திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 101- 200

பாடல் எண்:- 101
நகாரமகார மிரண்டையுஞ்சேர்த்து
நடுவேசதுஷ்கோண வீட்டையுங்கட்டி
சிகாரவகார யகாரமதுகொண்டு
சித்திரச்சாவடி விஸ்தாரமாகவும்
அகாரமதுக்குள்ளே யையுமென்றட்சரம்
அவ்வெழுத்தாலே யகண்டசராசரம்
உகாரமதுக்கு ளுயர்ந்தகிலியெனும்
உவ்வெழுத்தாலு முதித்தசவ்வானதும்- வீடு. 

பாடல் எண்:- 102
வஞ்சகமான தோராஞ்சுபெரும்பூதம்
பஞ்சறிவாகவுங் குஞ்சரவீட்டினில்
அஞ்செழுத்துள் வளரைம்பத்தோரட்சரம்
ஆனந்தமாக வலங்காரமாளிகை
கொஞ்சிவிளையாடும் ரஞ்சிதவீட்டினில்
நெஞ்சறியுங்கமலாலயமைம் பொறி
செஞ்சொல்மொழிசிவசிங்கா தனத்தினில்
கஞசமலராயிரத் தெட்டிதழினால்- வீடு. 

பாடல் எண்:- 103
நாலுமுழத்தினுங்காலை வளர்த்தியே
நாட்டியேசக்கரம் பூட்டியேவைத்துடன்
மேலுமீரைந்துடன் தாதுவினாடியால்
வீட்டுக்குஆக்கையைப் பூட்டிவருந்தியே
மாலுநடுவனை காலுமடியனும்
பாலுமதிவளர் மேலுஞ்சுடரினால்
மூலவன்னிச்சுழி மூவரிருப்பிடம்
வாலைகுண்டலிதன் மாளிகையாச்சுது- வீடு. 

பாடல் எண்:- 104
நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே
நாடியஷ்டதிசையு நலமாகப்பூட்டியே
வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே 
வேடிக்கையாகவுநாடி நரம்பாலே
காட்டியசுக்கில சுரோணிதத்தாலே
கருவியெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில்
ஆட்டியமுட்டுமுடக்குக் கணுவுக
ளாக்கைப்பலப்பட நாக்குவுண்ணாக்குடன்- வீடு. 

பாடல் எண்:- 105
சிங்காரமான வரண்மனையஞ்சையும்
சிற்றம்பலத்துடன் பேரம்பலங்களும்
கங்கைநதிகளுந் தொண்ணூற்றறுவர்
கலந்தேயிருக்குங் கனகசபையெனும்
அங்கங்குறைவுபடாம லரண்மனை
அச்சூடுகட்டியே மச்சூடுஆலயம்
எங்கும்பிரகாசிக்கும் மிந்திரியவீடு
இடைபிங்கலைசுழியேகா க்ஷரத்தினால்- வீடு. 

பாடல் எண்:- 106
ஐந்துபுலனையறிவாகக் கூட்டியே
ஆதாரமாறும்வளை தனை நாட்டியே
கைந்துமதசுழி கற்பத்தையூட்டியே
கால்கொண்டுநின்றொரு மேல்கொண்டுவாங்கியே
பைந்தமிழ்சூஸ்திர நாடித்திசைக்கயிறு
பாங்குடன் கப்பிக்கயிறுமூன்றும் பூட்ட
ஐந்துபூதத்தைக் கொண்டாக்கைபிலப்பட
ஆறூருண்டாக்கியனேக விசிதமாம்- வீடு. 

பாடல் எண்:- 107
சுற்றுமதில்களுமா றற்சுவருடன்
துண்டுகளாகிய தண்டிகைக்கம்புகள்
பத்தியால்நின்றதோர் சித்திரச்சாவடி
பார்க்கிறபேர்க்கெலாஞ் சீர்க்கலங்காரமாய்
முத்திதருஞ் சிவசித்திரமண்டப
மோட்டுவளையு நரம்பாவிறுக்கியே
சத்தமெனுநவரத்நக் கதவுடன்
சந்நிதிவாசலிலுன்ன தமாகவே- வீடு. 

பாடல் எண்:- 108
நவ்வையுமவ்வையும் ரெண்டையுஞ்சேர்த்து
நலமான அவ்வையும்வவ்வையுங் கூட்டியே 
சிவ்வையுஞ்சேர்த்துடனா சாரிகையில்
திடமாயெண் சாணுடல்தேகமதாகவே
அவ்வதுக்குள்ளே யாதாரமுண்டாச்சுது
அம்பிகைப்பெண்ணவளாலே வீடாச்சுது
உவ்வதுக்குள்ளே யுடலுமுண்டாச்சுது
ஓங்காரத்துள்ளே யுயிர்வந்துலாவுது- வீடு. 

பாடல் எண்:- 109
திங்களொன்றானபின் மூங்கின் முளைபோல்
திரண்டுருண்டே கனியாகுங்கருவுரு
சிங்காரமானதோர் திங்களிரண்டினில்
சேர்ந்துகலந்தது பாலாடைபோலவும்
இங்கிதசுக்லசுரோணிதமாகிய
இந்திரியவச்சிரவின் பவீடாமதில்
தங்கியநாதவிந்தாலே சமைந்த
சடமதின்வாறினைச் சாற்றுவனாண்டேகேள்- வீடு. 

( விருத்தம் )
பாடல் எண்:- 110
மூலமதில் வீடொன்று முடிந்த தாண்டே
முச்சந்தி வீதியதும் புறம்பாய் வைத்து
சீலமுள்ள பிரமனுக்கும் வீடொன் றாச்சு
சிறந்தருளுந் திருமால்தன் வீடொன் றாச்சு
ஞாலமதில் ருத்திரன்வீ டொன்றே யாச்சு
நலமான மயேஸ்பரன்தன் வீடொன் றாச்சு
ஆலவிட முண்ட சதா சிவனா ருக்கும்
அரண்மனையு மொன்றாச்சு ஆண்டே கேளே. 

பாடல் எண்:- 111
மருவுயர்ந்த வதனத்தி னாத சத்தி
வடிவான மரகதப்பெண் மாது வாலை
திரிபுரத்துக் கொருபுறமா யிலகுஞ் சோதி
சிற்பரத்தி தற்பரத்தி சிறுபெண் ணாத்தாள்
சுரிமுகத்தி னகதனத்தி துடியி டைச்சி
துலங்கும்ரத்ன மானதொரு சோதி மாது
அருமறைச்சி யம்பரத்தி யம்பி கைக்கு
அரண்மனையு மண்டபமுஞ் சமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 112
குருவுடனே சீஷனுந்தான் வாழ்ந்த வீடு
கூறான விந்திரியந் தரித்த வீடு
அரூபியெனு நாதாக்கள் துதிக்கும் வீடு
அளவற்ற வைம்பூதம் வாழ்ந்த வீடு
பருவமெனும் ஞானசிவசத்தி வீடு
பண்ணுமறைக் கெட்டாத நாத வீடு
கருவிருந்த ஞானவிந் திரிய வீடு
கட்டிவைத்தான் திருமால்தன் கயிற்றா லாண்டே. 

பாடல் எண்:- 113
அடிநடுவு முடியுமொரு வெண்சா ணீளம்
அங்குலமுந் தொண்ணூற்றா றாண்டே கேளிர்
கொடியமகா மேருவெனும் வளர்ந்த வீட்டில்
குடிலமங்கு லத்துக்கோர் கருவி யாகும்
படியான பதினெட்டாங் கோட்டின் மேலும்
பலபலவாய்க் கருவிகளு மமைத்த தாகில்
முடிசிறந்த ஜெகநாத ரருளி னாலே
முடிந்ததுகாண் பெரும்பரத்தி வீடு மாண்டே. 

பாடல் எண்:- 114
சரியையுடன் கிரியைசிவ யோக ஞானந்
தன்னையினிச் செய்திருக்கு மாத்தாள் வீடு
வரிசைதந்து விளையாடு மாதி வீடு
வளமான கருவியெல்லாம் வளர்த்த வீடு
பெரியநரம் பெழுபத்தீ ராயி ரத்தில்
பெருநாடி பெலத்தநரம் பான தாலே
பரிபூர்ண வம்பிகைப்பெண் ணிருந்த வீடு
பாகமதா யமைத்துமுடிந் தாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 115
ஒன்றிரண்டு திங்களில் கருவு மூறி
யொருமூன்று திங்களில் ரூப மாகிக்
கன்றுசது ரஞ்சுவிரு மூன்றில் தானுங்
கருத்துடனே யிடைநாசி மார்பு மாகி
என்றுரைத்த வேழுதிங்க ளெட்டுக் குள்ளே 
யெண்ணரிய நாதவிந்து வுருவே யாச்சு
அண்டபிண்ட மகண்டமதா யமைந்து மேலு
மலங்கார வீடாகச் சமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 116
ஆக்கையெனும் தசநாடி நரம்பி னாலே
யடி நடுவு முடியுமா தார மாசித்
தீர்க்கமுள்ள யோனிசித்திர மதிலும் வீடுஞ்
சிவசமயத்தினருளாலே யமைத்த வாறு
மேற்கயினி யுளுத்ததொரு வுப்புப் பாண்ட
மிப்படியே சடமதுவால் வீடு மாச்சு
பார்க்கவொரு சிங்கார விசித மாகும்
பன்னிரெண்டாங் கோட்டில்வந்து பதிந்ததாண்டே. 

பாடல் எண்:- 117
நாலாச்சு ஆறாச்சு வீரைஞ் சாச்சு
நலமான வீராறு மீரெட் டாச்சு
மேலான விரண்டாச்சு இதுக்கப் பாலும்
வெளிகடந்து வொன்றாச்சு வுருவு மாச்சு
காலாச்சு கையாச்சு வயிறு மாச்சு
கட்டியொரு வீடாகச் சமைந்த வாறும்
சீலமுள்ள சிங்கார விசித வீட்டில் 
சித்திரத்தின் பதுமையைப்போற் செனித்த தாண்டே. 

ஆறாதாரவகை இந்திரிய விவரம். 
 ( தரு )
அடையாளஞ்சொல்லுகிறேன்- ஆண்டையேகேளீர் 
அடையாளஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 118
பிருதிவியப்புவுந் தேயுடன்வாயும்
பேரானவாகாச மைந்ததையும்கூட்டிக்
கருத்தில்வளருஞ் சுழிமுனைவீட்டினில்
கண்டுபுறமாக நின்றதுஆண்டையே
நிருவிகமலத்திதழாயிரத்தெட்டு
நிர்க்குண நிர்மலநேர்மையிதாகையால்
மருமலர்சூழ்திருமாலின் பதிவளர்
மாமதுரக்கனி வாழ்க்கையுமிப்படி- அடை. 

பாடல் எண்:- 119
தோத்திரமாவது வாக்குடன்சட்சுவுஞ்
சிங்குவையாக்கிராண மைந்தையுங்கூட்டிப்
பாத்திரமான செவியுமுடம்புகள்
பாங்கான நாக்கதுமூக்குமேயாச்சுது
சத்தபரிசமும்ரூப ரசகெந்தஞ்
சார்வாகுமீதொரு வைந்துமேயாச்சுது
சித்தமுங்கேள்வி சுகதுக்கரூபங்கள்
சேர்ந்த வறுசுவைநாவதுமேருசி- அடை. 

பாடல் எண்:- 120
சந்தனங்கெந்தஞ் சவ்வாதுபனிநீர்
சாந்துபுனுகு களபகஸ்தூரியும்
சிந்தைமகிழவே கண்டுகளிக்குஞ்
செழுந்திருநாசி சுகதுக்கநித்திரை
பைந்தமிழ்வாக்குடன் பாணியும்பாயுரு
பாங்காயுபஸ்தமைந் தாச்சுதுபாகமாய்
அந்தமுங்கால்பரபான முந்தாரணை
யைம்புலனாவலும் லிங்கமிதாண்டையே- அடை. 

பாடல் எண்:- 121
வசனங்கமன ந்தானவிசர்க்கம்
வாழுமேயானந்த மைந்திதுங்கூடியே
நேசமும்வார்த்தை நடக்கைக்கொடுக்கும்
நீருமலமுமாதாரமீ தாச்சுது
நேசமனபுத்தியாங்கார சித்தமு
நேராயிதுநாலு நின்றுநடக்கையால்
ஓசைநினைத்திடும் புத்திவிசாரிக்கு
மோங்காரக்கோபமுஞ் சித்தம்பொருந்திடும்- அடை. 

பாடல் எண்:- 122
உருவமுங்கொண்டு வுலகெங்குஞ்சுற்றி
யுழன்றுவுழன்று வுணர்ந்துதவிப்பதும்
அறிவொன்றுழன் றுமேயாக தத்துவமு
மையாறு முப்பதுமெய்யாகக்காட்டியே
கருவிலமைத்ததின் காரணசற்குரு
காட்டியதத்துவக் கட்டளையின் படி
திருவுருஞான சிவசத்தியம்பிகை
சின்மயசுரூப சிரோமயமாமது- அடை. 

( விருத்தம் )
பாடல் எண்:- 123
கங்கையெனுங் கதிர்மதியுந் தரித்த சோதி
கனகரத்ன மானுடனே மழுவு மேந்தி
பங்கையமா மறுகுதும்பை கொன்றை சூடிப்
பதினாறு கலையணிந்த மூலந் தன்னில்
திங்களெனும் புவனமெல்லா நிறைந்த சோதி
திரிபுர த்தைக் கனலாக வெரித்த வீசன்
செங்கநதி யென்றுதிரு மூலந் தன்னில்
செனித்தெழுந்த கருவியெல்லாஞ் செப்பு வேனே. 

பாடல் எண்:- 124
பூதாதி யைந்துநின்ற புகழுஞ் சொன்னேன்
புலனைந்தும் விபரமதாய்ப் பொறியுஞ் சொன்னேன்
சூதான கர்மவிந் திரியஞ் சொன்னேன்
சுகஞான விந்திரிய மைந்துஞ் சொன்னேன்
தீதான அந்தக்கரண நாலுஞ் சொன்னேன்
தெளிவான ஜெக நாத ரருளி னாலே
ஆதரவாய் நின்றதச வாய்வுஞ் சொன்னே
னதுகடந்து வறிவதற்கு வருள்செய் வேனே. 

பாடல் எண்:- 125
உணவறிந்து நினைவறிந்து வுணர்ச்சி கண்டு
உள்ளறிந்து புறமறிந்து வுரிசை கண்டு
மனமறிந்து மதியினின்று மகிழ்ச்சி பெற்று 
வசனமெனுங் கேள்வியதின் வாய்மை கேட்டுக்
குணமறியா தாசையினா லழிந்து நின்று
கூர்ந்துமன மெழுந்துவொரு கருமஞ் செய்து
நினைவுதவ றாமலொன்றாய்ப் படைத்து நின்றேன்
நிகருடைய தத்துவமுப் பதுஞ்சொன் னேனே. 

பாடல் எண்:- 126
சொன்னவகை தொகையறிந்து சொல்பே தங்கள்
சொல்லவில்லை தசநாடி தசவாய் வுந்தான்
இன்னமொரு வகையறுபத் தாறுஞ் சொல்ல
விவர்கள் நின்ற நிலைசொல்ல வீடுஞ் சொல்ல
விண்ணம்வரா திவர்கள்செய்யுந் தொழிலுஞ் சொல்ல
வேதாந்த மறியாத முடிவுஞ் சொல்ல
அன்னையெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யவதரித்து நின்றநிலை யருள்செய் வோமே.

( கொச்சகம் )
பாடல் எண்:- 127
மருவுதிருப் பொற்கமலம் வல்லபைதன் வீட்டிலொரு 
கருவுருவா யைம்பூதங் கலந்தே யொருபுறமாய்
அருவுருவாய் நாதவிந்து அறுகுநுனி மேற்பனிபோல் 
மருவியைம்பத் தோரெழுத்தில் வந்தவகை சொல்வேனே. 

பாடல் எண்:- 128
தாங்கிநின்ற மூலமதில் தானுமொரு வீடுகட்டி
வாங்கிநின்று வட்டமிட்டு மாறியிரு காலாக
ஓங்கி முளைத்ததுதா னொன்றே கொழுந்தாகி
நீங்காமல் நின்றகா ணெல்லிக் கனியாச்சே. 

பாடல் எண்:- 129
சத்தி யுதித்ததிருச் சன்னிதியின் முன்பாக 
முத்திதரு மெய்ஞ்ஞான மூவரனுக் கிரகமதால்
சுத்தியொரு பந்தலிட்டுச் சூழ்ந்ததச வாய்வுகம்பாய்ப்
பத்திபடர்ந் ததுகாண் பதினாலு லோகமதாய். 

( கலித்துறை )
பாடல் எண்:- 130
மாறிக் கலைகொண்டு வம்பர வீதியின் வட்டமதில்
தேறித் தெளிந்து வளைத்துக்கொண் டேன்தச வாயுவைத் தான்
ஊறி நடக்கின்ற பானத்தின் வாசி நுனிபிறழா
ஊறிக் கருவி லுறவாகி நின்று வுதிக்கின்றதே. 

பாடல் எண்:- 131
சாதியுங் கண்டுகுல மேவகுத் திந்தத் தாரணியில்
வாதிகள் தள்ளி வழக்குரைப் பார்மனு நீதிகண்டு
நீதியும் வேதநிலை கண்டுரைத்த நேர்வீட் டுக்குள்ளே 
சோதியைக் கண்டு வுறவாகி நின்று துலங்கினனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 132
அத்தி புரத்தி லருகிருந்த தாக்கையது
சத்திசிவ நாதவிந்து தான்கூடி- விந்ததுமே
மூலக் கருக்குழியில் முச்சந்தி வீதிவளர்
பாலகனா யுற்பவிக்கும் பார். 

பாடல் எண்:- 133
குருலிங்க சங்கமது கூறுமறு கோணவரை
இருமென் றழைத்து விருந்தங்கு- உருவாகி
நின்றறுபத் தாறு நிறைந்த கருவியெல்லாம்
கொண்டமைந்த வாறதனைக் கூறு. 

பாடல் :- 134
ஈச னுறவாகி யெங்குஞ் செனித்திருந்த
நேசமது சாதிலிங்க நேர்மையைக்- கோசமது
நாதவிந் துற்பவமே நானறிந்து ஞானவெட்டி
பேதமில்லை சாதிகுலம் பேசு. 

ஆறாதாரவகை இந்திரிய விவரம். 
( தரு )
விபரஞ்சொல்லுகிறேன்- தசநாடி- விபரஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 135
விவரஞ்சொல்லுது மிடைபிங்கலைசுழி
மேவுமத்திச் சிங்குபுருஷன் காந்தாரியும்
அம்பலம்புருடன்கு குதன்சங்குனியு
மாகத்தசநாடியை யிரண்டாண்டையே
இபரம்பெருவிரல் மேலுமிடைகலை
யின்பம்வலதுபெருவிரல்பிங்கலை
சுபரஞ்சுடரொளி மேலுமோங்காரமாய்ச்
சுற்றியேநிற்குஞ் சுழிமுனையாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 136
மூலச்சுழிதனிலே முனைத்தாக்கையு
மீறியேபெருநாடி யுயர்ந்துடன்
மேலைச்சிரமகமேரு முடிவளர் 
விற்புனமுங் கருவுற்பனஞ்சொல்வேனான்
கால்கொண்டு நாழிகலைகொண்டு வாய்வதுங்
காரணமாகவே கண்டமதாய்வளர்
வேல்கொண்டுமே குழல்கொண்டுடன் மூலமே
வித்தாய்முளைத்தொரு பத்திதுநாடிகாண்- விபரஞ். 

பாடல் எண்:- 137
கண்டமதுநரம்பான குழைதனில்
காந்தாரிநின்று கலந்துநீர்பாய்ந்திடில்
அண்டமதிலத்தி சிங்குவைத்தானு
மவற்றையு நாலுமறிவிப்பதாகுமே
நின்றிடுஞ் சிங்குவையப்பதுவின்மயம்
நின்றநிறமது வுப்பதுவேசலம்
விண்டலம்புருடனிரு கண்ணளவு
மேவுங்காந்தாரியிங்கா தளவாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 138
அத்தியுநின்றதது வலபாரிச
மானதளவா யமைத்தளவாய்பிர்ம
வித்தையுமாருயிரைம் புலனாதிகள்
வேதங்களோது மேலுந்தாள்வாயினி
சுத்திநிற்குஞ் சுகாதீதசங்குனி
சுந்தரலிங்கஞ் சுகந்ததாள்பாரிசம்
மித்தமேவுங்குகுதனு மானந்தம்
நேருந்தாள்வாயுமே நின்றிடுமாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 139
நாடியீரைஞ்சு நரம்புகள் கூடியே
நல்கிநடப்பது நட்புகள் கண்டிடில்
நீடியுலாவும் மசையுந்தடுக்கம்
நிரந்தர தாதுசதந்தரநாடியே
நாடியசையுமடக்கு முடக்கு
நடந்துமேயோடி நகர்ந்துபுரண்டு
மோடிகூடியிழுக்கு நரம்புநீண்
டேறிமாறிபடுக்கும் பாராண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 140
வாய்வுதச பத்தின்வாறுமறிந்திடில்
வளமையாம்பிராணன் பானன்வியானனும்
சேயுமுதானன் சமானன் கூர்மகனாகன்
திரிகரனாகிய சித்திரநாடிதான்
ஆயுநாடிநரம்பதுவுந் தனஞ்செய
னருள் தருவேதந்தத்துவனீரைஞ்சு
பாயுந்தசவாய்வு பத்துடனானதும்
பார்க்கப்பார்க்கப் பரீட்சைகளாயிடும்- விபரஞ். 

பாடல் எண்:- 141
பிராணன்மூலந்தனில்மேல் தொடர்ந்தோங்கியே
பின்னும் பனிரெண்டுவங்குலமோடிடில்
அறிவதுநான்குபண்டடங்கி நாலோடும்
அபானன் மலசலமறிந்து போக்கிடும்
பிரியும்வியானனு முண்டசாரந்தனைப்
பிரித்தெழுந்தெழுபத்தீராயிர நாடிக்கும்
தரியுமுதானன் செரிப்பித்தேப்பமிடச் சமானன் 
சரியாகத்தானிருக்கும்வாறு- விபரஞ். 

பாடல் எண்:- 142
நாகன்களைவிக்கல் சோம்பலுண்டாக்கிடில்
நற்கண்ணிலேநின்று கூர்மனிமைத்திடில்
தேகத்திரிகரஞ் சோபமுண்டாக்கிடில்
தேவதத்தனுங்கொட்டாவி நகைத்திடில்
வாகச்சிரித்திடில் தனஞ்செயனுச்சி
வாழ்வதுமேலேனுந் தொடங்கியாத்துமம்
ஆகமடங்கியப் போதினிலண்டமது
பிளந்தாக்கினை யப்பாலோடிடுங்காண்- விபரஞ். 

பாடல் எண்:- 143
இந்தவிதமறிந் தெவ்வுயிர்க்குமீச
னெறும்புமே கடையானை முதற்கொண்டு
சிந்தைசெய்யாமல் வெவ்வேறதின் கூறதாம்
செந்துக்களுற்பன விந்தையிதாண்டையே
சுந்தரலிங்கஞ் சுதாதீதமந்திரஞ்
சுக்கிலவிந்து சிரசண்டமாயிடில்
அந்தரகங்கைச்சடை முடியீச
னமர்ந்திடுங்கோசமரன் கொலுவாண்டையே- விபரஞ். 

( விருத்தம் )
பாடல் எண்:- 144
இடைகலையும் பிங்கலையு மிரண்டுங் கூடி
யிருகாலில் பெருவிரல் மேலே நின்று
நடுவிலொரு கத்தரிக்கோல் மாற லாகி
நாசிமுனை முட்டிநிற்கு நயந்து பார்க்கத்
திடமுடைய சுழியின் முனை மூல நோக்கிச்
சிரசளவு மாதார மாகி நிற்கும்
அடைவான சிங்குவைத்தா னாவுக்குள்ளே 
யன்னமுடன் தண்ணீரு மமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 145
வட்டமிட்ட புவியதனில் குகுத னிற்கும்
வலதுதாள் காந்தாரி வாக்கில் நிற்கும்
இஷ்டவலம் புருடனிட தாள வாய
மிருந்திடுஞ்சங் குனியும் லிங்கத் தாள்வாய் நிற்கும்
சட்டமுடன் குகுதனிற்கும் பானன் தாள்வாய்ச்
சார்வாகுந் தசநாடி சமைந்த நேர்மை
அஷ்டதிசை புகழுமுட லுயிரு மாக
ஆதரவா யாவிநின்ற தருள்செய் வேனே. 

பாடல் எண்:- 146
பேரான பிராணன்பெரு மூலந் தன்னில்
பிலத்தவீரா றங்குலத்தில் பீள வாங்கி
நேரான கண்டமதி லெட்டெட் டாகி
நிலைபிசகா நாலுமது வெளியி லோடும்
சீரான வபானனுந்திக் கமலத் தின்கீழ்த்
திறமாக மலசலத்தைக் கழித்துநிற்கும்
ஈறான வியானனுண்ட வண்ணந் தண்ணீ
ரெழுபத்தீ ராயிரநா டியிலுஞ் சென்றே. 

பாடல் எண்:- 147
நின் றிலங்கு நாடியது பிரித்து வைக்கும்
நிகழ்த்திடுமு தானன்செரிப் பித்தே நிற்கும்
ஒன் றிலங்குஞ் சமானனுண்ட வன்னந் தண்ணீ
ரொருவருக்கு மேறவொட்டா திருக்கு மாகில்
தன் றிலங்கு நாகனுமே விக்கல் கக்கல்
தனை மிகுந்த கூர்மனிரு விழிநீர் பாய்ச்சல் 
அன் றிவிழி சிமிட்டிவைக்குந் திரிக ரன்றா
னாயாசம் சோம்பல்தும் பலசதி யாமே. 

பாடல் எண்:- 148
வசதி நகைத் திடுவனெனும் வழலை யாவன்
வகைத்திடுவன் தனஞ்செயனு முச்சி யேறி
நிசதி நின்று மேலாகத் துடிக்கச் செய்வன்
நிரந்தரமா யாதார மேலாய் நிற்பன்
நிசதியினால் சரீரத்தில் வாய்வுக் கெல்லாம்
நிஷ்களமா யதிகாய நிலைத்த தாண்டே
இசைத்ததிரு மூலனா ருரைத்த வண்ண
மினியதொரு ஞானவெட்டி யியம்பி னேனே. 

பாடல் எண்:- 149
நிரந்தரமாய் மூலமென்ற பாண்டந் தன்னை
நீடுலகி னடத்திவைத்து மோசஞ் செய்தல்
தரந்தரமாய்க் கருவியெல்லா மாண்ட பின்பு
தனஞ்செயனு மகண்டவெளி சார்ந்து வேகி
அறுந்துதச நாடியெல்லா மசைவெல் லாம்போ
யாதார மாறுமகன் றசைவு மற்றுச்
சிறந்தவுட லுயிர்கூறிச் செயலுஞ் சொன்னேன்
தெரிசனமுங் கண்டுதிரு வுருசொன் னேனே. 

பாடல் எண்:- 150
திருவுருதன் மலர்தரித்த பரனைப் போற்றிச்
செப்புகிறேன் குறைக்கருவி தெளிந்து தானும்
மருவுமதி மலர்க்கமல விதழின் மேவும்
மதுரசர் வாணியருள் மகிழ்ந்து வென்னை
அருவுருவாய்க் கருவிகர ணாதி யெல்லா
மடிபிசகா நடுதனையு முடியுஞ் சொன்னாள்
குருவருளா லம்பிகைப்பெண் கமலம் போற்றிக்
கூறுகிறே னுடலெடுத்த வரலா றாண்டே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 151
வாரான கொங்கைமட மாது கருக்குழியில்
பாராமல் வந்துதித்துப் பரிதவித்து நின்றேன் காண்
ஊராங் கருவூரை யுற்றதுணை யென்று நம்பி
மாராட்டத் துள்ளேயான் வந்து சமைந்தேனே. 

பாடல் எண்:- 152
பாராம லேயெழுந்து பத்தியருள் சித்திபெற
நீர்மேற் குமிழியென்று நினைவி லறியாமல்
சீர்மே லெழுந்தசிவ நாதவிந்து தன்னருளால்
ஊர்மேல் வளர்ந்துமன துள்ளமதி கெட்டேனே. 

பாடல் எண்:- 153
காயா புரிநகரிற் கனககிரி மேவிவளர்
மாயாப் பிறவியெனு மகிழ்ந்திருப்ப தெக்காலம்
தாயாய் முலைகொடுத்துச் சார்ந்தென்னை யீன்றகுரு
தேயா மணிவிளக்கே செம்பொனரு ளம்பிகையே. 

பாடல் எண்:- 154
அம்பிகைப்பெண் செம்பொன்மணி யமிர்தரச பானமருள்
நம்பிதிரு வம்பரமே நாடிநட னம்புரிவாய்
உம்பரருள் நாதவிந்து வோர்கருவி யென்றறிவால்
கும்பமுனி யாலுரைத்த கொஞ்சும்ரத்ன மாமதியே. 

பாடல் எண்:- 155
ஆதியந்த நிர்க்குணமே யண்டபிண்ட மேவுதிருச்
சோதிநட னம்புரியுஞ் சுழிவிட்டு வாசலிலே
நீதிக் கருவூர் நிலையாய்க் குடியிருந்து
சாதிகுல மெல்லாந் தவிர்ந்துசதுர் மேல்வளர்ந்தே. 

( வெண்பா )
பாடல் எண்:- 156
தூராத கும்பிதனில் துலையாத பாண்டமதில்
வீராக வீற்றிருந்தேன் மேல்வீட்டில்- நேராக
சண்ட னணுகாமல் சதுஷ்கமல சந்நிதியில்
அன்றுதித்து வந்தேன்கா ணாண்டே. 

பாடல் எண்:- 157
பசுபாச யோனிதனில் பாராம லேயழுந்தி
விசுவாச பாதகராய் விரகழிந்து- நிசுவாச
நதியிற் கரையோர நவசித்திர மண்டபத்தில்
விதியே கதியெனவே விந்து. 

பாடல் எண்:- 158
விந்து வழியறிய மேதினியில் யானுதித்து
வந்தவழி கண்டறியா மையல்கொண்டு- தையலுடன்
விரக மதுசுகமே யின்பது வேகடலில்
அரவமது வாய்வினையென் றறி. 

( கலித்துறை )
பாடல் எண்:- 159
சுருதி முடிந்த திரிகோண வட்டச் சுழிமுனையில்
இருந்து வளர்ந்து கருவுரு வாகி யினிதசையான்
கருதி விளங்கு மதிமலர் வாசங் கனகிரிமேல்
சதுஷ்கோண வீட்டி லிருந்துமெய்ஞ் ஞானத் தலமறிந்தே. 

பாடல் எண்:- 160
மடலோலை கொண்டு வெழுதாத சோதி வடிவுதனைச்
சடமேவு சின்ற வகையுரைத்தேன் சர்வ காலமெல்லாம் 
உடல்மேவு கின்ற கருவூ ரதுதனி லுள்ளதெல்லாம்
திடமாக யானுஞ் சபைமேவி நின்று தெளிவிப்பனே. 

வசையமுறை
 ( தரு)
வசையஞ்சொல்லுகிறேன்- ஆண்டைகேளீர் வசையஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 161
வசையமினிஐந்தும் வசனிப்பதாகவும் வகுக்கமா
வசையம்பருவசையமும்ரெண்டு
சுசையமலவசையஞ்சல வசையமும்ரெண்டு
சுக்கிலவசையமுடனை ந்துங்காணாண்டையே
அசைதலைந்துகுணமு மறிய
வசையமதினாக்கைரட்சித் தருளுமாண்டே யுனதுபதம்
நிசைதலம்பிகைமாது நிலைத்தபடியுரைக்கும்
நெறியைத்திருவள்ளுவன் நிகழ்த்தஞானவெட்டியான்- வசை. 

பாடல் எண்:- 162
அன்னந்தண்ணீரிருக்கு மிடமும்
மாவசையமதனை யினிப்பிரிக்கு மிடமும்பருவசைய
முன்னுமலமுஞ் சேருமிடமுமலவசைய
மூறியேநீரதுசேருமிடமுஞ் சலவசையம்
சொன்னபதிக்கெட்டாத சிவமூலநாதவிந்து
சுக்கிலவசையமென்று சொல்வேனாகமப்படி
தன்னைத்தனையறிதல் தலமுமறிதலுமே
சங்கையாவதுஞான தத்துவக்கட்டளையாண்டே- வசை. 

பாடல் :- 163
கோசமயமுமைந்துங் குறியறிதலும்பேத
குணமாமன்னமயத்தால் பிராணமயமிரண்டு
வாசமுமன்னந்தனிலும் பிராணமயமுந்தோன்று
மன்னமயத்தில் பிராணமனோமயங்களுந் தோன்றும்
நிசமாமனோமயத்தில் விக்கியானமயமுந் தோன்றும்
நிருவிக்கியானமயத்தி லானந்தமயமுந் தோன்றும்
இசைவாமெண்சாணுடலிலெழு பத்தீராயிரமுமிருந்து
காத்துரட்சித்து இருவினைகளுஞ்சூழ- வசை. 

பாடல் எண்:- 164
மூலாதாரத்தில் சுவாதிஷ்டானமுமறிதல்
மூலமுமணிபூரக மனாகதம்விசுத்திகாணு
மேலாமாக்கினை யுமாதாரமு மாறுவிதமாய்விசித
மிதுவறியவிதியை வெல்லலாமோசொல்
மூலமெனுங்குய்யத்து நடுவேசுவாதிஷ்டான
முதலானதுவேலிலங்குஞ்சிவமே ஞானப்பிரகாசம்
ஞாலமுமணிபூரகம் நாபிக்கமலமது
நாடியவனாகதமு மிருதயமென்றிதுகாணும்- வசை. 

பாடல் எண்:- 165
நின்றதிதுவிசுத்திகண்டந்தனில் நினைக்கும்
நேராவாக்கினையின்மேல் மதியங்கண்டதியலாம்
மண்டலமூன்றுமறிதல் வன்னியெனு
மக்கினிமகிழுமண்டிலமிதுவகையறிவது நல்லோர்
அண்டர்கள் முனிவர்கள் போற்றுமாதித்த மண்டலமெய்தல்
அதிலுதித்திடுஞ்சந்திர வகண்டமண்டலஞ்சூழும்
கண்டமெப்படி யண்டமண்டலமறிந்தெந்தன்
கருத்தில்நினைத்தபடி கருவிதொண்ணூற்றாறும்- வசை. 

பாடல் எண்:- 166
அக்கினிமூலந்தொடங்கி நாபிக்கமலவிதழள
வாகியேயுதித்து ஆதித்தமண்டலமீறி
திக்கில்திக்கிலினிய நாபிக்கமலமெய்தல்
திசைகளெட்டதற்குந் தொட்டளவிற்றெளிந்திலகும்
தக்கபுகழுஞ்சந்திரமண்டல மிருதயத்தில்சார்ந்து
சார்வாய்த்தொடங்கி சடைமுடியடிநடு
விக்கிரமகதிர்மதி சூழக்கினிமண்டலமூன்றும்
விளங்குமதுரத்தமிழமிர்த சிந்துரத்தினம்- வசை.

பாடல் எண்:- 167
மும்மலமூன்றுமுதிக்குமுன்னமே முறைமையறி
முனையுமாணவமாய்கை மோகமதாகிய காமியம்
நிர்மலசொரூபநிலைநினைவு முக்குணஞ்சொன்னேன்
நெறியைச்சொல்லவுஞான நேசமேயறியலார்காண்
அம்மெனுநானென்றுநாவை ஆணவங்காத்திடிலுமே
யபசயமேதனக்கு யாவரறியாக்கோபம்
தம்முயிர்போந்தனைக்கொன்று தனையறியாமல் நிற்குந்
தன்புத்தித்தானறிந்தாலுந்தா னொருவரைக்கேட்கும்- வசை. 

பாடல் எண்:- 168
நம்பிமனதுவேறாய்க் காமியந்தனைக்கொன்று
நானுடலங்கண்டதுக்கெல்லா நானென்றுமாசைப்படுதல்
வம்புமிகவுஞ் செய்தல்மாதர் மங்கையர்மேலு
மையல்கொண்டுவிரகத்தால் வாதுபோராடல்பேசல்
தும்பமுன்றுதித்திடும் வகையையாவர்கள் காண
துடியாய் வாதமும்பித்தஞ்சுகந்த சேத்துமமூன்றும்
தம்பனமுள்ளவாய்வது மோடிக்கலக்கமதாய்த்
தாபமுஞ்செய்தேயக்கினி சார்ந்துமத்திபஞ்செய்தல்- வசை. 

பாடல் எண்:- 169
வாசமுள்ளபிராணத்தின் வாய்வுநெட்டிட்டுமோடி
வளருமக்கினியதைமடக்கி மத்திபஞ்செய்தல்
நேசமுடனேபித்தம் வன்னியோடனுமித்து
நிறைந்துமத்தித்துசலம் நெடியவினையுண்டாக்கும்
சேதமிகவுண்டாகுஞ் சேத்துமரோமத்துவாரம்
சிறந்துவோடியிடைபின் பிரியாச்சிநேகஞ்செய்தால்
மாதராசையிலிந்தநாடி பின்னிட்டடங்கி
மறிந்தறியாமல்தாது மடங்குமென்றாகையாலும்- வசை. 

பாடல் எண்:- 170
இச்சைமூன்றானவித மினியுரைக்கும்வகைகா
ணிதுவேபுத்திரவிச்சை லோகவிச்சையுமாகும்
பட்சமாமர்த்தவிச்சையுமிதன் கூறறியவெந்தன்
பரிபூரணவம்பிகை பாதமலர்பணிந்தேன்
அஷ்டதிக்கும்புகழு மகத்தீசருள்போற்றியபடி
யன்றிருவள் ளுவனவனிமீதிலிந்நூல்
நிஷ்டையோகத்தின் ஞான நிகழ்ந்தமூன்றுவகை
நிகழுமிச்சையதின் சுகத்தைக் கண்டவனாண்டே- வசை. 

பாடல் எண்:- 171
புத்திரன் இச்சையின் குணம் பொருள்மேலாசைப்படுதல்
புவியில்மண்ணின் பெண்ணாசை புவனமாளவுஞ்செய்தல்
அர்த்தத்தின்மேலுமதிக வாசைப்படுதல் நெஞ்ச
மறிதலோகவிச்சையின் விதியின்பயனுரைத்தல்
வெற்றிப்பாரிலுயர்ந்த காணியாட்சிவிளம்பல்
வெகுநாளுறவின்முறை தகுந்தகாதுவிளம்பல்
உற்றகாரியமுணர்ந் திச்சையத்தின்மேலாத
லுசிதப்பணிகள் செய்து விசிதம்பார்த்திடுமாதல்- வசை. 

பாடல் எண்:- 172
அர்த்தவிச்சையின்குண மதிககாமியந்தேடியன்
பதிகமுமாசை யின்பமதிலுண்டாதல்
எத்திசையினெந்த சாதியிலுமங்கையரின்னா
ரிவர்களெனு மெண்ணாமலுமிச்சித்தல்
சத்திவிரகதாபசங்கையிலு மனதாய்சார்ந்துவிகார
மெய்தல்தனைப்புகழ்ந்துணர்வாதல்
வித்தையென்னுமிச்சை வரலாறுமூன்றின்
விபரமெடுத்துரைத்தேனாண்டையே தொடுத்தேனாதவிந்தாலே- வசை. 

பாடல் எண்:- 173
குணவிசிதலட்சண மதிலுதித்தபடி
குறித்துமூன்றுவிதமாய் விரித்துச்சொல்வேன்காணும்
மனதாகியகுணராசத தாமசம்ரெண்டுமகிழுஞ்
சாத்திகத்தோடுபுகழுமூன் றுவிதமாம்
துணமாம்ராசதகுணம் வெகுளிபலபேசாமல்
துதித்திடுவோந்தமக்குக் கொடுத்திடுதலுமேன்மை
பணம்விசிதவேண்டிய பாக்கியங்களளித்தல்
பண்புபாராட்டலாதல் பலவுபகாரஞ்செய்தல்- வசை. 

பாடல் எண்:- 174
தனைச்சார்ந்தோர்கள் தமக்குத்தகைமை காத்திடும்பேசல்
தனதுதம்முயிர்போலுஞ் சார்ந்துரட்சித்திடுதல்
இனம்வேண்டிடுதல் பகையிகத்தல்பலகலைக
ளிசைந்துலகிலகங் கொண்டிருந்து வாழ்தலுமுண்மை
கனமுமினமுநலம்புகழும் வாஞ்சையொடுக்குங்
கருதுந்தாடாண்மையின் பங்கருவிலமைத்தபடி
முனையும்ராசதகுணந்தனையே யறிவிப்பதுமெனையே
புகழ்வதில்லைதுணையே நாதவிந்தருள்- வசை. 

பாடல் எண்:- 175
மிருளுந்தாமசகுணவிசித மேன்மேல்விளம்பல்
மிகுதியாதொருபழிவிகடம் வஞ்சனைசெய்தல்
அலறும்வழிபாடாக வொழித்தல்வணக்கமாற
லரண்டுவரும்வெகுளியதனை விரும்பவெனல்
பிரளல்செய்தநன்றியைப் பிரித்தலுறுதிமாறல்
பெரிதாய்விந்தைமிகவும்பேசல் கடூர்வாஞ்சை
முரளுமுகத்திடறுபகையுடனேயும் வாழ்த்தல்
முன்புரைத்தபழியேமுனைதல் கூறலுமாண்டே- வசை. 

பாடல் எண்:- 176
கொலைகள்காமியமும் பொய்குறித்தல் கோள்கள்பொல்லாங்கு
குசிதம்யாவையும்புகழ் குரோதங்கொடூர மெய்தல்
அலைதல்காமத்தினிவை குரோதமதிசங்கை
யசத்தியநாள்தோறுமெய்தலறித லாண்டையேகேளீர்
பலபலவும்கடிசிலதுதொழில் விகற்பம்பகர்தல்
பாவியெனவுஞ் ஜெகதலமுமதியா
கலகப்பிரியனெனுமுலகமாத்தியஞ் சொல்லுங்
கருவில்தாமசகுண காட்சியிதாண்டையே- வசை. 

பாடல் எண்:- 177
அதிதசத்துவ குணமறிதலனேகவித
மனைத்தும்படைத்தகர்த்தன் மனதுளிருப்பதெனில்
விசித்தமதங்கடிவு வாய்மைதயவொடுக்க
மிகுத்தசாந்தகமைதன நினைவுதகைந்திடுதல்
உதித்தவன்புபெருமைபுகழ்தல் குணவிசித
முரிமைமறையினிறை தருமமானமியக்கல்
கதித்தநல்லோர்க்கீதல் அறிஞர்களைவாழ்வித்தல்
கருதுமிறைவனடிபணிதல் நலமறிதல்- வசை. 

பாடல் எண்:- 178
மகத்துக்களின்மனது மகிழ்ச்சிவருவதெனில்
மலர்க்கமலபதத்தில்வணக்கஞ் செய்திடுதலால்
அகற்றும்பழியகற்றல்விளையும் பிணியொழித்த
லதிதநல்லோர் பெரியோரவர்களுக்குப் பொருளுமீதல்
இகத்திலறமுந்தேடலுறவின் முறையதீத
மினமுஞ்சுற்றத்தாரையுங்கனமுங் காத்துரக்ஷித்தல்
மிகுத்தல்பசியகற்றலதிதிபரதேசிகள்
விரும்புமன்னபலாதிவிளங்குமேவுமீ தாண்டே- வசை. 

பாடல் எண்:- 179
ஆத்திரைவாசங்கள் செய்தலருமறையோரைக்காண
லருள்தேவதைகளுக்குமாகு பலிகொடுத்தல்
தேத்தியஞானப்பிரகாசந் தெளிந்தவர்கள்தமக்கு
சிந்தையையகற்றி யுபசாரஞ்செய்திடுதலால்
போற்றிடும்புண்ணியஞ்செய்தலின் பசுகந்தமலர்
பூசுரர் தமக்குநலம்புகழும் பூசையளித்தல்
வீற்றிடுஞ்சாத்தியகுணவிசித லட்சணங்கண்டு
விளங்குமூன்றின்விபரம் விதித்தவாறதுஆண்டே- வசை. 

பாடல் எண்:- 180
நாதவிந்ததினாலே நரகசொர்க்கமிரண்டும்
நவிலுநல்வினையுந்தீவினையு நாடியவாறில்
வேதங்களுமுதித்தசாரம் விண்ணுமண்ணாகில்
விளங்குநல்வினையும்வந்துதித்தல் புண்ணியஞ்செய்தல்
ஓதுந்தீவினையுஞ்செய்திடும் பாவங்களுமெய்த
லுலகமாதிதமிவ்வாறுடலெடுத் துவமையால்
மாதுவம்பிகையெந்தன் மனதுக்குளுணர்வித்த
வரலாறறிந்திந்நூல்வசனித்தே னாண்டையே- வசை. 

பாடல் எண்:- 181
ராகமிதுவெட்டான நடத்தையிவ்வாறறிதல்
நலத்தகாமக் குரோதலோபமோகமதாகி
அகந்தனிலுதித்த மதமாச்சரியத்தோடு
மமைத்திடலுமிடும்பையறிதல் வேட்கையிதுகாண்
பாகமதாகியதே கஞ்சரீரங்களுதிக்கும்
பலனேயின்னதினிதும்பகர்ந்து சொலுவேன்காணும்
தேசக்கட்டளையிவ்வாறுசெய்கை செந்துகட்கெல்லாந்தெளிந்து 
சீர்பிசகாமல்திருத்த ஆண்டையேகேளீர்- வசை. 

பாடல் எண்:- 182
மாதரைக்கண்டாசைகொண்டிடுங்காண் விரகதாப
மையல்கொண்டதிதகாமம்வருதல் மன்மதபாணம்
பேதபேதமில்லாமல்பிதற்றும் வணக்கமில்லா
பிணக்குமதிதகுரோதந் தனக்குந்தனைத் தெரியா
ஓதுமனதிலொன்றைநினைத்தபடி முடித்த
லொருபிடியாய்ப்பிடித்தலுறுதி விடாதுலோபம்
ஏதுவாகிலும்பெருமையின் பசுகாதிசுக
மெய்துமனமகிழ்ச்சியிதுவே மோகாதியோகம்- வசை. 

பாடல் எண்:- 183
சூதுமனதிலெண்ணல்துடியாக் கோபமுரைத்தல்
தொடுத்திடுதலும்பழிதுன்பமெய்திடுமதம்
யாதொருகாரியங்களிலதுவிச்சை மனதெய்தலானந்தம்
பெருகியின்பமடையு மாச்சரியங்காண்
வாதுபோராடலொருசொல்லாயிரம் விரிவாய்வனல்
கொண்டாங்காரமெய்தல் வருமிடும்பையுமாதல்
வேதுவித்வேஷணம்பலவும் பலவுமெண்ணல்மெய்
யாங்காரக்கொள்ளல்வேறு செய்தலும்வேட்கை- வசை. 

பாடல் எண்:- 184
ஆகமத்திலுதித்தராகமத்தின் பரீட்சை
யதிதகுணலட்சணம்விதி தவறாமலெட்டும்
பாகமதாயுரைத்தேன் பகவான்சொற்படிபாரில்
பலகலையுந்தெளிந்து பழம்பொருளைக்கண்டு
ஏகவஸ்துவொன்றாலேயெடுத்தேன் தத்துவநெறி
யெறும்புகடையாயானை யெண்பத்துநான்குமுதல்
தோகைமாதுவம்பிகைசொல்லுஞ்சூட்ச மறிந்தேன்
சுருதிமுடிவைக்கண்டுதொடுத்தேன் ஞானவெட்டியான்- வசை. 

பாடல் எண்:- 185
அவத்தையைந்துமொவ்வொன்றாய் விரித்துசொல்லுவன்காணு
மாக்கிரசாக்கிரசொப்பனஞ் சுழுத்தியொடுதுரியம்
பவத்தைப்பவனாதீதத்துரியாதீதத் தோடைந்தும்படைத்தா
ரெண்சாணுடலிலெடுத்தார் ஜெகத்துள்ளோர்க்கும்
இவத்தையெனுஞ் செனனமிதிலுதித்ததுகாணு
மெவரெவருக்குமிதுவே யேகவஸ்துவிதாகும்
தவத்தில்மிகுத்தவமெய்ஞ்ஞான நெடுதத்துவமறிந்து
தன்னைத்தான்றிந்திடுமே சொர்க்கம்- வசை. 

பாடல் எண்:- 186
ஆக்கிரமுஞ்சாக்கிரம்நிற்கு மதுவும்லலாட ஸ்தானத்திலறிதல்
நெற்றிநேர்மையமசைதல் காயத்தோடென்னில்
வாக்கிற்சொப்பனத்திற்கும் வாழ்தல்கண்டஸ்தானத்தில்
மருவியகருவிகளமைத்த வாறாண்டையே
விக்கிரமச்சுழியின் முனையிருதயகமலந்தனில்
விளங்குந்தானமறிதல் இன்பமிதுவாறுகாணும்
நிக்கிரகதுரியஸ்தான நேருமேநாபிக்கமலம்
நிரந்தரமாயிருத்தல் நிலைக்கும்சரீரமென்னில்

பாடல் எண்:- 187
உத்தமதுரியாதீத மூலாதாஸ்தானத்தி
லுறுதிபெற்றிலகு மிவ்விதத்திலுதித்தவாறு
தத்துவந்தொண்ணூற்றாறுஞ் சரீரந்தனிலுதிக்குந்
தகைமையறிந்துவந்தென் தாய்சொல்லயானறிந்து
வித்திலுதித்தவாறும் விளங்குங்கருவின்வாறு
மிகுத்த தத்துவந்தொண்ணூற்றாறை விதிக்கும்வாறும்
கர்த்தனருளாலுடல் கருதரித்தநேர்மையுங்
கருவிகரணாதிகள்கண்டு ஆய்ந்தவனாண்டே- வசை. 

பாடல் எண்:- 188
சித்தாதிகள்மகிழும்பெரியோர்களும் புகழுஞ்
ஜெயம்பெறவேயுலகில் செந்துக்களெல்லாந்தழைக்க
உத்தமயோகிகளெந்தனுறுதி மிகவுங்கண்டு
யோகவான் திருவள்ளுவனுலகி லவனேஞானி
வித்துவானெனமகிழ்ந்து வேதவேதாந்தசாரம்
விளங்கினவர்கள மிர்தவிசித ரத்னபீடம்
உத்தமரெனுமுனிவர் சிவசிங்காதனமீந்து
வுரையறிந்துமொழிந்த வுவமையீதெனுமாண்டே- வசை. 

பாடல் எண்:- 189
கர்த்தன்செய்கைவிதிகாண் கருவிலமைத்தபடி
காரணசற்குருவாக்கியங் கண்டல்லோதெளியும்
பெற்றபேர்களிப்படிவித்தின் சம்பிரதாயங்கள்
பேசும்பேசினாலென்ன பிராணாயமறியலாமோ
தத்துவந்தொண்ணூற்றாறுந் தானேநீறுநீறாக்கி
சாதித்தால்காயாதிகற்பஞ் சாயுச்சியமறியலாகும்
நித்தம்நித்தம்வாசிகொண்டுய்த்து வூதினாலல்லோ
செத்தபிணமெழுந்து சத்துஞ்சித்தறியலாம்- வசை. 

( விருத்தம் )
பாடல் எண்:- 190
விரிவான துருவமெனு மூல வீட்டில்
வேதமதுக் கெட்டாத ரூப மாகிக்
கருவாகித் தெவிட்டாத கனியு மாகிக்
கதிராகி மதியாகிக் காற்று மாகி
உருவாகி யுடலாகி யுயிரு மாகி
யொளியாகி யலகையெனு முடலுக் குள்ளே
மருவாகி யருள்ஞான சொரூபி யாகி
யங்கமதி லிங்கமதா யமைத்தே னாண்டே. 

பாடல் எண்:- 191
மறைகடந்து வெளிதாண்டிச் சுழிமுனைக் குள்ளே
மறைநான்கு மறியாத மதியைக் காணக்
கரைகடந்து சுழிக்குநடு வணையி னுள்ளே
கதிரிலகுந் திருநாட்டுக் கமல வீட்டில்
நிறையறிந்த கதலியடி பானுக் குள்ளே
நிலையான செங்கநதி கரையின் மேலும்
திரைமேவுந் திருநடன வீட்டுக் குள்ளே
சிவந்தெழுந்து கொழுந்தாகி வளர்ந்த தாண்டே. 

பாடல் எண்:- 192
முத்துதிர்ந்து குலைசாயு மூல நாடு
முனையறிந்து கலைபாயு முவண நாடு
சித்திருந்து விளையாடுந் தெய்வ நாடு
திவ்யரத்ன பொக்கிஷமாஞ் செல்வ நாடு
சத்திசிவ மிருந்துதிரு நடனஞ் செய்யுஞ்
சதாசிவனுங் கொலுவிருந்து வாழ்ந்த நாடு
அத்திபுர மிலகுகின்ற கருவூர் நாட்டி
லறைவீட்டில் குடியிருந்து வமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 193
சாதிகுலம் வகுத்திலகும் விந்து நாடு
தானுதித்துப் பத்துதிங்கள் வளர்ந்த நாடு
நீதிமறை சாஸ்திரமாம் வேத நாடு
நெறிபலவுஞ் சகலகலை யுதித்த நாடு
சோதிமதி யாகிநின்று துலங்கு நாடு
சுழிநாடு வளநாடு தொண்டைநாடு
பாதிமதி தனையணிந்த பரம நாட்டில்
பதியெனவே குடியாக வாழ்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 194
தேனருவி யமிர்தநதிக் கசிந்து பாயுந்
தேவர்சித்தர் முனிவர்துதித் திலகு நாடு
ஞானிகள்வந் துதித்திலகுங் கருவூர் நாடு
நல்வினையுந் தீவினையு மமைந்த நாடு
தானவனாய் நின் றிலங்கும் ரூப நாடு
சற்குருவுஞ் சந்நிதியுந் தழைத்த நாடு
வானதிகொண் டறுசுவையை யொளித்த நாடு
வானவர்கள் மகிழுமணி மந்திர நாடே. 

பாடல் எண்:- 195
அண்டபிண்டமிரண்டுமுற் றிலகு நாடு
அருணனெனுஞ் சோமனவ தரித்த நாடு
மண்டலமூன் றுதிக்குமருள் கொந்தி நாடு
மாமறையு மாகமங்கள் வாழு நாடு
கண்டனந்த கருவூரு நாட்டுக்குள்ளே
கனகரத்ன மாதுவொளி வாகி நின்ற
வென்றதிரு வம்பிகைப்பெண் விளங்கும் வீட்டில்
மிகுந்தவறைக் குள்ளிருந்து வமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 196
அந்தமுள்ள நவசித்திரக் கூடந் தன்னி
லகண்டமெனுந் தீபவொளி வாகு நாடு
சந்தனமுங் குங்குமமும் விளைந்த நாடு
சர்வவுயி ரெடுத்துடலா யமைத்த நாடு
செந்தியொளி சிவனுமையும் பிரகா சிக்குஞ்
சிறுபிறையு மயிர்ப்பாலந் தேவ நாடு
வெந்தணலு மெழுந்துதிரு நடன மேவு
மேல்வீட்டி னின் றுவுரு வானே னாண்டே. 

பாடல் எண்:- 197
உருகருவாய் நின்றிலங்கு முந்தி நாடு
வுத்தமர்கள் சித்தர்தவம் பெற்ற நாடு
மருநாடு வானாடு மலரி னாடு
மதமுடனே மாச்சரிய மான நாடு
சிறுநாடு கருநாடு செந்தி நாடு
செங்கதிர் பொங்குமுயல் சிறந்த நாடு
அருநாடு குருநாடு வகண்ட நாட்டி
லருள்பெறவே யுருவாகி யறிந்தே னாண்டே. 

பாடல் எண்:- 198
கால்வாங்கி வட்டமிட்டு மேலே நின்று
கமலதிரு வாசலின்கீழ்க் கருதி யானும்
மேல்வாங்கி யுயருகின்ற வன்னி யோடே
வெளிகடந்து நாற்சதுர வீட்டுக்குள்ளே
சேல்வாங்கி நூலிழைத்துப் பாவு மோட்டிச்
சித்திரமாய்க் குழிதனிலே நெசவு மாக்கித்
தேல்வாங்கு விழிமட வார்க ளுள்ளே
சித்திரமாயுடலெடுத்து வளர்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 199
வசையமைந்து நின்றவர லாறுஞ் சொன்னேன்
வசனித்தே னவரவர்கள் வகையுஞ் சொன்னேன்
விசயமெனு மூன்றுக்குள் விரியுஞ் சொன்னேன்
விபரமதா யவர்கள் செய்கை விளக்கஞ் சொன்னேன்
அசைவில்லா மண்டல மூன்றருளுஞ் சொன்னேன்
அறிவுடைய கோசமைந்து மதீதஞ் சொன்னேன்
சதவாய்வுந் தாதுநின்ற தலமுஞ் சொன்னேன்
சரீரத்தி னின்றதெல்லாஞ் சாற்றி னேனே. 

பாடல் எண்:- 200
அஷ்டகுண ராகமெட்டுங் கூறுஞ் சொன்னே
னவர்கள்செய்கை விபரமறிந் தனந்தஞ் சொன்னேன்
நஷ்டமில்லா நல்வினைதீ வினையுஞ் சொன்னேன்
நற்குணமுந் துர்க்குணமு நயந்து சொன்னேன்
கஷ்டமெனு மும்மலத்தின் கருத்துஞ் சொன்னேன்
கருவறியா மூடர்குணக் காட்சி சொன்னேன்
தீட்சையெனு மூன்றெழுத்தின் திறமுஞ் சொன்னேன்
திருமுதலாம் வீட்டில்குடி யிருந்தே னாண்டே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900