திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1- 100

திருவள்ளவ நாயனார் அருளிச்செய்த, 
ஞானவெட்டியான் - 1500,
மூலம் - பாயிரம் - காப்பு

(விருத்தம்)
பாடல் எண்:- 1
அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுர தமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழுமெந்தன் குருவைப் போற்றி
யிடைகலையின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்தவிநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணையைப் போற்றி போற்றி. 

பாடல் எண்:- 2
குகனருளின் கிருபையினா லிந்நூல் ஞானங்
கூர்ந்துநவ சித்தர்மொழி குறித்து ஆய்ந்து
புகழமிர்தச் செந்தமிழா யிரததைந் நூறு
புகலவும்பூ தலங்களெல்லாஞ் செழித்து வாழ்க
அகமகிழு மம்பிகை பெண் ணருளி னாலே
யவனிதனில் ஞானவெட்டி யருள யானும்
நிகழ்திருவள் ளுவநாய னுரைத்த வேத
நிரஞ்சனமா நிலவு பொழி ரவிகாப் பாமே. 

பாடல் எண்:- 3
நிலவுபொழி இரவிமதி யருளினாலே
நின் றிலங்கு நாதவிந்தி னிருவி காப்பு
வலமிடமாய்ச் சூழ்ந்துவருங் கார சாரம்
வழலையெனு மாமதுர வாணி காப்பு
உலகமதிற் கடல்சூழ்ந்த புவனை வாலை
யோங்கார மூலகண பதியே காப்பு
தவமதித சனகாதி ரிஷிகள் பாதஞ் 
சடாதார சூக்ஷசடா தாரங் காப்பாம். 

பாடல் எண்:-4
சடாதார மதிலிலகுந் தவள வாணி
சரஸ்வதியும் பிரமன்பத மாலின் பாதம்
நீடாழி லட்சுமிப்பெண் ணருளின் பாதம்
நிரஞ்சனுருத் திரன்பாத நேமி பாதங்
கடாகமெல்லா நிறைந்துநின்ற மயேசன் பாதங்
கருணையேஸ் வரியினிரு கமல பாதந்
தடாதசதா சிவத்தின்மனோன் மணியின் பாதஞ்
சாம்பசிவன் பொற்பாதஞ் சந்ததமுங் காப்போம். 

பாடல் எண்:- 5
பாதமடி மூலநடு விந்தின் மூலம்
பராபரையின் வீடுபரப் பிரம வீடு
ஓதுசந்திர புஷ்கரணி மாலின் வீடு
ஓரெழுத்தாய் நின்றிலங்கும் ருத்திரன் வீடு
நாதவிந்தின் மேருமூடி சுடரின் வீடு
நாதாந்த மயேஸ்வரத்தின் வாயுவின் வீடு
சூதமுனி யீசனுற வாடும் வீடு
சோதியெனு மாக்கினையின் காப்புத் தானே. 

பாடல் எண்:- 6
ஆக்கினைக்குள் சத்தம்பிரு திவீ பீட
மப்புவின் வீடுவன்னி வாயுவின் வீடு
ஏக்கமில்லா வாகாச மேரு வீடு
இரவிமதி சுடரிலகு மின்ப வீடு
பார்க்கபணா முடிநடுவில் நடனஞ் செய்யும்
பராசக்தி சிவசிங்கா தனத்தின் வீடு
பூக்குமலர் வாசியிருந் துலவும் வீடு
புகழ்பெரிய வைம்பூதம் புலன்காப் பாமே. 

பாடல் எண்:- 7
பூதாதி யிருந்துவிளை யாடு பீடம்
பொற்கமல மாயிரத்தெட் டிதழின் பீடம்
நாதாக்கள் திருநடன மௌன பீடம்
நந்தியொளி விந்துசெக நாத பீடம்
வேதாந்த பூரணமெய் ஞான பீடம்
வித்தார வாகமத்துக் கதீத மான
ஆதார மூலவன்னி யமர்ந்த பீட
மாநந்த நடனசபை யைந்துங் காப்போம். 

பாடல் எண்:- 8
ஐந்துருவா யுடலெடுத்த வாறின் கூறு
மசடில்லாத் தேகமெண் சா ணாத்துமக் கூறும்
விந்துதித்துச் சடமெடுத்த நாதக் கூறும்
விற்பனமாய்ச் சடமுதித்த காயக் கூறும்
தந்திரமாய் நீர்க்குமிழி யான கூறுந்
தத்துவந்தொண் ணூற்றாறு சைலக் கூறும்
இந்திரியசுக் கிலசுரோணி தத்தின் கூறு
மியம்புதற்குத் தசநாடி யியல்பு காப்போம். 

பாடல் எண்:- 9
தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்
ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்
அசைவதிருந் தாக்கையசை யாதவாறு
மடிநடுவு முடிவான கற்ப வாறும்
பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
பஞ்சபட்சி யஞ்சுநிலைத் திருந்த வாறும்
இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு
மிராஜயோ கத்தினருள் காப்புத் தானே. 

பாடல் எண்:- 10
யோகாதி யோகநிலைத் திருந்த பேர்க்கு
முற்பனமாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்
வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
வெண்சாரை கருநெல்லி விதித்த போக்கும்
போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூநீர்ப் போக்கும்
பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும் 
ஆகாத மனிதர்களை யகற்றும் போக்கு
மசடில்லா மாதுரச குளிகை காப்போம். 

பாடல் எண்:- 11
குளிகைரச மாதுகற்பக் குகையின் மூலங்
குருபூசை குண்டலியின் வாசி மூலம்
வழியறியு மவிழ்தமொடு நோய்கள் தீர
வழலைமுப்பு வைத்தியமுங் கிருத லேகியம்
விழிமடவா ளம்பிகைப்பெண் ணருளி னாலே
விவேகமணி மாத்திரையும் பஸ்பந் தானும் 
தெளிவுபெறுஞ் சுண்ணமொடு செந்தூரங்கள்
திராவகமுஞ் செயநீருஞ் சென்னி காப்போம். 

பாடல் எண்:- 12
சென்னிவளர் சிவசிங்கா தனத்தின் மேலுஞ்
சிதம்பரமா நடனசபை சித்ர கூடம்
வன்னிமதிப் பிரகாச கமல பீட
மதுரவின்ப வமிர்தசர் வாணிபீடம்
உன்னிதமாய்க் கன்னியெனக் கமிர்த மூட்டி 
யுயிருமுடல் நிலைத்திடவு பாயஞ்சொன்னாள் 
இன்னிமித்தம் பொருத்தமெனக் களித்தஞ் ஞான
விருளகற்றிப் பானரச மீந்தாள் காப்போம். 

பாடல் எண்:- 13 (வேறு)
இருள்தனை யகற்றுஞ் சோதி யிகபர வெளியே போற்றி
அருள்தரு ஞான தேசி யகத்தீச ரருளினாலே
திருவுரு தவள வாணி சிரோன்மணிக் கமலந் தன்னில்
அமலர் பொழியு ஞான மமிர்தசெந் தமிழைச் சொல்வோம். 

பாடல் எண்:- 14 (வேறு)
நந்தியொளிப் பிரகாச வட்டத் துள்ளே
நற்கமல மாயிரத்தெட் டிதழைப் போற்றி
உந்திநிலை யறிந்ததிரு மூலர் பாத
முவமையுள்ள காலாங்கி போகர் பாதஞ்
சிந்தையுள்ள மகிழ்ந்தசட்டை முனியின் பாதஞ்
சிவமயங் கண்டகோ ரக்கர் பாதம்
அந்திபக லறிந்தவிடைக் காடர் பாத
மருளுஞ்சக நாதர்பத மர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 15
மதியிருந்து குமுறிவிளை யாடும் வீடு
மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிலிருந்து விளையாடு மூல வீடு
பத்திதருஞ் சித்தரும் பரம வீடு
துதிபெறவு நாற்சதுர மேலு நின்று
துலங்குமெழிற் கணபதிவல் லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாத
நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 16
திருவிருந்து கனலெழுந்து ஆடும் வீடு
சிறந்தசக்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சுதமிழ் நாவில் மேவு
மகிழ்ந்தமத கரியினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டியப் பால்
கண்குளிர நின்றுநடு வனையி லேறி
மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம்
வணங்கியிந்த நூல்வகையைப் புகழ்வே னாண்டே. 

பாடல் எண்:-17
தந்தைதாய் கருவதனி லுதித்த வாறுந்
தாரணியில் கருத்திரண்டு பிறந்த வாறும்
அந்தமுடன் ஜாதிகுலம் வகுத்த வாறு
மவனிதனிற் பெரியோர்க ளறிந்த வாறும் 
சிந்தைதனி லஞ்செழுத்தைப் போற்றி செய்து 
செப்புகிறே னிந்நூலை யிகழ வேண்டாம்
தந்திரமா முக்கோணந் தன்னில் நின்ற
தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 18
கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
கனகரத்ன மிலகுதிற மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிஷ் டானம்
வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன்சரஸ் வதியின் பாதம்
நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
மோரெழுத்தா நாதவிந்த மைந்த வாறே.  

பாடல் எண்:- 19
சொல்லரிது மந்திர த்துக் கெட்டா வீடு
ஜோதிமணி பூரகத்தி லமர்ந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
விளைந்தவித ழீரைஞ்சு பத்து மேலும் 
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
துதித்திந்நூல் விளம்புகிறே னாண்டே கேளீர். 

பாடல் எண்:- 20
வட்டமிட்ட சட்கோணப் பாரின் மேலும்
வளர்ந்தவித வீராறா மங்கு லத்தில்
திட்டமிட்டவ னாகதத்தில் வீற்றி ருந்த
சிறந்தருளும் ருத்திரனும் ருத்திரியைப் போற்றி
வெட்டவெளி வேதமறை நான்கு மோதும்
வேதமெல்லாந் திருநீறா யான வாறும் 
அஷ்டதிசை யறிந்துணர்ந்த பெரியோர் பாத
மைம்பத்தோ ரட்சரமுங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 21
ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி
யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம்
வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும்
விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம்
பேறுபெற்ற மயேசன்மயேஸ் வரியு மங்கே
பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப்
பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற
பழம்பொருளைப் பாடுகின்றே னாண்டே கேளே. 

பாடல் எண்:- 22
காலைவட்ட மாலைவட்ட மாகி நின்ற
கதிர்மனையிற் சுருதிமுனை யாடுஞ் சோதி
நீலவட்டங் கொண்டெழுந்து கலைபெண் ணான்கும்
நின்றிலங்கு மாக்கினையி லிதழு மூன்று
ஞாலமதி லாதியந்த ரூப மான
நற்கமல மாயிரத்தெட் டிதழின் மேலும்
ஆலவிட முண்டசதா சிவனைப் போற்றி
யம்பிகையின் கமலபத மர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 23
திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்
சிறந்தசா காக்காலும் வேகாத் தலையுந் தாண்டி
மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி
மதனகலி யானதிரு வல்லி மாது
வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு
மாதாளம்பூ வடிவுமனோன் மணியைப் போற்றிக் 
கரைகடந்து பறையனென்று தள்ளி வைத்த
கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே. 

பாடல் எண்:- 24
அந்தமுள்ள குருவினடிக் கமலம் போற்றி
யன்னைதந்தை யிருவருந்தா னனுபோ கிக்கத்
தந்திரமா யிரவுதனி லணையும் போது
தாதுவிந்து நாதமது மெழுந்தபோதில்
எந்தவுயிர் வேதமறை யறிந்த தாண்டே
யிடும்பரெல்லா நீசனென்று தள்ளி னார்கள்
வத்தவழி போனவழி யிரண்டுஞ் சொல்வேன் 
வகையறியா மாந்தர்களே யறிந்து கொள்வீர். 

பாடல் எண்:- 25
பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி
பெருமையுள்ள க்ஷத்திரியராய் பிறந்தார் கோடி
திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி
தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி
உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி
யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள்
அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே
யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே. 

பாடல் எண்:- 26
எங்கள்குலஞ் சுக்கிலத்தா லெடுத்த வாறு
மெண்ணரிய சுரோணிதத்தால் வளர்ந்த வாறு
மங்காத வஞ்செழுத்தால் வந்த வாறும்
வகையுடனே யங்குலமோ தொண்ணூற் றாறு 
சிங்கார மானமனம் புத்தி சித்தம்
செங்கனலாற் கொண்டெழுந்த வாங்கா ரந்தான்
கங்கையணி சங்கரனா ரம்பி கைப்பெண்
கருத்தாலே யெடுத்திந்தக் காய மாண்டே. 

பாடல் எண்:- 27
கருதிரண்டு காயம தான வாறுங்
கருவியதி லேவளர்ந்து வெழுந்த வாறும்
உருதிரண்டு கால்கைகள் வகுத்த வாறு
முடம்புக்குள் சதைநிணங்கள் தரித்த வாறும்
திருவிருந்த மண்டபங்கள் சமைந்த வாறும்
சிறுபிள்ளை யாய்ப்புவியில் பிறந்த வாறும்
அருபியெனு நாதாக்கள் பாதம் போற்றி
யாதியிலே சாதிகுல முரைப்பே னாண்டே.

பாயிரம் முற்றிற்று. 

நூல் (தரு)
தந்தன தனதன னாதன தனதந்தனா தனாதனா - தன்னான. 

பாடல் எண்:- 28
மூலமு முதலறிந்து- சிவசிவ
முத்திதருஞ் சுழிமுனையறிந்து
பாவமுந் தாண்டியப்பால்- பரிபூரண
பானுமதியமர்ந்த பானமுண்டு
சீலமு நிறைந்துநின்ற- மூலமணி
திருமாலின்பொற்கமலச் செயலறிந்து
ஞாலமுங் கடந்துநின்ற- வுயர்குல
ஞானவெட்டி யானான்காணும். --தந். 

பாடல் எண்:- 29
நடுவணை தனிலேறி- சிவசிவ
நாடியகுண்டலி வட்டத்துள்ளே
அடிநடு முடியறிந்து- சுடரதில்
அனுதினம்வாசிகொண் டமிர்தமுண்டு
படியறிந் திசைநாதம்- சிவசிவ
பத்துமொரு மித்துவருபழக்கமதால்
வடிவுள்ளஜெகஜோதி- கமலமலர்
வந்துபணிந்தவ னான்காணும். --தந். 

பாடல் எண்:- 30
வீம்புகள் பேசுகிறீர்- சிவசிவ
வேடிக்கையா யின்பம்விளம்புகிறீர்
வேம்புகரும்பதுவாமோ- மகத்துகளின்
விற்பனத்தைக்கண்டறியா விழலென்கிறீர்
சாம்பசிவமூர்த்தியர்க்கே பட்டமது- ஸ்தாபித்த
சாம்புவனான்காணும்
தீம்புகளறவீசி- தெளிந்தவர்கள்
சீர்பாதங்கண்டவர்போல் தெரிசிக்கிறீர். --தந். 

பாடல் எண்:- 31
சபைதனிலுள்ளவர்கள்- ஆண்டையேகேள்
சாதியிலீன்னெனச் சாற்றுகிறீர்
உறுபயமில்லாமலும்- அகஞ்சுத்தி
யுடலறியாச்செபங்களோதுகிறீர்
வபையமதாகியநூல்கள்- வீண்பிலுக்கர்
வாசியறியாமலுமே மயங்குகிறீர்
ஔவையார்குலத்தில்வந்த வள்ளுவனெனும்
ஆதிபீடமு நான்காணும். --தந். 

பாடல் எண்:- 32
சிக்கிய நூல்பிணைப்பார்- சிவசிவ
சேணியசாதியி லுள்ளபடி
புக்கியநூலிழைக்கும்- பூதங்களில்
புரிந்தநூலிழைகளைப் பூட்டிவைப்பார்
தக்கியபறையெனவும்- சிவசிவ
சாதிகளில்முதல் சாதியெனு
முக்கிய நூல்பிணைக்கும்- மெய்ஞ்ஞான
மூர்த்திசாம்புவ னான்காணும். --தந். 

பாடல் எண்:- 33
அறுந்ததுநூல்பிணைக்கும்- சிவசிவ
அச்செனும்பாவதுகண்ட மட்டும்
சிறந்ததுநூல்பிணைக்கும்- சிவசிவ
சித்திரச்சாம்புவ னான்காணும்
பரந்தபஞ்சதுநூலா- இழைபிசகா
பறைநூலது பஞ்சவர்ணமதாய்
நிரந்தரவிசிதமெனும்- சிவசிவ
நிஷ்டைதனில்மிகுந்த நிர்மலன் நான். --தந். 

பாடல் எண்:- 34
ஆதியந்தமுங்கடந்து- ஆதாரமூலம்
அதுகடந்த பரவெளிதாண்டி
நீதியின் மறைவிளங்கும்- முப்பாழ்கடந்து
நின்றபரிபூரணத்தின் நிலைகடந்து
ஓதுமறைவேதமுந்தாண்டி- பிரகாசவொளி
ஓங்காரரீங்காசனத்தி லுறுதியதாய்ச்
சோதியின் நிலையில்நின்று- சுழிமுனையில்
துதித்துத்தொழுத சாம்புவன்காணும். --தந். 

பாடல் எண்:- 35
பூணநூல்பிறந்ததெங்கே- சிவசிவ
பின்குடுமையானதுவு மானதெங்கே
வானோர்கள் துதிப்பதெங்கே- மணிமந்திர
வாக்கியசெபதபங்கள் வாழ்க்கையெங்கே
கோனருள்புரிவதெங்கே- யாகசாலைக்
குருக்களாசாரியென்றுங் கூறுவதெங்கே
வீனிலேயோதுகின்ற- வேதியர்களே
வேதம்பிறந்திடமுஞ் சொல்வீர்காண். --தந். 

பாடல் எண்:- 36
ஒளிவெளிமதிதாண்டி- சிவசிவ
ஒன்பதுவாசலுங் கட்டறுத்து
தெளியவும்பொறிபுலனும்- சிக்கறுத்துச்
சிந்தையகற்றி மனதொருப்படுத்தி
பொழியவுமமிர்தரசம்- பொசிக்கவின்பம்
பூசிக்கப்பூசிக்க ஞானம்பூரணமதாய்ச்
சுழிதனிலெழுந்ததொரு- வாசியெனும்
சோதியைக்கண்டவனும் நான்காணும். --தந். 

பாடல் எண்:- 37
செத்ததோர்மாடெடுப்போம்- சிவசிவ
சுடுகாடனுதினங் காத்திருப்போம்
நித்தமுங்கடவுள்தனை- ரவியின்மதி
நேசமுடனேயுறுதி வாசஞ்செய்வோம்
சுத்தவீரசைவமுடன்- வாசிவாவெனும்
தோத்திரஞ்செய்தே பொசித்துக்காத்திருப்போம்
கர்த்தனையந்திசந்தி- உச்சமதிலும்
கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர். --தந்

பாடல் எண்:- 38
கட்டையுமடுக்கிக்கொள்வோம்- பிணமதற்கு
காற்பணமுழந்துண்டு வாங்கிக்கொள்வோம்
அட்டவிதப்பரீட்சைகளும்- ஆண்டைகேளீர்
அங்கசுத்திகளுஞ்செய்ய அடைவெடுப்போம்
சுட்டதொருஅஸ்திகளுமே- சேதம்வராமல்
துரிதமாய்ப்பொறுக்கியே சுட்டிடுவோம்
நட்டனை நடைநடப்போம்- ஆதியருள்
நாதனையனுதினமும் போற்றிசெய்வோம். --தந். 

பாடல் எண்:- 39
நால்வகையோனிதனில்- பிறந்துதித்த
நால்வேத ஞானமும்வந்துதித்ததுகாண்
கோலமிதையறியாமல்- உலகருமே
குருடர்கள் வேறுசெய்தினம்பிரிப்பார்
மாலப்பறையனென்றே- உலகர்கூடி
வாய்பிதற்றிவழக்குவா தாடுவர்காண்
பாலரறியாமலென்னைப்- பழித்துப்
பகடித்தனராண்டே கேளீர். --தந்.

பாடல் எண்:- 40
பூணநூல் தரித்துக்கொள்வோம்- சிவசிவ
பொறியுமைம்புலனையுந் தொழுதுகொள்வோம்
வேணவிருதுகளும்- விகிதமாய்
வெண்குடை வெண்சாமரமும் பிடித்துக்கொள்வோம்
வானவர்முனிவர்தொழும்- பொன்விசிறி
மரகதகுண்டலத்தின் கவசங்களும்
ஞானப்பிர காசவொளி- திவ்வியரச
நாதவிந்தர்ச்சனைகளில் நாம்துதிப்போம். --தந். 

பாடல் எண்:- 41
சாதியிலுயர்ந்தவர்காண்- நவரத்ன
சங்கப்பலகையின் மேலிருந்தவன்காண்
வேதியர்சாஸ்திரியர்- துதிசெய்யும்
விருதுபெற்றிடும் வீரசாம்புவன்காண்
பாதிமதிசடையணிந்தோன்- சிரசின்வளர்
பங்கயக்கங்கை யமிர்தச்செங்கைநதியில்
சுருதியின் பொற்கமலம்- மதிரவியின்
சூட்டிடுஞ்சாம்புவ னென்போன்காணும். --தந். 

பாடல் எண்:- 42
அந்தணர்வேதியர்கள்- என்குலத்தை
அசட்டுப்பறைய னென்றுதள்ளினர்காண்
சந்தியுஞ்சடங்கறுத்து- வள்ளுவனெனைச் 
சாம்பவமூர்த்தியென்றே தான்தொழுதார்
விந்துவுநாதமுங்கூடி- எங்கெங்குமேவும்
எண்பத்துனான் குயிர்க்குமேலதிகமாம்
வத்தவழிதனையறியார்- பிரமகுல
வங்கிஷவானென்றுமவர் போற்றிசெய்வார். --தந்

பாடல் எண்:- 43
வேதமுநான்காணும்- சிவசிவ
வேதாந்தசாரமு நான்காணும்
மாதவமுனிவர்க்கெல்லாம்- உயர்கின்ற
வள்ளுவசாம்புவ னான்காணும்
பேதாபேதங்களறிய- என்னூல்வகையில்
பிரட்டுருட்டுகளும் பிரித்துரைப்போம்
ஆதாரமூலமெல்லாம்- அசடில்லாமல்
அவனிதனிலுரைப்போ மாண்டேகேளீர். --தந். 

பாடல் எண்:- 44
சத்தியுநான்காணும்- சிவசிவ
சாம்பவமூர்த்தியெனு நான்காணும்
புத்தியிலதிதவன் காண்- சிவசிவ
புவனமதில்புகழ் திருவள்ளுவன் காண்
சித்தியிலதிதவன்காண்- சிவசிவ
சிங்காதனத்திலிருந் தெங்கெங்குமாய்
அத்திமுதலெறும்புகடை யாவர்களும்
அற்புதமெய்ஞ்ஞான வெட்டியாண்டே கேளீர். --தந். 

பாடல் எண்:- 45
வித்தையிலதிதமெந்தன்- விளங்குந்திரு
வேதாந்தசாரமுண்டு மேதினியில்வாழ்
எத்திசையெல்லாம்புகழும்- இரவிமதி
யேகாக்ஷரத்தைக்கண்டு சாகாமல்நான்
பத்தியில்முத்திதரும்- உலகமதில்
பறைநூலறிந்த சாம்புவன் காணும்
முத்தியுமெய்ஞ்ஞானநெறி- முக்கண்ணுடைய
மும்மூர்த்தியானவர்கள் தம்மூலத்தினால். --தந். 

பாடல் எண்:- 46
உதிரமுந்திரண்டதெங்கே- நாதமதி
லோடியேதான்விந்ததும் பாய்ந்ததெங்கே
மதியொளிரவியுமெங்கே- அமிர்தரச
வாரிதியுமான வரலாறுமெங்கே
சதிரமும்பிறந்ததெங்கே- உலகுதனில்
சாஸ்திரியாசாரிகளே தானுரைப்பீர்காண்
அதிதவேதங்களோதும்- சூரியசந்திரர் 
அறிவரிருந்தவர்க ளாண்மையுரைப்பீர். --தந். 

பாடல் எண்:- 47
கருவதுந்தரித்ததெங்கே- சிவசிவ
காயமாயுதித்தவந்தக் கருத்துமெங்கே
அருவுருவானதெங்கே- அண்டபிண்டங்க
ளாதியுமந்தமுங் கூடியமைந்ததெங்கே
உருவடி நடுவுமெங்கே- ஓங்காரமெனும்
உடலுயிரெ டுத்தவிதவுகமையெங்கே
மருவிய நால்வேதஞ்சொலும்- மதிகெட்ட
மாந்தர்களிதையறிந்து வகுத்துரைப்பீர். --தந். 

பாடல் எண்:- 48
தீர்த்தமுமாடிக்கொள்வீர்- தெளிந்தவர்போல்
செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர்
யாத்திரைதீர்த்தங்களாடி- நதிகள் தோறும்
அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர்
மாற்றியேபிறப்பமென்று- பொய்ப்பிரட்டு
வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே
பாத்திராபாத்திரமறியா- பாவிகள் தான்
பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான். --தந்

பாடல் எண்:- 49
அண்டபிண்டம்பிறந்ததெங்கே- சிவசிவ
அந்தணர்முனிவர்வந் துதித்ததெங்கே
பிண்டம்பலவுயிரும்வந்து- பிறந்தவகை
பிரபந்தமிதையறிந்து பேசுவீர்காண்
மண்டலமும்மண்டலஞ்சூழுங்- கதிர்மதியும்
வன்னியும்பிறந்ததெங்கே வானுமெங்கே
விண்டபொருளண்டருங்காணார்- வேதியர்களே
விஸ்வரூபமறிந்து விளக்குவீரே. --தந்

பாடல் எண்:- 50
சாஸ்திரம்பிறந்ததெங்கே- சிவசிவ
சாதியினால் வகைகளுமானதெங்கே
கோத்திரம்வகுத்ததெங்கே- சிவசிவ
குருவுடன்சீஷனும் வந்துதித்ததெங்கே
போற்றிடுஞ்சற்குருவுமெங்கே- பொய்க்குருவினால்
பூசையனுஷ்டான முறைப்பொருளுமெங்கே
சோற்றிலெய்துங்கல்லறியா- சுணங்கர்களே
சொர்னமலரென்னமய மன்னமலர்காண். --தந். 

பாடல் எண்:- 51
அண்டபிண்டபுவனத்துக்கும்- சந்திரனொளி
ஆதித்தவருருவு மானதெங்கே
சண்டப்பிரசண்டமதாய்- மந்திரமோதுஞ்
சவுங்கலேதானறியாய்ச் சாற்றிடுவீர்காண்
உண்டதோருணவறியார்- உவரசத்தின்
னுப்புவினுவரகற்றி யுண்டுமறியார்
கண்டபொருள்விண்டதறியார்- கல்லுப்புவந்த
காரணத்தைக்கண்டறியாக் கர்மிகளேகேள். --தந். 

பாடல் எண்:- 52
நாதவிந்துதானறிய- சிவசிவ
நடுவனைச்சுடரதுவுந் தாண்டியப்பால்
போதரவாயுடலெடுத்த தத்துவத்தின்
புதுமையைச் சொல்லுகிறேனாண்டேயே கேளீர் 
மாதர்கள்சையோனிதனிலும்- விந்துதித்த
மார்க்கமிடவாலெடுத்தவாறறிந்திடீர்
ஏதெனவென்றேவிளங்க- இப்புவிதனி
லிந்திரியமாதவிடா யினமதுகாண். --தந். 

பாடல் எண்:- 53
தந்தையுந்தாயுங்கூடி- இருவருஞ்
சருவியேரதிகேளியாடையிலே
விந்தையில்யான்பிறந்த- சரித்திரத்தை
விளம்புவேனாண்டேகேளிந்த மேதினிதனிலும்
உந்தியின்கமலமதி- லுதித்தவித
முற்பனமாகியதோர் கற்பனைசொல்வேன்
சந்தையங்கள் தீர்த்துவிடும்- மாதாபிதாவின்
சங்கைகளறியவிந்நூல் சாக்ஷியிதுகாண். --தந். 

பாடல் எண்:- 54 (விருத்தம்)
சோதிமதி சுடரொளியாய்த் தரித்த வாறுஞ்
சுடருருவாய் நாதவிந்து தோன்று மாறும்
நீதியில்லாப் பாழ்வீட்டி னிலைத்த வாறும்
நெல்லியதின் கனியதுபோல் திரண்ட வாறும்
கோதிலாக் கனியெனவே பழுத்த வாறுங்
குழவியெனப் புவிதனிலே பிறந்த வாறும்
ஆதியிலே கருவூரில் குடியி ருந்து
அறிவாலே புவியில்வந் தமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 55
தன்னையினி தானறியார் தலமுங் காணார்
தான்பிறந்த சரித்திரமுந் தடமுங் காணார்
இன்னதென்று வேதமறை வழியுங் காணா
ரிடும்பரெல்லாம் வாய்மதத்தா லிகழ்ச்சி சொல்வார்
பின்னையொரு பொருளறியார் தவத்தைக் காணார்
பிதற்றுகின்ற பேயர்கள்தான் பெருமை பேசி
என்னைத்தான் பறையனென்று தள்ளி னார்க
ளென்பிறப்பைச் சபைதனிலே யியம்புவேனே. 

பாடல் எண்:- 56
தில்லையெனு மம்பலமாங் கமல பீடஞ்
சிறந்தவிந்து நாதமதில் செனித்த வாறும்
வல்லவர்கள் போற்றுந்திரு மண்ட பத்தில்
வழிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
சொல்லரிய முக்கோண வீடுந் தாண்டிச்
சோதிமதி நடுவணைமுப் பாழுந் தாண்டி
எல்லையெனு மூலமதில் நாத விந்து
இன்பமுட னுதித்தவகை யினிசொல் வேனே. 

பாடல் எண்:- 57
மடைதிறந்து நாதவிந்து வந்த வாறு
மாறியிரு கலைபிரிந்து வளர்ந்த வாறும்
திடமுடனே பதின்மூன்றாம் கோட்டின் மேலுஞ்
செங்கநதி போலவும்வந் துதித்த வாறும்
உடலெடுத்து ஆவியதி லுதித்த வாறு
மூமையென்ற வெழுத்ததனி லியர்ந்த வாறும்
இடைநடுவே யெனைப்பறைய னென்ற வாறு
மென்னுடலே யெடுத்தவகை யினஞ்சொல் வேனே. 

பாடல் எண்:- 58
ஆதியிலே கருவூரு நாட்டுக் குள்ளே
அம்பரமாஞ் சிற்பரத்துப் பெரும்பா ழுள்ளே
வீதியிலே சிறந்தசிவ நாத விந்து
வெளிகடந்து வாயிரத்தெட் டிதழிற் பொங்கி
சோதியிலுஞ் சுழிமுனையாய் தோய்ந்த பின்பு
சுக்கிலமுஞ் சுரோணிதத்தா லெடுத்த பாண்டம்
சாதியிலு மெனைப்பறைய னென்றே சொல்லுஞ்
சண்டாளர்க் கிந்நூலைச் சாற்று வேனே. 

பாடல் எண்:- 59
கால்கரமும் பாதமுத லான வாறுங்
கணுவிரலு நகஞ்சதையுந் தரித்த வாறும்
விலாக்கொடிதா னெலும்புநிணம் வகுத்த வாறு
மிரதமொடு மார்புகழுத் தான வாறுந்
தோலான துடைவயிறு தொக்கின் வாறுந்
தொகுத்தநரம் பதுவுஞ்சடஞ் சூட்டு மாறும்
மாலான மாதர்கருக் குழியிற் சேர்ந்த
வயணமிதை யின்னதென்று வகுப்பே னாண்டே. 

பாடல் எண்:- 60
நாடிநரம் பதுவுதிரம் நயந்த வாறும்
நலமான தசவாய்வுசெனித்த வாறும்
நீடியதோ ரெலும்புகளு நிகழ்ந்த வாறும்
நிலையான கருவியெல்லாந் தனித்த வாறும்
கூடியதோர் குய்யம்வந் துதித்த வாறும்
குறிப்பறிய பஞ்சகர்த்தாள் குடில வாறும்
குடியதோர் மார்புகண்கள் வந்த வாறுஞ்
சொல்லுகிறேன் விபரமினி யாண்டே கேளே.

பாடல் எண்:- 61
சிறுகுடலுந் தொந்திவயி றான வாறுஞ்
சிறந்தபொறி யதிற்கலந்து நின்ற வாறும்
பெருங்குடலு மொருபுறமாய்ப் பிரிந்த வாறும்
பேர்பெரிய வீரல்குலை சமைந்த வாறும்
மறுமடலா யீரல்நுரை யிரண்டுங் கூடி
வளர்ந்ததுவுஞ் சாதகமாய் மகிழ்ந்த வாறும்
உருவுடனே செவிநாசி யுதடு நாக்கு
வுகமையுட னெடுத்தவகை யுரைப்பே னாண்டே. 

( த ரு )
தந்தன தன தனனா-தான தன
தந்தன தன தன-தான தனனா. 

பாடல் எண்:- 62
தந்தையுடனேயெனது- தாயுமிருவர்
சரசவுல்லாசலீலை- யாடையிலே
மந்திரமதாகவிந்து- நாதமுங்கூடி
வருகிறவழிசொல்வே னாண்டேயிதுகாண்
இந்திரியசாதிலிங்க முலகுக்கெல்லா
மேகபர நாதவிந்து யாகமதாகி
வந்தவிதங்கோ சபீச- பிரபஞ்சமதாய்
வாய்த்தவிதமுலகில் வகுத்தனர்காண். --தந். 

பாடல் எண்:- 63
ஆவிடையார்கோவிலிலே- யமைத்தகுறி
ஆதரவாகவேசேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து- வெகுவிசித
விற்பனையறியவொரு கற்பனைசொல்வேன்
பாவிகளிதையறியார்- கல்லுகள் தனில்
பாவனையொப்பாகவுமே தாவிதஞ்செய்தார் 
ஆவியென்றுமறியாமல்- செலவழிய
ஆத்துமலிங்கமதனை பார்த்துணராமல். --தந்.

பாடல் எண்:- 64
வன்னியும்வாயுவுங்கூடி உயர்கின்ற
மண்டபமார்க்கத்தின் வீதிதனிலே
உன்னதமாய் நாதவிந்து- உறவாடியுமே
ஒருவழியாகவந் துதித்ததுகாண்
முன்னிலையாய்ச்சுடரதனில்- மூலவன்னி
முப்பொருளுஞ்சேர்ந்துவொரு வுற்பனமதாய்ச்
சென்னிதனில்வளரியல்பாம்- நாதமெனுஞ்
சித்திரபூஞ்சாவடியில் மத்திபத்திலே. --தந். 

பாடல் எண்:- 65
வருகிறவழியதனில்- நவரத்ன
மண்டபத்துக்குள்ள வச்சிரப்பையதனில்
பெருகிய நாதமது- சதாசிவத்தின்
பிரணவமூலப்பிரகாசப் பேரொளியினில்
உருவியமலர்க்கமலம்- போற்றியருள்
உற்பனமருள் தருங் கற்பகத்தில்வாழ்
அருள்வந்தெய்திடினுந் திருவடியதின்
அனுதினம்பூசித்து மிகவடிபணிந்தேன். --தந். 

பாடல் எண்:- 66
போற்றியமண்டலம்விட்டு மறையவர்தன்
புகழுஞ்சிங்காரமெனும் புரவிவிட்டு
சாற்றியமயேஸ்பரத்தில்- சம்பிரமத்துடன்
சத்திரத்தில்வந்து சித்திரசாவடியினில்
காத்திருந்தேன் திருநடனம்- ரத்னமணி
கனகசபையைக்கண்டு நான்மகிழ்ந்தேன்
பூத்தசெங்கமலமலர்- இங்கிதநாதப்
பொக்கிஷத்தைக் கண்டறிந்துயான் மகிழ்ந்தேன் காண். --தந். 

பாடல் எண்:- 67
தெண்டனிட்டுமண்டபம்விட்டுக்- கருவூர்தனில்
சித்திரப்பூஞ்சாவடிதன் முகப்பும்விட்டு
தொண்டர்கள்பணி ருத்திரன்- திருவடியைத்
தொழுதனுதினம்பணிந்து துதித்துநின்றேன்
அண்டர்கள் போற்றுகின்ற- பிரகாசவொளி
அவ்விடத்திலேமனதை யடக்கியேகாண்
கண்டுகளிகூர்ந்துமிக- மதியின்மலர்
கங்கையத்தின் பங்கயக்கண் சிங்காதனத்தில். --தந்.  

பாடல் எண்:- 68
நின்றுபதியம்பரம்விட்டு- நிலைபிசகா
நினைவுக்கரியதொரு பொறிகடந்து
வேண்டியவரமருளும்- திருமால்திரு
மெல்லடி பணிந்து பதம்வணங்கியபின்
சென்றுமூலவாசியைக்கொண்டு- இராஜயோகந்
தேவப்பிரகாசமூல கேசரத்தில்யான்
ஒன்றாதவநெறிபிசகா- ரேசிக்கவிருள்
ஓடியேமூலாக்கினி நாடிவணங்க. --தந். 

பாடல் எண்:- 69
வணங்கியப்பதிகடந்து- திருநடன
மாடியகூத்தனுஞ் சபையதுகடந்து
இணங்கியபிர்மருத்திரன்- கமலமலர்
இணையடிதொழுதுமே யான்பணிந்தேன்
குணமவரதிசயமா- மென்னாலுரைக்கக்
கூடுமோகோடானுகோடி மேடானமேட்டி
மணம்விசிதமலர்பொழிய- மதிரவியின்
மாமதுரபூபதிகோமயங்காமல். --தந். 

பாடல் எண்:- 70
கொண்டபதிமண்டபம்விட்டுக்- கருவிகளின்
கூடியதிருமுகப்பூஞ் சோலையிலே
அண்டர்களருள்போற்றுங்- கணபதியின்
அடியினருள்துதித்து அடியில்வந்தேன்
குண்டலிகமலமலர்- மேன்மேலவர் தன்
கோபுர சித்திரமதிலின் வாசல்விட்டு
மண்டலஞ்சூழுங்கதிர்- வலமிடைபின்
மலரடிதொழுதுயான் வணங்கிவந்தேன். --தந். 

பாடல் எண்:- 71
வந்துதிருமூலத்திலும்- பானுவிருக்கும்
வச்சிரவளர்சதுஷ்கோண வாசலிலுஞ்
சுந்தரவிந்ததிலும்வந்து- சினேகமது
சோதித்துக்கலந்துற வாடிக்கொண்டே
இந்திரபதவிகளெனவே- என்னாண்டையேகேள்
இங்கிதநாதசங்கித மங்களமதாய்ச்
சந்திரபுட்கரணிவரும்- நந்திப்பிரகாசந்
தாரையதுவேமுழங்குஞ் சாரையைக்கண்டேன். --தந். 

பாடல் எண்:- 72
தூண்டியே நாதபரி- பூரணத்தின்
சுகந்தமலர்க்கமலந் துதித்துக்கொண்டேன்
பூண்டுபொற்பதம் பணிந்தேன்- என்னாண்டையேகேள்
பூரகத்தினிலும்வந்து போற்றிசெய்தேன்
வேண்டியமதிமலர்கொண்- டாராதனைகள்
மிகுத்தவம்பிகையோமம் விதரணையாய்க்
காண்டிபமென்றாலறிய- வாசியைக்கொண்டு
கருத்திலிருத்திக்கண்ட தாரையூதினேனே. --தந். 

பாடல் எண்:- 73
வந்துதச நாதவிந்து- சுழிமுனையின்
வாசலின்கருக்குழிதன் வீட்டுக்குள்ளே
தந்திரமதாகவேதான்- கருவதனில்
சங்கற்பமில்லாமல் கலந்துறைந்ததுகாண்
விந்தையெனு நாதவிந்து- சையோகந்தனில்
விற்பனம்போலவுமெய்து முற்பனமதாய்ச்
சுந்தரசுக்கிலசுரோணித- மிரண்டுங்கூடிச்
சொப்பனம்போலுமுதித்த சூக்ஷமிதுகாண். --தந். 

(வெண்பா)
பாடல் எண்:- 74 
உள்ளொளியாஞ் செந்தணலிலுற்பனமாஞ் சொப்பனத்தில்
வள்ள லெனுநாத விந்துகாண்- தெள்ளியதோர்
கத்தரிக்கோல் மாறல் கனக சபைவீட்டில்
வித்தாய் முளைத்ததுகாண் விந்து. 

பாடல் எண்:- 75
நகாரம காரமுட னாடுசிங் காரமதாய்
வகாரமிரு காலாய் வளர்ந்ததுகாண்- யகாரமது
அஞ்சறி வாய்நின்ற பஞ்சப் பெரும்பூத
மஞ்சும் வளர்ந்ததுகா ணாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 76
ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி
சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக்
காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில்
பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண். 

பாடல் எண்:- 77
ஆதிக் கருவூரி லங்கே குடியிருந்து
நீதியந்த நாட்டில்வந்து நெஞ்சறிந்து நேசமதாய்ச்
சாதிகுலந் தவிர்ந்து தலமுஞ்சுழி வீடுவிட்டுச்
சோதிமதி நின்றிலங்குஞ் சுடர்வீட்டில் வந்திருந்தே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 78
விந்தெனவு நாதம்வந்த வாறுஞ் சொன்னேன்
வெளிகடந்து வந்தவகை விபரஞ் சொன்னேன்
அந்தவிடை பிங்கலையில் மாறல் சொன்னே
னதுகடந்து சுழிமுனையை யறியச் சொன்னேன்
விந்தைமய லாசையது வொழியச் சொன்னேன்
விட்டகுறை தொட்டகுறை விபரஞ் சொன்னேன்
அந்ததிசை யதிசயமு மகற்றச் சொன்னே
னருள்சொன்னேன் பொருள் சொன்னே னறிவுள்ளோர்க்கே. 

பாடல் எண்:- 79
ஓங்கார சத்தமுதித் துணர்ந்து நிற்கு
முன்னியதோர் நகாரமதும் வளர்ந்து நிற்கும்
நீங்காத லகாரமது முயர்ந்து நிற்கு
நிலையான சிகாரமது மேலே நிற்கும்
பாங்கான அகாரமதைக் காத்து நிற்கும்
பதிவான வுகாரமது மேலே நிற்கும்
ஆங்கார மானவஞ்சு பஞ்ச பூத
மப்படியே யஞ்சுருவா யாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 80
சத்தமது பிருதிவி மேலே நிற்குந்
தாங்கிநின்ற பரிசமது வப்பு மேலாம்
பத்திதரும் ரூபமது சிகார மேலாம்
பாங்கான ரசமதுவும் வகார மேலாம்
சித்தமகிழ்ந் ததுவுமொரு யகார மேலாஞ்
சீர்பெறவே காயமெனுந் திரண்டே யாச்சு
வெற்றிதருங் கவியொரு தொண்ணூற் றாறு
விரைந்துறைந்தே யுதிரமதில் பிறந்த தாண்டே. 

பாடல் எண்:- 81
நட்டுவைத்த வெலும்புகால் துண்டு நாலு
நலமான கையெலும்பு துண்டு நாலு
ஒட்டிவைத்த பழுவெலும்பு முப்பத் திரண்டு
வுன்னதமாந் தண்டுபதி னாறு கண்டம்
நட்டுவைத்த வெலும்புமுச்சா ணதற்கு மேலே
வளமான நுறுக்கெலும்பு வாயி ரந்தான்
சுட்டலைந்த பாண்டமீ தெடுத்த நேர்மை
தொகையெல்லாஞ் சபைதனிலே சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 82
வீறான கையெலும்பு பிருதிவியின் கூறாம்
விதமான வுண்ணீரு பிரமன் கூறாம்
பேறான தசநாடி வாய்வு பத்தும்
பலமான நரம்பெல்லா மாலின் கூறாம்
கூறான வுதிரமெல்லாஞ் சத்தி கூறாங்
கூடி நின்ற வெலும்பெல்லாம் ருத்ரன் கூறாம்
சீரான நிணத்தோடு மச்சை சவ்வுஞ்
சிறந்தருளு மயேஸ்பரத்தின் கூறா மாண்டே. 

பாடல் எண்:- 83
ஆதார மானபர நாத விந்து
வாதிசதா சிவன் கூறா மாண்டே கேளீர் 
பாதார முடியளவும் கணக்கதாகப்
பாலித்து விபரமதாய்ப் பகர யானும்
வேதாக மத்தில்நின்று நடனஞ் செய்யும்
விந்துநாதத் தின்செயல் விபரமாக
நாதாக்கள் கமலபதந் துதித்து யானு
நவிலவுமே யான்கண்ட நடத்தை யாண்டே. 

பாடல் எண்:- 84
முத்திதரு மூலத்தி லக்ஷரமே நாலு
முதலான சுவாதிஷ்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தும் பத்து
பாங்கான வனாகதத்தி லெழுத்தீ ராறாம்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாஞ்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாகச்
சார்வாகு மைம்பத்தோ ரக்ஷரங்கா ளாண்டே. 

பாடல் எண்:- 85
மும்மலமுந் தரித்தவொரு வாச லொன்று
முடிகாணா லிங்கமொரு வாச லொன்று
நன்மையறு சுவையறிந்த வாச லொன்று 
நலமான கேள்விகொண்ட வாச லொன்று 
வன்மையுள்ள வாசமறி வாசல் ரெண்டு
வளமான ரூபமறி வாசல் ரெண்டு
அன்னமெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யறிவாலே யெடுத்ததிந்தக் காய மாண்டே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 86
வட்டமதி லேறிவளர் மாமதியைத் தாண்டியொரு
திட்டவளை போட்டுநவ சித்திரமணி வாசலிலே
முட்டிநின்ற கம்பமுனை முதற்சுழி வீட்டினிலே
ஒட்டியது வளர்ந்து வொருமலராப் பூத்ததுகாண். 

பாடல் எண்:- 87
பூவிருக்கப் பிஞ்சாகிப் பூவிலரும் பாகியுமே
மாவிருக்கத் தேனாகி வந்து சிறுவீட்டில்
மேவிருக்க வம்பரத்தே வேரோடித் தூறாகி
யாருவருக்கு மிங்கிதமா யரும்பாகி நின்றதுகாண். 

( வெண்பா )
பாடல் எண்:- 88
வடிவுகொண்ட வள்ளையுமாய் மந்திரஞ்சேர் நாதமுமாய்
முடிவுகண்டு மூல முளைத்ததுகாண்- வடிவதுவாய்க்
கால்வாங்கி வட்டமிட்டுக் கனகத் திருவீட்டில்
மேல்வாங்கி நின்றதுகாண் விந்து. 

( விருத்தம் )
பாடல் எண்:- 89
மாலயனும் பிரகாச மதிய தாகும்
வாழும்வளர் ருத்திரனு முருவ தாகும்
சேலான மயேஸ்வரனு முணுர்வ தாகுஞ்
செப்பரிய சதாசிவனுங் குருவ தாகும்
காலான நாடியொரு கைகா லாகுங்
கதிர்மதியால் வளர்ந்தசத்தி கருவதாகும்
மேலான விழிமடவா ளுந்திக் குள்ளே
விளைகின்ற கருவியெல்லாம் விதிப்பே னாண்டே. 

பாடல் எண்:- 90
எட்டுத்தூ ணாட்டியொரு விட்டம் போட்டு 
வெழுந்ததின்மே லருகுவளை யொன்றாய்க் கூட்டி
மட்டற்ற மோட்டின்வளை யொன்று நாட்டி
வளமான துண்டும்வளை ரெண்டும் போட்டுக்
கட்டாகக் கையகத்தில் வளைத்துக் கொண்டு
கனமான வரிச்சல்விலாக் கொடியு மாக்கீ
முட்டமுட்ட நின்றகம் பத்து மேலாய் 
முகப்புடனே சிங்கார வீடு மாச்சே. 

பாடல் எண்:- 91
பத்தியுடன் விரலுமிரு பதுவே யாச்சு
பதிந்தநக மதுவுமப் படியே யாச்சு
வெற்றியுள்ள ரோமமது மனேக மாச்சு
விதமான வீடுமெண்சா ணதுவே யாச்சு
அத்திபுர மதுவாச்சு வெளியு மாச்சு
வங்குலமுந் தொண்ணூற்றா றதிலே யாச்சு
சத்திவா லாம்பிகைப்பெண் ணாலே யாச்சு 
சார்வான கருவியெல்லா மமைந்த தாண்டே. 

( வெண்பா )
பாடல் எண்:- 92
அங்குலமுந் தத்துவமு மதிலே வளர்ந்தவகை
இங்கிதமா யானுரைப்பே னீசனே- எங்கள்குலம்
மந்துதந்த மூலம் வளர்ந்தவுயிர் போம்பொழுது
வெந்துதந்த மூல வெளி. 

( கலித்துறை )
பாடல் எண்:- 93
கதிரே சிறந்து கார்கொண்ட வட்டக் கனகிரிமேல்
மதுரம் பொழிந்து வழியே நடந்துயர் வாசலிலே
உதிரந் திரண்டுவுடலாகி யேவந்த வுண்மையெல்லாம்
சதிரம் பிறந்த விபரஞ்ச பைநின்று சாற்றுவனே. 

பாடல் எண்:- 94
நாடித் திரிந்துயர் நாதாந்த விந்துள நாட்டத்திலே
கூடிக் கலைந்து விருகாலை வாங்கிக் கொடிமுடிமேல்
ஆடித் திரிந்து வளவற்று நின்ற வறையதுக்கு
ளோடிக் கலந்து வொருமல ராகி யுதித்ததுவே. 

( விருத்தம் )
பாடல் எண்:- 95
நாற்சதுர மேலும்வளர் கணேச னுக்கு
நல்லருளைத் தந்தருளும் பிரமா வுக்கும்
பாற்கடலிற் பள்ளிக்கொண்ட திருமா லுக்கும்
பன்னிரண்டின் மேலுநின்ற ருத்தி ரற்கும்
மேற்சதுர மானமயேஸ் பரனா ருக்கும்
விந்துவதி னின்றிலங்குஞ் சதாசி வற்கும்
தீர்க்கமுட னவரவர்க்குக் கட்டும் வீடு
செப்புகிறேன் ஜெகச்சோதி செயல்தா னாண்டே. 

பாடல் எண்:- 96
நாதமென்றுஞ் செகமெல்லா நின்ற நாத
நல்வினையுந் தீவினையு மாண்ட மூர்த்தி 
வேதமென்ற கடலுக்கு மெட்டா நின்ற
வெளிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
பாதமடி முடியாகி நின்ற சோதி
பதினாலு லோகமதுக் கொருவ னான
சூதமது வானதிரு மூலந் தன்னில்
சுரூபமாய் நின்றவகை சொல்வே னாண்டே. 

( தரு )
பாடல் எண்:- 97
வீடுகட்டிக்கொண்டேன் நானொரு- வீடுகட்டிக்கொண்டேன்
வீடுகட்டினேன் விண்ணோடுமண்ணையுங் கூறதாச்சுக் குறியிது
ரெண்டினால் பாடுபட்டுச்சலத்தைத் தெளித்துடன்
பற்றிநெருப்பை யுங்காற்றையுஞ் சேர்த்துமே
கூடுண்டான குறிமண்ணுந் தண்ணீருங்
கூட்டிப்பி சைந்துறவாடி யந்தமுடன்
நீடுலகும்புக ழாவியதுக்குள் எண்சாணுடல்
நேர்த்தியைப் பார்த்திரும்- வீடு. 

பாடல் எண்:- 98
தச்சமுழங் கொண்டிரு காலை நாட்டிச்
சதிராக வட்டப் பலகையுஞ் சேர்த்து
உச்சிதமாக வொருமர நாட்டியே
உள்ளே பழுவரிச்சல்களுங் கோத்துடன்
முச்சுடர் வன்னிக்குழை யொன்று நாட்டியே
முட்டுத்துண்டு முனையது வாகிப்பின்
மச்சூடுகட்ட வகையறி யாதாண்டே
மகிழ்ந்துட னாதாரவாசியைக் கொண்டுமே- வீடு. 

பாடல் எண்:- 99
ஒட்டுப்பலகையு முட்டுபலகையும்
ஓங்கியசிங்கார மோட்டுவளையுடன்
வட்டத்திருகாணி விட்டத்தின்மேல்நின்று 
மாயாமல்கைமரஞ் சாயாமல்நாட்டியே
முட்டுக்கால்வட்ட முக்காணியைப்பூட்டி
முறியாமல்தச்சு முயற்சியதாகவும்
நட்டுக்காலாணிகள் முட்டியேதாங்கிட
நாதவிந்தாலும் வேதாந்தவீடாச்சுது- வீடு. 

பாடல் எண்:- 100
கைமர நாலுகணக்காகச் சேர்த்துக்
காலாணிகொண்டு மேலாணிபூட்டியே
மெய்யுறவாகும்போதிக் கைரெண்டூட்டி
வேடிக்கைநாலு கொடியுந்திருப்பியே
துய்யநடுமூலக் கம்பமதாகிய
சூக்ஷக்கால்நாட்டிச் சுகாதீதமாகவும்
மையத்திலேசுருள் மேருவைக்கூட்டிப்பின்
வச்சிரப்பலகை ரெண்டச்சுழல்மூட்டியே- வீடு.

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900