டுமே
வட்டமதி பூரணத்தையும்விட்டு
மகிழ்ந்திதழாயிரத்தெட்டிதழ் விட்டுநான்
ஒட்டுங்கலைபன்னிரண்டையும்விட்
டுடல்ஒன்பதுவாசலுடன் கட்டறுத்துமே
நட்டுவனாடுங்கனகசபை விட்டலகை
யென்றகருநாட்டை விட்டேகிநான்- திரும். 

பாடல் எண்:- 398
வன்னியின்மூலமுமூலத்தைவிட்டு
மருவியான்வாழ்ந்திடுமாளிகை விட்டுமே
உன்னிதமாஞ்சிறு வீட்டையும்விட்டு
உகந்தகருவியுறமுறை விட்டுயான்
சென்னிவளர்திருவீட்டையும் விட்டுத்
தெளிந்தபஞ்சாக்ஷரசேர்வை விட்டேகிநான்
பன்னுமலர்க்கமலாலயம் விட்டுப்
பராபரன்பாதம்பணிந்து வீட்டையணைத்- திரும். 

பாடல் எண்:- 399
தூக்கியபாதநடனமும் விட்டுச்
சுழிமுனைச்சக்கரசூக்ஷம் விட்டாலயம்
நோக்கித்திருமதிலோரத்தை விட்டு
நொடிக்குளிப்பு புவியினுண்மையறியவும்
நீக்கிநின்றாடுநிலைதனைவிட்டு
நிராமயபூரணநேசம் விட்டங்ஙனனே
சீக்கிரமாகக் கருவூரைவிட்டுத்
திரும்பிக்கொண்டேகின செய்தியீதாண்டையே- திரும். 

(விருத்தம்)
பாடல் எண்:- 400
துய்யமதி யமிர்தசுழி முனையும் விட்டேன்
தூங்காமல் தூங்குகின்ற போகம் விட்டேன்
மெய்நிறைந்து நடனமிடுங் கருவூர் விட்டேன்
விசிதரத்ன வம்பிகையின் வீடும் விட்டேன்
ஐயமற யான்வளர்ந்த குகையும் விட்டேன்
ஆசைவிட்டேன் பாசம்விட்டே னாரூர் விட்டேன்
பையவினை யகற்றுபணா முடியும் விட்டேன்
பரதேசி யாயிருந்த பதிவிட்டேனே

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900