திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1301- 1400

பாடல் எண்:- 1301
மனம்பிரிந்திருந்ததின்பேராரோ- அது
தெரிந்தபேரிதைச்சொல்வாரோ- தன
மிருந்தபொக்கிஷமதுதானே- வினை
யொழிந்துபோமதுகுருதானே- தனந். 

பாடல் எண்:- 1302
இடைகலைக்குமறவாதுருவாமோ- பின்
கலைக்குஒருவழிகுறைவாமோ- கட
லலைக்குநதிபாரெதிராமோ- அலை
கடலிதுக்கொருநிகராமோ- தனந். 

பாடல் எண்:- 1303
உந்திச்சுழியினில்நீமனமே- வாசி
உழன்றுமேலங்குபடிமாட்டி- மூல
சந்திரபுஷ்கரணிநதிமூழ்கி- திவ்ய
சமுத்திரசலத்திலுவர்நீக்கே- தனந். 

பாடல் எண்:- 1304
திருவனந்தகுருபரசிவஞானம்- ஜெக
மனைத்துஞ்செயல்பெறுமெய்ஞ்ஞானம்- குரு
வரத்தினருள்விட்டகுறைவிதிபார்- மதி
பரத்தில்கெதிபெறுநானாண்டே- தனந். 

பாடல் எண்:- 1305
நந்திக்குருபரநாதனருள்- திரு
நாமத்தைநயந்துவுணர்ந்துருகி- இன
மிந்தப்படிரவிமதிநாட்டமிகுந்- திரு
வினையொழித்தேனாண்டே- தனந். 

பாடல் எண்:- 1306
முக்கோணச்சுழிமுனைநடுவே- மூலா
தாரக்கணபதியருள்தனினும்- நாம்
எக்காலந்தொழுதேபணிவோம்- என்
றேங்கிவிளையாதேமனமே- தனந். 

பாடல் எண்:- 1307
பிரமசதுர்முகனருள்திருமலரடியில்- மதி
தவமொருநிலைபெறஓராண்டு- கர்மச்
சடமொருவினையொருஒழியதவம்- அருள்
தருங்கெதிபரகுருநீயாண்டே- தனந். 

பாடல் எண்:- 1308
கண்டமகத்துகள்விண்டதில்லை- கற்பங்
கருத்தையறிந்தவராருமில்லை- செகம்
எண்டிசையனைத்துமேயாராய்ந்தா- ரதி
ரெவரெவரென்றறியாய்மனமே- தனந். 

பாடல் எண்:- 1309
குயில்போலிளமொழிமடமாது- இரு
கொங்கையெனும்விழிபார்வையினால்- மய
லகிலமுழுதும்யோனிக்கேணி- தனில்
விழுந்தரவங்கடித்துமாண்டிடுமனமே- தனந். 

பாடல் எண்:- 1310
இருவிழிசிமிட்டுவள்ஸ்தனபாரம்- கலை
யெடுத்துமுகமுருவதுகாட்ட- வருந்திப்
பின்துடர்ந்தவள்மாமயலான- வாடைப்
பொடியதும்போட்டியல்பாய்மனமே- தனந். 

பாடல் எண்:- 1311
இருதுடையரவம்பாம்பதுகடிக்க- மருந்
தெவருமறியாரிவ்வுலகுதனில்- அருள்
விரகமதுகாமக்குரோதமெனும்- விஷம்
விக்கிரமெனுமறிந்திடுமனமே- தனந். 

பாடல் எண்:- 1312
நிலவுபொழியுமதிசந்திரகலை- வரு
மிரவுபகலதுமாறிடவுங்- கனல்
மனமுஞ்சலமதுநீரதுபாய்த- லலை
கடறிமிதுக்குநிகரராமனமே- தனந்.  

பாடல் எண்:- 1313
சுழியின்முனையிலகும்நடுவணைகாண்- சொன்ன
துரியமதிநிலவுபொழியவரும்
விழியினொளியுமறைமதிசலநீர்- விட்ட
விதியென்னவிந்துநீராமனமே- தனந். 

பாடல் எண்:- 1314
பஞ்சபூதாதியஞ்சும்பரவெளிதான்- அப்பு
பருதிமதியிரண்டும்பழகினதால்- நெஞ்சுப்
புண்ணாகிடுங்காண்கடுங்காரம்- நின்ற
நிர்மலம்போக்கிடுங்காண்மனமே- தனந். 

பாடல் எண்:- 1315
மும்மலம்போக்கிடுமுப்பாழ்மூலசுத்தி- முதல்
முத்திசித்தியுமெய்தல்முனைகாணல்- அருள்
ஞானசித்தியெய்தல்காயசித்தி- ரவி
நடனமென்னாலருள்நாமுரைப்போம்- தனந். 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1316
அண்டமெல்லாஞ் சூழ்ந்துநின்ற ஆதித்தனென் றேயறிய
மண்டலமெல் லாமொளிவாய் வளர்பிறையின் சூக்ஷமதைக்
கண்டேன் மதிமலர்பார் கனகவம் பலத்தினருள்
உண்டேன்வெண் சாரையதை யோகசித்தி யாலறிந்தே. 

பாடல் எண்:- 1317
சித்திதரு ஞானவெட்டி செங்கந்தி யாற்றருகே
சத்தியமாம்வே தாந்தவொளி தாய்பலத்தி லேதுதித்து
முத்தியாமுப் பாழ்கடந்து மூலசுழி தன்னருகில்
மத்தியத்தில் நின்றுமதி வாமப்பா லுண்டேனே. 

பாடல் எண்:- 1318
சொல்லப்பா காவதனில் சுகபோக வேளை தனில்
வெல்லப்போ காதுகண்டாய் வேதாந்த கற்பமதை
அல்லல்போ வென்றுலகி லலைவதனா லாவதுண்டோ
வல்லமையால்கொங்கணர்க்குவாய்த்ததுகாணிப்பொருளே. 

பாடல் எண்:- 1319
எத்திசையு மேபுகழு மிந்திரன்த னக்குரைத்த
புத்திநிலை யாமலுமே புதுமைகேட் டிருந்தகமை
சத்திதனை விட்டுலகில் தடுமாறி யேதவிர்த்த
வெற்றிபெற்றகொங்கணர்க்குவிரித்துரைத்தார் வள்ளுவரே. 

பாடல் எண்:- 1320
தாயார் சரஸ்வதியுந் தந்தையெனும் பிர்மாவாம்
மாயாப் பிறவியினால் வந்தார் புவியதனில்
ஓயாக் கவலைபெற்று வுடன் றுலகில் வாழாமல் 
நாயாம் பிறவிதன்னைக் கற்பத்தால் கண்டேனே. 

பாடல் எண்:- 1321
கொள்வதுமெப் படியெனது குருவருளே யென்றுநம்பி
உள்ளமதி கலங்கி யுலகி லுலவுவதேன்
கள்ளமல்ல இந்நூல் கசடர்தனக் கெய்துவதோ
வள்ளுவனார் தாமுரைத்த வசனமதி தப்பாதே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1322
கொள்வதென்ன மூலமென்ற காரந் தள்ளிக்
கொண்டிடவுந் தினந்தோறு மாண்டஞ் சாச்சு
தள்ளுவது மெண்ணய்சுன்னங் கடுகோ டுள்ளி
சாதித்து வருந்தையிலும் பேதி காணும்
அள்ளுவது மூலமென்ற புளியை மாற்றி
அந்தியிலும் புளியருந்தி யருளை நோக்கிக்
கள்ளமல்ல வீரமுண்டா லஞ்சாண் டாகில்
கடினமெத்த ஏழுதிங்கள் கருத்த தாமே. 

பாடல் எண்:- 1323
கன்னியெனு மம்பிகைப்பெண் வடிவென் தாயார்
கல்வியிலு முயற்சிமெத்த காம ரூபி
உன்னிதமாய்ப் பூருவத்தில் மூலத் தாய்தான்
ஓங்காரத் துள்ளொளியா யுலவு மாத்தாள்
வன்னிஎனும் வலையறுத்து மேரு தாண்டி
வாசியிலுஞ் சிவயமென வைத்து வூதிச்
சென்னியெனுங் கருணைகொண்ட மூலத் தாயைத்
தேடுதற்கு மிகவரிது செப்பு வேனே. 

பாடல் எண்:- 1324
செப்பிடினுந் தாயெனக்கும் பிள்ளை யானாள் 
தேவியம் பிகையவட்குச் சீஷ னானேன்
ஒப்பிதமாய்க் குருவானா ளடியே னானோ
ஓகோகோ வேதப்பெண் ணுருவு மானாள் 
இப்பிறப்பிற் பெண்ணாகி நீசப் பெண்ணாய்
எண்டிசையும் புகழ்பெரிய தெந்தன் வாக்கை
அப்புவியின் பூவறிந்து முப்பூ வொன்றாகி
லகிலபுவ னங்களுக்கு மிகமேன் மேலே. 

பாடல் எண்:- 1325
இன்னமினிச் சொல்வதெந்தன் வாழ்க்கை யாலும்
எச்சாதிப் பெண் ணாகி யிருந்தா லுந்தான்
அன்னையெனுந் தாய்தந்தை பிள்ளை சுற்றம்
அவராரோ நானாரோ அகலத் தள்ளி
வன்னியதை நம்புதலாய் மனதாய் நின்றேன்
வாகான பூரணத்தில் மருவி னேன்யான்
சென்னிதனில் மாதர்களைக் கண்ணிற் கண்டால்
தேசம்விட்டு மறுதேசஞ் சிறந்திட் டேனே. 

பாடல் எண்:- 1326
உந்தியெனு மோங்கார மூல கற்பம்
உறுதிபெற்று மண்டலந்தான் கடந்த பின்பு
வந்துதிக்கு ஞானகற்ப மோராண் டுண்ண
வரிசையுடன் கொள்ளவுமே வகைதான் வேணும்
உந்தியெனு ஞானகற்ப மாண்டே யொன்று
ஓரெட்டாம் பன்னிரண்டில் முடிந்து போச்சு
அந்தலபி தள்ளுண்டு அசடும் வாரா
தகமிளித லெமலபியு மழைத்த தாண்டே. 

பாடல் எண்:- 1327
ஏமனுக்கும் நமனவளா யிருந்தா ளாத்தாள்
ஈஸ்பரர்க்குத் தமக்கதிக மிவள்தா னாச்சு
காமனைக்கண் ணாலெரித்த கதைபோ லாச்சு
கருவியெல்லா மாண்டதுவுங் கசடு போச்சு
பூவதுபோ லிருந்தஉப்பு மயம்பொன் னாச்சு
பொன்மேரு கிரிசிவட்கு மணிவ தாச்சு
வீமனுக்கு விமலியும்போல் தேக மாச்சு
வெகுசுறுக்கு மிக நன்று விந்து பாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1328
ஐங்காய மாச்சுதுகா ணைந்தாண்டு கற்பமுண்ணத்
தங்கநிற மாற்றதிகச் சாட்சியறிந் தேனுபமாய்
வெங்காய மாமதித வெள்ளைக்கல் லுப்பதனால்
பங்கமில் லாமலுண்டால் பத்தியத்திற் பழுதிலையே. 

பாடல் எண்:- 1329
பத்தியத்தி லேபழுது பாகமது முன் தவிர்ந்தால்
அத்தியத்தி லுங்கனல்கொண் டசீரணத்தால் பேதியெய்தும்
சுத்தமதிப் பாலுடனுஞ் சொர்னமல ருண்டதனால்
சித்தியெய்து லேகியந்தான் செப்புகிறே னானறிந்தே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1330
அஞ்சாண் டில்கற்ப மருந்தப் புளியு மதுபடவும்
நஞ்சாகும் பேதி யடிக்கடிக் கேவ நமனதுவாய்க்
கஞ்சா வதும்பட மலங்கட்டுக் கிராணி கண்களும்போம்
இஞ்சொற் றிருவள் ளுவநாய னுமுண்ட இயல்பதுவே. 

பாடல் எண்:- 1331
மாமாந்த கற்பம் பனிரெண்டு மாண்டு வந்திடிலும்
நான்மாத் திரங்கறி களறுப் பிரமாணம் நடந்தறியேன்
தேன்மொழி வேல்விழி மாதர்சம் போகஞ் செய்திடிலும்
தான்போய் மரணஞ் சுடுகாடு வேகுஞ் சமமதுவே. 

கற்பலேகியம்
(தரு)
லேகியங்கொண்டேன்காண்- காயகற்ப
லேகியங்கொண்டேன்காண். 
பாடல் எண்:- 1332
லேகியங்கொள்வனினியருளின்பம்- அளாவிய
அண்டபிண்டமப்புவின்காரமும்
தாவியிடித்துச்சரக்காதிதங்களும்
பாகமதாகவும்பாண்டம்விட்டேபதம்- லேகி. 

பாடல் எண்:- 1333
ஆவியதுக்குள கலாமலும்படி
தாவிநாதவிந்துதாக்கியேசூரணம்
மேவியதற்பரவேதசாஸ்திரத்தினால்
பூவதுலேகியம்பொன்னிறமாகவும்- லேகி. 

பாடல் எண்:- 1334
பெற்றிடுமெய்ஞ்ஞானங்கற்றறிந்தோதிடும்
சுத்தவானாகியுஞ்சித்தர் பதம்பெற
வித்ததிகங்களாலுத்தமர்சொல்மொழி
சத்தியமாகவும்நித்தம்பூசிக்கவும்- லேகி. 

பாடல் எண்:- 1335
மூலத்திலேறிமுனைபிரளாதலும்
காலத்திலுங்கற்பகாயம்பெலப்பட
ஞாலத்திலும்வாசிநாடிச்சுழிமுனை
பாலத்தினாலறிவாகித்தினந்தினம்- லேகி. 

பாடல் எண்:- 1336
அப்புமுப்புமறிந்துப்பையகன்றுமே
கைப்பொருள்விந்துக்கருத்தழியாமலும்
மெய்ப்பொருளாவிவிலங்காமலும்படி
தற்பரைசோதியானந்தமீதாகவும்- லேகி. 

பாடல் எண்:- 1337
சத்தியெனுநாதமூலப்புளிதனில்
சாரநீர்கொண்டுடன்வீரமதாகவும்
நித்தமனுசரிவாசிகொண்டுதாரை
சித்தியோகராஜதேகம்வலுத்திடும்- லேகி. 

பாடல் எண்:- 1338
துரிசியிதென்றுஜெகமறியாமலும்
உரிசைகொண்டுமனுஓடித்திரிந்துடன்
வரிசையென்றுங்கடைதுரிசியிதென்றுமே
வாதஞ்செய்தேயூறல்மாற்றிடுவாமலும்- லேகி. 

பாடல் எண்:- 1339
முத்திகொடுக்குஞ்சிவசத்திதன்பதம்
மூலாதாரத்தின்கருவியறுத்திடும்
வெற்றியதாகச்சமைத்துஉட்கொள்ளவும்
மேலானசேகரமேறிப்பறக்கவும்- லேகி. 

பாடல் எண்:- 1340
நாசிவழியிற்சுவாசத்தைவிட்டேன்
ஊசிகொண்டதாரையோகஞ்செய்யாமலும்
பூசிதமாகவும்ரேசித்திடாமலும்
வாசியறிந்துடல்மாளுவதில்லையே- லேகி. 

பாடல் எண்:- 1341
சயிலமிரதமுதகமுங்கூடியுந்
தற்பரானந்தசிவசத்திகிருபையால்
அகிலம்புகழ்காயமைங்காயமாமிது
தயிலமதாகியும்தானதுலேகியம்- லேகி. 

பாடல் எண்:- 1342
பிருதிவியுமப்புதேயுடன்வாய்வதுவும்
பேர்பெரியசத்தமைந்துமங்காயமாய்த்
பூரிதத்துடன்பஞ்சபூதமொன்றாகியுஞ்
சூக்ஷமகாரணலேகியமாச்சுது- லேகி. 

பாடல் எண்:- 1343
தன்னைத்தானறிந்தாக்கைபிலத்தது
சாம்பசதாசிவசங்கரனாச்சுது
அன்னையென்னைப்பெற்றஅம்பியால்செட
அன்னையும்விந்துடல்முத்தியுண்டாச்சுதே- லேகி. 

பாடல் எண்:- 1344
மூலப்புளியில்மூலாக்கினைதோன்றியும்
மூலாதாரத்தினிலப்புவுந்தோன்றியே
ஆலவிடமதிலக்கினிதோன்றியும்
அக்கினியாலசவாகிடும்வாயுவே- லேகி. 

பாடல் எண்:- 1345
தூலமெனும்வாய்வுசத்தமுண்டாகியுந்
தோன்றியஞ்சுபஞ்சபூதமொன்றாகியும்
மூலபஞ்சாட்சரநாதனிருப்பிடம்
நந்திகொலுவிலிருப்பதமுரியே- லேகி. 

பாடல் எண்:- 1346
அமுரிபஞ்சாட்சரமஞ்செழுத்தாச்சுது
அண்டமெனுஞ்சிவலிங்கமதாச்சுது
குமிறிடும்சாகரம்வெண்மதியாச்சுது
கோசபீசமெனுங்குருலிங்கமாச்சுதே- லேகி. 

பாடல் எண்:- 1347
கோசந்தனிலிருகூறதுமாச்சுது
கூறியபீசமடிமூலமாச்சுது
வாசிநின்றேகுகைபுளிசுன்னமாச்சுது
வாலகுண்டலியின்பீடமதாச்சுதே- லேகி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1348
மதிவருந்து நடனமிடும் பிராணா யத்தில்
மதுரமிருந் திலகுமின்ப மவுன பீடம்
கெதிபெருங் காண்மகத்து களின்மோக்ஷ பீடங்
கெவுன ரசகுளிகை யிருந்தாடு பீடம்
துதிபெறவு மெய்ஞ்ஞான சுகாதீ தங்காண்
சோதிசுடர் மணிவிளக்கில் துண்டா நின்ற
விதியைவெல்லும் விசிதரத்ன பதியை வீசும்
மிகுத்தபஞ் சரவனத்தை விளம்பி னோமே. 

வாதமுறை
(தரு)
வாதவிதிபாடுகிறேன்- ஆண்டேகேளீர்-
வாதவிதிபாடுகிறேன். 
பாடல் எண்:- 1349
வாதவிதிபாடுகிறேனாதமதிலுமிருந்து
சோதிமணிபூரகத்தைச்சூட்டியுஞ்சூக்ஷமதுவாய்ப்
பச்சைத்துரிசியதைச்சத்திநாதநீரிலூட்டி
அச்சமறவும்ரவியில்வைத்துப்பார்நாலுசாமத்தில்- வாத. 

பாடல் எண்:- 1350
ஊரலறுமேகளிம்புவேறில்லைசுன்னமதாகுஞ்
சீருள்ளசூதத்தைக்கட்டுமேருவும்பொன்மயமாகும்
அம்பிகையெனக்குரைத்தகெம்பீரசுன்னமாகும்
நம்பியுங்கற்பமதனைவம்புசெய்தாலுமுண்டால்- வாத. 

பாடல் எண்:- 1351
ஆண்டுதசமானதுபின்னறுபத்துநால்வரையு
மாண்டுவிடமருந்துவா ச்சுதறிவாய்மனமே
தசவாண்டதின்பின்கற்பஞ்சடசித்தியானதின்பின்
பசுமையறவேளுமைபார்க்கப்பளிங்கதுவாண்டே- வாத. 

பாடல் எண்:- 1352
கற்பசாதனையில்லாமல்கனகஞ்செய்வார்களில்லை
அற்பமூலிகைதழையாலாவதுமுண்டோமனமே
மூலப்புளியைவிடமுத்தியுமுனக்கேதுகாண்
ஆலகாலவிஷமேயமுரியாண்டொன்றுண்டால்- வாத. 

பாடல் எண்:- 1353
அமுரியாண்டதுமுண்ணஅம்புவால்காலனுமேது
விமலசர்வாணியின்விளக்கமதாமனமே
வாதவித்தையாவதென்னசூதகவித்தைகாணமுரி
நாதமும்விந்துவுங்கூடிநவலோகம்பொன்னதாச்சு- வாத. 

பாடல் எண்:- 1354
இப்படியாகியசெய்தியாவரறியாதவிதம்
முப்பூவும்பூரணங்கூடிமுடித்தல்லோசெலமாச்சு- வாத. 

பாடல் எண்:- 1355
கருங்கடல்நீரையுண்டுகைப்பதுமாறினவிதம்
ஆருமறியார்களோபின்னதுசுத்தநீர்மகிமை
வாய்கொண்டுவுண்டசலத்தைமாறிடக்காயந்
தேயசுமதிதசித்திதேகமும்வலுத்ததாண்டே- வாத. 

பாடல் எண்:- 1356
காயாதிலேகியமிதுகருதக்காலனுமேது
மாயாதுவாசியொன்றானால்மரணமடையாராகில்
வாயுவுவீரஞ்சுமொன்றாய்மாறிமாறித்தாரையில்
ஓயாமலூதியூதிடும்யோகாதியோகமிதாச்சே- வாத. 

பாடல் எண்:- 1357
எழுபத்தீராயிரநாடிநரம்பிலிருந்தசவு
பழுதுவாராதுகாணும்பாருஞ்சாதனையாண்டே- வாத. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1358
மூட்டுவாய் மூலகற்ப முக்கியமதா யாண்டுபத்து
ஆட்டுவாய் பெட்டிதனி லடைத்தரவ மாவதுபோல்
நாட்டுவாய் கும்பமுனி நாதனரு ளாலுங்கற்பம்
பூட்டினேன் குருவருளின் பொக்கிஷத்தை விண்டேனே. 

பாடல் எண்:- 1359
ஞானவெட்டி யாயுலகில் நானுதித்துப் பாடுபட்ட
பானரச கற்பமதைப் பாடிவிட்டேன் கைமுறையாய்
வானம்புவி யுள்ளவரை வாழ்ந்துலகி லும்புகழ்
தானவனாய் முத்திபெற்ற சங்கையறி யாய்மனமே. 

பாடல் எண்:- 1360
விட்டகுறை யாலுதித்த விந்தினிட செய்கையினால்
தொட்டதொரு கற்பமெல்லாஞ் சூட்சசித்தி யாச்சுதுகாண்
பட்டசள மெத்தவிந்தப் பாருலகி லேயறியார்
வட்டமுலை யாளுரைத்த வசனமது தப்பாதே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1361
அஞ்சாண்டு கற்ப மானபின் பத்திய மாறாண்டுதனில்
வெஞ்சனங் கூட்டும் வகைவிதஞ் சொல்ல மேவிடிலும்
ரஞ்சித நாடு கருவூர் விளங்க நாமறிந்து
வஞ்சமில் லாமல் வெஞ்சனங் கூட்டு மகிழ்ந்ததையே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1362
வெற்றிதரும் பத்தியந்தா னாவின் பாலும்
வெள்ளாட்டின் பாலுமது வொன்று வேளை
புத்திதரும் பச்சரிசி பயரும் பாசி
பொசிப்பதற்குப் போசனமாம் விகழ்தான் மெத்த
சித்திபெறும் புளியாரை கொடுக்கப் போடு
சிறுகீரை சீரகமுங் கரிய வேம்பு
முத்திதரு மிளகுபசு நெய்தா னாகும்
முக்கியமது பின்பதுகேள் முறைதா னாண்டே. 

பாடல் எண்:- 1363
ஆண்டையினி கேளும்புளி சுன்னத் தாலும்
அதிதவித்தை வாதமெல்லா மடங்க லாச்சு
தாண்டவமாய் நடனமிடும் கணேசன் சத்தி
தாயான வல்லமையுந் தானே தோற்றும்
மாண்டிடும்பே ரில்லையிந்த வைய மீதில்
மகத்தான கற்பமுண்டால் மாய்கை போச்சு
பூண்டிந்த வுலகமெல்லா ஞானி யானால்
புவிஎல்லாம் தேவர்களாய்ப் பிறப்பா ராண்டே. 

பாடல் எண்:- 1364
அறிந்திடுங்காண் புளியமுரி மாலை யுண்ண
அப்புவும் ரவியிலுண்ண வயதைந் தாச்சு
புரிந்துகொள்ளும் புளிசுன்ன மமுரி கூட்டிப்
பேரான வாலையிலுந் தயிலம் வாங்கித்
தெளிந்துபுளி சுன்னமதை யமுரிக் கேற்க
செயநீராய்ச் சரக்குகளில் சுருக்கு மேற்றக்
குறித்தரசம் ரவியில்சுருக் கிடவுஞ் சாகுங்
கூகூகூ வாதமிதிற் கொள்ளை தானே. 

ஞானவெற்றி
(தரு)
வெற்றிக்கொடிகட்டினேனாண்டே- சூக்‌ஷாதிசூக்ஷ
வெற்றிக்கொடிகட்டினேனாண்டே. 
பாடல் எண்:- 1365
எத்திசைதனிலறியசத்திநாதவிந்துங்கூடிப்
புத்திமயங்காமல்நின்றுசித்தியுமறிந்தேனாண்டே
அண்டபிண்டகளுமேவுமண்டலமெல்லாம்புகழுங்
குண்டலிவாசியைக்கொண்டு கண்டிடசாதனைசெய்து- வெற்றி. 

பாடல் எண்:- 1366
ஆதியந்தமாய்நிறைந்தஅம்பரவெளியில்நின்று
சோதியாஞ்சுன்னம்புளியுஞ்சுக்கிலசுரோணிதத்தால்
நீதிநினைவாலறிந்துநிச்சயமனந்தெளிந்து
சாதனைஎன்னுக்குள் நாடுந்தனஞ்செயனைச்செயித்து- வெற்றி. 

பாடல் எண்:- 1367
காலனென்றகாமனைக்கட்டறுத்துக்கடந்துமுப்பாழ்
ஞாலன்றவுட்கருவிநாடியேயடக்கியபின்
மாதுமயலாலமைத்தவல்வினைக்கோராஸ்திரங்கொண்
டூதுதாரைவாசியினாலோட்டியேவெட்டியெரித்து- வெற்றி. 

பாடல் எண்:- 1368
பாலுடையஸ்தன்னியமயல்பாவையர்களைத்துலைத்து
சீலமுடனேயெனதுசீஷர்மனம்மெய்க்கவுமே
உற்றார்சுற்றத்தார்களுமுலகுதனிலுள்ளோரும்
பெற்றாராசையைவிடப்பெண்டீராசையைவிட்டு-வெற்றி. 

பாடல் எண்:- 1369
மொத்தஎன்மேல்மனதைமெய்யிலுமிகநொந்து
குற்றமறமாதுதன்னாசைகுடோரம்விட்டுனதுபதம்
உற்பனமத்தியானமதுகற்பனசாரத்தையுண்டு
விற்பலமூலப்புளியைவிதமாயுண்டுதேறினேன்- வெற்றி. 

பாடல் எண்:- 1370
தேகசித்தியுமாச்சுதீவினைகளும்போச்சு
ஆகமப்படியாச்சுஆயிரத்தைந்நூறுமாய்ந்தால்
இந்நூல்ஞானவெட்டியிலெடுத்தேன்முறைபிசகா
நன்னூல்ஞானகாவியம்யான்வெளியாயுரைத்தேன்- வெற்றி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1371
புத்தியினில் மத்தியானமது அமுரி யுண்டேன்
பூரணத்தை மாலைதனில் புளிதா னுண்டேன் 
சத்தியினால் கொல்லுமிந்தக் கருவி யெல்லாஞ்
சண்டாள வாய்வுமெங்கே சரருந் தானாய்
வெற்றியதா மந்திகா சந்திலை மூன்றும்
வேகமில்லை குருமுறையை விளம்பி னேன் பார்
நித்திய மனுயதித காய கற்பம்
நீடுழி காலமதும் வாழ்வா ராண்டே. 

பாடல் எண்:- 1372
ஆண்டொன்றில்லை தேகசுத்தி யமுரி யாச்சு
அதுதள்ளி யாண்டுமுதல் கற்பஞ் சுத்தி
தாண்டவமா மிரண்டாண்டில் மாற்று ரெண்டு
சாதித்தால் மூன்றாண்டில் மாற்று மூன்று
தூண்டாகும் நாலாண்டில் மாற்று நாலு
சொல்லிவிட்டோ மைந்தாண்டில் மாற்றைந் தாகும்
பூண்டாகு மாறாண்டில் மாற்று மாறு
பொன்மயமா மேழாண்டில் மாற்று மேழாம். 

பாடல் எண்:- 1373
மாற்றெட்டா மாண்டினிலும் வயது மெட்டு
மாறிடவும் புளியமுரி லேகியஞ் செய்து
வேற்றுமைகள் வாராது ஒன்ப தாண்டில்
இதுபுளிய மமுரியுமே வேகச் செய்து
பார்த்துவன்னி தனிலுங்களி பதமாய்ப் பாகம்
பகருவாய் பத்தாண்டில் மாற்றுப் பத்து
பூத்திடுபூ நீறுபுவி தனிலு மூலப்
புளியிருந்து பனிபடவும் பூர்க்கு மூப்பே. 

பாடல் எண்:- 1374
இந்தவிதஞ் செய்திடுவோர்க் கெய்து முப்பு
இகந்தனிலு முவர்சவடு முப்பா காது
வந்துஅடைந் திந்தவிதி யினிமேல் காணும்
மறைத்தபொரு ளனைத்துமிந்நூல் வகையைச் சொல்வேன்
சுந்தரப்பெண் னமிர்தமட மாது வாலைச்
சூக்ஷமெல்லா மெந்தனுக்குச் சொன்னாள் மேலும்
அந்தவிதம் பத்தாண்டுந் தாண்டி யேற
அருள்வேன்கா ணளவையினி யருள்வே னாண்டே. 

பாடல் எண்:- 1375
பத்தாண்டு கடந்தபின் பதினொன் றாண்டில்
பத்தரைக்கு மதிகமதாம் பசும்பொன் தேகம்
சித்தான திங்கள்ரெண்டு மாற்று மொன்று
திங்களுமே நாலதுக்குள் மாற்று ரெண்டு
வித்தாகு மாறுதிங்கள் மாற்று மூன்று
மிகுநான்குஞ் சென்றபின்பு மாற்று நாலு
பத்தான திங்களுக்குள் மாற்று மஞ்சு
பதினொன்றாண் டதுக்குளது பரீட்சை யாண்டே. 

பாடல் எண்:- 1376
ஆறுபத்து மறையும்வய தறிவ வேது
அம்பிகையால் பதினாறு அரைமாற் றாச்சு
மாறுவதும் புளியுமப்பு மாறிப் போச்சு
வச்சிரத்தா லிட்டி ழைத்த காய மாச்சு
தேறுவதும் பனிரெண்டாண் டடுத்துக் காத்துச்
சிவகுருக டாக்ஷமத்தின் செய்கை யாலும்
பேறுபெற்ற மகத்துகள்தான் கடந்த மார்க்கம்
பேருலகில் மகானுக்கள் பேசு வாரே. 

பாடல் எண்:- 1377
திங்களெனு மதிகடந்தால் மாற்றொன் றாச்சு
செங்கதிர்மூன் றதுகடந்தால் மாற்று மூன்று
செங்கமல தேகமதாந் திங்கள் நாலில்
செம்பொனிற வயததுவு நாலு மாகும்
அங்கமெனும் திங்களஞ்சில் வயதஞ் சாகும் 
ஆறுதிங்கள் வயதாறு ஏழுக் கேழு
எங்குகதிர் சூரியனா மெட்டுக் கெட்டு
இனியொருபத் தாறுதிங்கள் பனிரெண் டாமே. 

பாடல் எண்:- 1378
வாலையெனும் பதினாறு அரையும் பத்து
வதிஇருபத் தாறரைகாண் மாற்று மாச்சு
காலையெனுங் கற்பமுண்டேன் பனிரெண் டாண்டு
கனகமென்னுள் விளைவாச்சு கற்பத் தாலும்
சாலையெனுங் கொய்துடுத்துச் சிறுபெண் ணாத்தாள் 
செப்பினதோர் வாதமுஞ் செடத்தி லாச்சு
ஆலையெனுங் கரும்பினுள் சாறு போலும்
அலைவதில்லை யடிசுன்ன மறைத்த வாறே. 

யோகஜெயம் ஏலப்பாட்டு
(தரு)
ஏலேலோ ஏலேலோ சிவசிவ ஏலேலோ ஏலேலோ. 
பாடல் எண்:- 1379
கதிர்மதிசூழ்கமலவிதழ்- இடையின்
கலைசுழலுங்கருணைமலர்பொழியும்
விதிகருவூர்நகர்செழிக்கும்- மெய்ஞ்ஞான
வெட்டியருள்வேதாந்தகற்பஞ்சுழியின்
முனையருள்புரியும்பரி- பூரணகற்பந்
துரியாதிதமுமதியிலறிந்தேதான்
பொழியமிர் தமதுரரசபாண- மதினாலும்
புகழ்விஜயமாண்டுபனிரெண்டளவுந்தேறித்
தொழிலனேகமகாராஜயோகமதில்வாசி- சூக்ஷ
சடாதாரமதுமீராறுந்தாண்டி
வழிபலசுகாதிதசுகசோதி- மணிவாசல்
வாலையபிராமிமலர்ப்பாதந்தெரிசித்தே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1380
திருவமிர்மதிமலர்சூழ்- மருவீர்
செழித்தவளர்தேன்பொழியும்புனல்
மருவும்விந்துநாதசத்தி- செனித்த
வாறுதன்னையானருளமூலமணி
பூரகமனாகதம்வீசுத்தி- மூடுதுறை
யாக்கினைசுகாதிசுடர்தாண்டி
மேலும்வரையாறுதிருவாவடுதுறை- தாண்டி
விக்கிரமவியானனையஸ்வமதாய்ப்பூட்டி
ஞாலமதில்கூர்மமெனுஞ்சீனியதை- மாட்டி
நாடியதனஞ்செயனையங்கும்படியாக்கி
வாலையருள்பொற்கமலபாதந்- தொழுதேதான்
வாசிதனிலேறிமதியமிர்தநதிபாய்ந்தே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1381
தூலவுடல்சூக்ஷமதேகமதாய்- மேனி
துய்யநிறந்தசவாண்டினிலும்வினை
தாவிவருஞ்சூடுகனல்- ஓராண்டில்
தாபம்வருஞ்சோபமெத்தஅவிழ்தம்
போகமெனுங்காமத்தை- வாமத்திலேற்று
பொல்லாதமூதேவிசாதத்தைமாற்று
கோவித்துஅந்தியைச்சந்தியினில்தள்ளு- குற்பம்
வீணிலும்போகாதுடலூணியேகொள்ளு
நோயற்றுப்போக்கிவிடுஞ்சீரொத்துப்- பாரு
வுன்னிதமாய்ப்பத்தியமுநிர்ணயமிதாண்டே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1382
காலையிஞ்சியமுரியுண்ணு- தினமுங்
கடுக்காயும்புளியுமுண்ணு
அந்திமாலைசுக்குவிந்தமுரி- சேரு
மருவிநிற்கும்பூரணம்
பாலன்படும்பாடதும்பார்க்க- லொண்ணாது
பாழானபத்தியமும்பாகமதுகேளு
தூலமெனுவகைவசமாகவும்- வேணும்
சூதானபேதியதுமூன்றுதிங்களெய்தல்
மாலானபூரணமனோவின்ப- மாகும்
மதுதள்ளினாலிற்சந்தியதுவாகும்
நாலுபேர் அஞ்சிலுமடங்காது- பேதி
நமனுக்குமேலதிகநஞ்சதுகாணாண்டே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1383
ஆறாந்தான்திங்களிலுந்- தேகம்
அசதிமெத்தஅரோசிகங்காண்
ஏழாந்தான்திங்களிலும்- உதிரம்
இறங்கும்பெரும்பாடானதுபோ
மெட்டுதிங்களினில்சீதளமுங்- காணும்
செய்கையொன்பதுதிங்கள்தேகமதுவாடும்
கூரானபேதியுடன்வாந்தியுங்காணும்
கூசாமலேடனையுஞ்சீதள சுரமெய்தும்
வீறானதோய்களதும்வேகமிகக்காணும்
விக்கலதுகக்கியுருமாறிவிடுமாகில்
நேரானகற்பமுறைபேராகச்- சொன்னேன்
நிச்சயமதாகுமிதுஅச்சமில்லையாண்டே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1384
கடல்பெருகுஞ்சமுத்திரத்தில்- கப்பல்
கரையோரம்போகையிலும்பூத்த
மடல்பெருகும்பாய்மரத்தை- நன்றாய்
மடக்கிநடுமத்திபத்தில்சுக்கா
னுடல்தனில்வருகின்றசுவாசத்தைப்- பாரு
ஒன்பதுவாசலுங்கட்டியிருக்கும்
திடமுடனேகம்பத்தினுனியிலு- மேறித்
தீண்டாதமணிசுடரைத்தூண்டாமலேற்றி
புடம்வைத்துக்கருவிகளைக்- கட்டேயறுத்து
பூரணபஞ்சாக்ஷரபிரணவத்தைமூட்டி
நடுமரஞ்சுக்கானைமையத்திற்- பூட்டி
நாடியேமதுவுண்டுயான்பணிந்தேனே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1385
மதியமிர்தமதுவமுரி- மதுரவாசி
யெனுஞ்சாரைவெள்ளைகற்பம்
நிதியகடுங்காரசுன்னம்- அப்பு
நிலவுபொழிஉப்பிதுதே
ரதிதவிதஅமுரியதுமுப்புவுமாச்சு
அமிர்தரசமானதுகள்ளுமதுவாச்சு
மதிரவியுஞ்சுவசத்திவாகியதிலாச்சு
வழலையறிபூரணமும்வஸ்துவெனுமாச்சு
பரிமளசுகந்தமலர்கெந்தமிதுவாச்சு
பகரறியசாந்துசவ்வாதுபுனுகாச்சு
துரியதுரியாதீதமுஞ்சுழியின்முனையாச்சு
சொப்பனமுஞ்சாக்கிரமுஞ்சுற்றிவலமாச்சே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1386
காயகற்பமாண்டுசதம்- அதின்பின்
கடந்தபின்புவழலைமுறைமூல
சாயசரக்கெடுத்துலர்த்தித்- தயிலந்
தான்புடம்போட்டெடுத்தபின்பு
தனியமாயாமல்பார்க்கவுமனோன்மணியின்
விந்துமாணிக்கஒளிவதிதவலைமுப்பாகும்
தாயானகெந்திரசகாரசாரந்- தயில
மிதுகாலையுறசோருப்புடம்போட்டு
உபாயமதுவாகவொருகழஞ்சிடையுண்டு
முன்னுடலெதுக்குவொளிவாகுமதுகோடி
நயமாகப்போதமயமானந்தங்காட்டும்
நங்கென்றபூரணவிலாசத்தில்நின்றே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1387
முன்னான்கும்பன்னிரண்டில்கற்ப
முறைதவறுமனதுகந்துஉறுதி
அன்னாள்முதலப்பரத்தை- மிகவும்
அதிதமதாய்வளரும்விந்துவாசி
தூக்கியிறுக்கிச்சுருக்கியதைப்பாரு
சொன்னபடிகண்டமதிலூதிவிடுதாரை
தீர்க்கமுடன்செந்தணலைத்தாண்டியதுபாயுந்
தீபஒளிப்பிரகாசதெரிசனமுமாகும்
மார்க்கமுடனாரறிவர்சொன்னேன்கருவாளி
மனதுஒருமித்துவைராக்கியமதுவாகக்
கார்க்கசிலம்பொலியோசைகாணுமதுயூபங்
கயிலாசபரகெதியில்காட்சிபெறுவாரே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1388
இருபத்தோராயிரத்தறுநூறு- சுவாசம்
இறுக்கிகண்டதாரைதனில்சுருக்கி
கருத்துகந்தமூலக்கருக்குழியில்இருத்தி
கற்பமுண்டுவாசிகருதிடிலும்
சுழியிலுற்பனமதாகவொருஓங்காரநாடி
ஒன்றானகம்பத்தில்பாய்மரமீரெட்டு
விற்பனமதாகபதினாறுகயிறுபூட்டி
வீசிவிடுவாசியதைநாசிநுனிபாயா
சொற்பமதுசந்துகள் துவாரமதிலோடா
சொக்கிவிடலாகாதுசுவாசமதிலேறி
கற்பனைசுக்கானைரசக்கண்ணாடிபூட்டிக்
கருதியேவிடுசீனிகலப்பையதைநாட்டே- ஏலேலோ. 

பாடல் எண்:- 1389
சித்திரமணிமண்டலத்தில்- கண்ட
தீபவொளிப்பிரகாசமதில்அருள்
முத்திபெறுமதியமிர்தம்- வாசி
முனையிடைபின்கலைபிரழாஇன்ப
சித்திரவிஸ்தார சுழிகமலவிதழ்நாடி
திருமருவுசோதிமணிதீபசுடர்தேடி
இத்தலமெய்ஞ்ஞானகுருபரிபூரண
வாலையிங்கிதமலர்கமலஞ்சிங்காதனமேவி
பத்தியுடனும்பணியசத்திசிவரூபம்
பச்சையுடனுஞ்செழுமைபார்க்கபரங்காணும்
கர்த்திகசதாசிவமனோன்மணிப்பிரகாசங்காணுங்
கயிலாசகிரிகாட்சிபெறலாமே- ஏலேலோ. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1390
இவ்வுலகில் யாவர்களுங் கண்டிந்நூல்
ஞானவெட்டி யிகழ்ந்தி டாமல்
அவ்வம்பர மானந்த சின்மயத்தி
னருள்பெறவும் அர்ச்சித் தேன்காண்
செவ்வையென்ப தடியறிந்து செய்கையெல்லா
மாய்ந்துசிவ சத்தி பாதம்
எவ்விதமாய்க் கற்பமுறை யியல்புதனி
லினிமோக்ஷ மெய்து வாரே. 

பாடல் எண்:- 1391
எய்துந்தச தீட்சைபத்து மிரண்டுபனி
ரெண்டதுவாம் இனிதா னாச்சு
பழுதுவரு காமலுமே பாடினதோர்
வாக்கியமதைப் பழிப்பீ ராகில்
எழுநரகில் விழுந்துவுயி ரிருக்களவும்
வினைப்பயனறிந் தெய்து மாகில்
தொழுதுவடி வாம்பிகையின் மலர்ப்பதமுங்
கெதியடைந்தால் சொர்க்கஞ் சேர்வோம். 

பாடல் எண்:- 1392
இகத்தாசை பாசமிருந் தெந்நாளு
முழன்றிடுவோர்க் கெதயா தொன்றும்
நகைநகைத்து மினுமினுக்கும் விழிசிமிட்டி
வரவழைத்து நாணஞ் செய்யும் 
புகைசூழ்ந்து விருள்மூடி மாய்கையினி
வழுந்திமிகப் போவா ராகில்
அகத்திலிருந் தருள் ஞான தீவவொளி
யறியாம லமைத்தா ராண்டே. 

பாடல் எண்:- 1393
அனித்தியமிந்த வுயிர்வாழ்க்கை யுண்பதுவு
முறங்குவது மதுவாய் ஞானம்
தனுவெனுமன் மதபாண அஸ்திரத்தா
லவர்மாளச் சபித்தா ரீசன்
வனிதையில்லா வுலகமில்லை வாழ்க்கையில்லை
பிறவியில்லை கண்ணீ ரில்லை
இனமறிய நாதவிந்து வியல்பில்லா
வுலகமெல்லா மிருள்தா னாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1394
சுந்தரரே யெங்கள்குலஞ் சூதுபரை வென்றதுவுஞ்
சந்தயமே யானுரைக்க சாட்சியறி யாதவிதங்காண்
நிந்தையுல காதிதமு தீசனென வேபழுக்கும்
வந்தவடி கண்டறிந்தால் மாய்கையிருள் மாறிடுமே. 

பாடல் எண்:- 1395
அண்டமென்ன பிண்டமென்ன அம்புவியா தீதமென்ன
கண்டதென்ன கேட்டதென்ன காரில்லா மாரியுண்டோ
எண்டிசையெல் லாஞ்செனித்த விந்திரியு வுப்புமயம்
நின்றவுப்பு வாரியினால் நீடுலகெ லாமுவரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1396
மயமான உப்பு கடல்சூழ்ந்த வாரிதி மாலின்மயம்
செயலான கார மதிசந்திர சோதி திருநடனம்
நியமித்த வாழ்க்கை நிராமயத் துப்பு நெறியறியார்
கயமான கைப்பு வுலகமெல்லா மிந்தக் காரணமே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1397
உப்புமய மப்புமய மோகோகோ நாதவிந்தின்மயம்
இப்புவியெல் லாஞ்செனித்த இந்திரிய வாழ்க்கைமயம்
மைப்பிதுவில் லாமல்ஜெகங் கண்டதென்ன காண்கிலென்ன
முப்பதுகா ணாதியிலு முடிந்துவைத் தாசனுமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1398
எழுபத்து நான்கு நூறாயிர லட்ச மெவ்வுயிர்க்கும்
உண்பதுங் கைப்புவர் சாரத்தி னாலுயி ருற்பகங் காண்
ஐம்பத்தோ ரக்ஷர வோங்காரங் கொண்ட அவ்வெழுத்தில்
உண்பது றங்குவ துப்பொழிந் தால்செக மொன்றில்லையே. 

பாடல் எண்:- 1399
உப்புவ ரின்றிச் சடமில்லை கார சாரத்தினால்
அப்புவி னால்முடிந் தாண்டுபத் துங்கடந் தானபின்பு
செப்புகி றேன்மதி நாலுக் கொன்றேரவி சேர்த்துவிதம்
அப்புவி லுப்புவு மட்டுப்பு வொட்டுப்பு மானதுவே. 

பாடல் எண்:- 1400
காரமுஞ் சாரமுங் கம்யியுப் பாகுங் கரைத்துபதம்
சேரவு மூன்று தினஞ்சென்ற பின்பு தெளிவிறுத்துக்
கூரவும் வன்னிக் குமிறிட வுஞ்சலங் கொண்டிறக்கி
வாரம திரவி பீங்கான் தனிலிட்டு வைத்திடிரே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900