திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1901- 1913 முற்று பெற்றது

பாடல் எண்:- 1901
மேல்கீழும் வாசி விரும்ப வொருவழியாய்க்
கால்வாங்கிப் பாயாது காலையதும்- மேல்கீழும்
சுவாசமது மோடாது சொக்கா தசவெனவும்
உவாசமது வூதுமோ டாதே.

பாடல் எண்:- 1902
அன்னமய மதித மடிக்கடிதா னாகாது
வின்னம் பரவிபழ மேலுஞ்- சொன்னேன்காண்
பசும்பாலுஞ் செய்கையொன்று பாலாகா மற்றொன்று
வீசாவின் பாலொன்றே மேல். 

பாடல் எண்:- 1903
வருஷமூ வாண்டில் வாசிகொண்டு தாரை
உருவேற்றங் கண்டங்கி யுபாயமதாய்- வருஷமாம்
கீழிருந்து மேலுங் கீழ்மேலும் பாயும்விதம்
பாய்வீட்டைச் சுத்திசெய்து பார். 

பாடல் எண்:- 1904
வாசி யடங்கவுமுன் மலசுத்தி சலசுத்தி
பேசினது ஞானவெட்டிப் பேசும்- வாசியது
ஒன்பது வாரகுழி ஓடாது சுவாசமது
மென்குருக டாட்சமெனு மேல். 

பாடல் எண்:- 1905
ஆதியொரு வாண்டி லழுக்குகளெல் லாமுறியும்
பேதியிலை யுண்டமுரி பெருமைகாண் ஆதியிலும்
முழுவயிரமுன் னாண்டில் முக்காலாம் பின்னாண்டில்
பழுதிலைமூ வாண்டுவரை பார். 

பாடல் எண்:- 1906
அரைவயிறு சாதம் புக்கடியு மாகாது
துரையதுவு மொருவேளைச் சொன்னோம்- அரைவயிறு
அதினாலு மாவதென்ன அமுரிபிடி யன்னம்
மெதுவாக அன்னமுண்ணு மேல். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1907
முன்மலமெ லாமொழிய லவணம் போச்சு
உனதுசட மாதிதமுந் தங்க மாச்சு
தன்மயமா யெடுத்தவிதஞ் சரிதா னாச்சு
தந்தையில்லாச் சன்மமெப் படியுண் டாச்சு
உன்மயத்தா லுனக்குதந்தை யுருதா னாச்சு
உப்புஅந்தப் படிவிதங்காண் யோகி யாச்சு
மன்மதங்கா ணீசனுட மவுன மாச்சு
மயமான நித்திரையை மாற்றி னாரே. 

பாடல் எண்:- 1908
மாற்றினார் மும்மலத்தை வாரி சூழ
மலப்புளியுஞ் சலமதனால் மதியி னாலும்
ஏற்றினார் சரமாரி மாலின் பாணம்
இந்திரிய மெனுமமுரி ராம பாணம்
தூற்றினார் போலுமிது அறிவே னாகில்
சொற்பேதங் குருபேதஞ் சொல்வா ரில்லை
நீற்றினா ருப்பதுவும் நீறிப் போச்சு
நீற்றினத்தை வடிரவியில் நீர்போ மாண்டே. 

பாடல் எண்:- 1909
இந்தவிதந் தொண்ணூற்றாறு கருவிற் சுட்டு
எண்சாணு தேகமதி லிருந்த சுவாசம்
வந்தஎதிர் மனிதர்களை விழியால் பார்த்து
வகையதுபோ லுட்கருத்து மணிதீ பங்காண்
உந்தன்வழி யொன்பதுவு மொளித்துப் போச்சு
ஒருவழிகாண் போய்வரவும் வாசி யாச்சு
வெந்தணலால் கட்டியதோர் வாசியோகம்
மேலான யோகம்கடந் தோர்க ளாண்டே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1910
இருபத்தோ ராயிரத்து அறுநூறு
சுவாசமது மெல்லா மொன்றாய்க்
கருதிரண்டு வுருவதுபோல் பத்தாண்டு
கடந்துதச தீட்சைக் கப்பால்
அருவுருவாய் நின்றசவு சரிப்படுங்காண்
குறைந்ததெல்லா மாண்டே கேளீர்
குருவருளால் யோகயென்ற வழிபெற்ற
துறைகளெல் லாங்கூறி னோமே. 

பாடல் எண்:- 1911
அஞ்ஞானம் போக்கிசிவ மெய்ஞ்ஞானத்
துறையறி வனேகங் காலம்
விஞ்ஞான வந்துசொல்லுந் தயிலமுறை
யறிபவராய்த் தேவ ஞானி
சன்னாசி மகத்துகள்தான் வசியமெட்
சணிசெய்வார் சாஸ்திரஞ் சொல்வார்
எஞ்ஞான முழுதுமறிந் திருப்பவர்க
ளவரிடத்தெட் சணியும் வாழ்வாள். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1912
வாதவயித் தியஜோஸ்ய மாந்தி ரீகம்
மறுபிறவி ஞானசிவ வாழ்க்கை தன்னில்
ஜாதியிலும் வம்மிசவான் கல்வித் தானால்
தசதீட்சை சுயம்புவெகு வர்ணங் காணும்
சோதியிது வயதுநூறு பிறவி யானால்
செகமதிலுஞ் சிவயோகி செல்வ வானாம்
சோதிமணி தீபவொளிப் பிரகா சத்தில்
சுரூபமணி நிரூபமதி சுயம்பு முத்தர். 

பாடல் எண்:- 1913
முத்துநவ ரத்தினம்போல் முடிந்த சூட்சம்
முன்னோர்கள் பதினெண்பேர் கமலம் போற்றி
சத்திசிவ தீட்சைபத்து மிரண்டும் வாழி
சனகாதி மாமுனி சித்தர் வாழி
பத்துநூ றாயிரத்து மேலா மிந்நூற்
பரிபூரண சொச்சமெனு மிருபத் தெட்டும்
வித்தினால் விளைவான சகஸ்திர கனநூல்
வேதாந்த ஞானவெட்டி விளக்க முற்றே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900